Tuesday, April 26, 2016

கோட்டை மலை கருப்பசாமி

களஅனுபவம்


ஆயர் இனத்தவர்களைப் பற்றி என்னுடைய முனைவர் பட்டப் பேற்றிற்குக் களஆய்வு சென்றுவந்த நாள்களில் ஒருநாளிரவு அனுபவத்தை மட்டும் இங்குக் குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன். மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு எல்லாம் பெருவாரியாக கால்நடைகள் வைத்திருக்கும் ஆயர்களைத் தேடி எனது பயணம் அமைந்தது. இங்குத்தான் செல்லவேண்டும் என்ற ஒரு குறிக்கோள் இல்லாமல் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் செல்ல சித்தமாயிருந்தேன். மதுரையிலிருந்து மானாமதுரை வழியாக புலிகுளம் மாங்காத்தான் என்ற சிற்றூரில் ஐந்து நாள்களும் அதைத்தொடர்ந்து விருது நகர் கூமாபட்டிக்குச் சென்று நான்கு நாள்களும் களப்பணியில் இருந்தேன். பிறகு இராஜபாளையத்திற்கு அடுத்த சேத்தூருக்குச் சென்று ஆய்வில் ஈடுபட்டேன்.

சேத்தூரில், நண்பனின் தந்தை மூலம் குருசாமி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவரது கிடையில் 120க்கும் அதிகமான ஆடுகள் இருந்தன. நான் சென்று சேர்ந்தபோது, ஆடுகளுக்கெல்லாம் தடுப்பூசிப் போட்டுக்கொண்டிருந்தார்கள். குருசாமியுடன் அவரது உறவினர்கள் மூவர் ஆடுகளைப் பிடித்துக்கொடுத்தும், தடுப்பூசிப் போட்ட ஆடுகளுக்குக் குறிகளிட்டும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் பேசிக்கொண்டே தடுப்பூசியில் மருந்து நிரப்பிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். இந்த வேலை முடிந்ததும் அவரவர் கொண்டுவந்திருந்த உணவைப் பகிர்ந்து சாப்பிட்டோம். பின்பு, இருவர் மட்டும் ஆடுகளைப் பற்றிக்கொண்டு மேய்ச்சலுக்குச் செல்ல, நான் அவர்களுடனேயே மேய்ச்சலுக்குப் புறப்பட்டேன்.

சேத்தூரின் மேற்கே, மலைத் தொடர் ஒன்று மிகக் கம்பீரமான காட்சியளிக்கிறது. மலைகள் எப்போதுமே ஆச்சரியக்குறிகள்தாம்.
மிக உயர்ந்து நிற்கும் அவை, கீழே பூச்சிகள் போல ஊரும் நம்மைப் பார்த்து எகத்தாளம் செய்வதாய் எப்போதும் எண்ணிக்கொள்வேன். மலைகள் எனக்கு விருப்பமான ஒன்று. இந்த ஆடுகளை மலையடிவாரத்திற்கு ஓட்டிச் சென்று மேய்க்க விடுவதாகத் திட்டம். தற்போது ஆடுகள் வழியில் காணும் இலைதழைகளை மேலோட்டமாக மேய்ந்துகொண்டே ஓட்டமும் நடையுமாக எங்களுக்கு முன் அந்த மலையை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருந்தன. மலைகள் என்றால் அவற்றிற்கும் கொள்ளைப் பிரியம் போல. 
 
வனப்பகுதியில் கால்நடைகளை மேய்க்க அனுமதிக்கிடையாது. தற்போது கால்நடைகள் குறைந்ததற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. மேய்ச்சலுக்கு இடமில்லாமல் போகவே, அடிமாட்டு விலைக்குக் கேரளாவிற்குப் பெருவாரியான மாடுகளும் ஆடுகளும் ஏற்றுமதியாகின்றன. கால்நடைகளை வனப்பகுதிகளில் மேயவிட்டால் வனவிலங்குகளுக்கு நோய்கள் பரவுகின்றன என்பது வனத்துறையினர் குற்றச்சாட்டு. ஆனால், இவர்கள் சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுவதாகவும். எங்களால் அது வெளியே தெரிந்துவிடும் என்றும் எனவேதான் தங்களை வனப்பகுதிக்குள் அனுமதிப்பதில்லை என்பது இவர்களது குற்றச்சாட்டாகும்.

நாங்கள் ஓட்டிச் சென்ற ஆடுகளை மிக அமைதியாக செலுத்தினோம். அதிர்ந்து ஆடுகளை மிரட்டவில்லை. மெல்லிய விசில் சத்தமும், அடக்கப்பட்ட அதட்டல்களுமே ஆடுகளை வழிநடத்தின. வனப்பகுதிகளில் ஜீப் செல்லுமளவிற்கு அமைக்கப்பட்டுள்ள பாதைகளைத் தவிர்த்து ஆடுகளைச் செலுத்திக்கொண்டே சென்றோம். காடு அழகாயிருந்தது. வரண்ட பகுதிகளில் ஆடு மேய்ப்பதோ, மாடு மேய்ப்பதோ அவ்வளவு இலகுவாயில்லை.
ஆனால் இங்கு ஒரு கடினமுமில்லை. காட்டில் வெயிலே தெரியவில்லை. ஆடுகள் நின்று மேய்கின்றன. மரக்கிளைகளிலும் கொம்புகளிலும் அமர்ந்துகொண்டு மிக அமைதியாக ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தோம். நேரம் போவதே தெரியாமல் இருந்தது. அப்படி இப்படியென 12 கி.மீட்டருக்கு மேல் காட்டில் ஆடுகளைச் செலுத்தினோம். ஆனால் எப்போது மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்துடனேயே ஓட்டிச் சென்றோம். திடீரென வரும் வனத்துறை அதிகாரிகள், கண்டால் உடன் அழைத்துச் சென்றுவிடுவார்களாம். 10000ரூ முதல் அபராதம் கட்டித்தான் மீட்டுவரமுடியுமாம். சிலசமயம் அங்கேயே காசுகொடுத்து கரெக்ட் ஆகும் அதிகாரிகளும் உண்டு. அப்படிபட்டவர்கள் வாழட்டும்! மாலையில் மலைகளுக்கிடையே கதிரவன் தன்னை மறைத்துக்கொள்ளும் வேளையில் ஆடுகளைத் திசைமாற்றிப் பற்றிக்கொண்டு காட்டைவிட்டு வெளியேறினோம். காலையில் பார்த்ததை விட ஆடுகளின் வயிறு புடைத்திருந்தன. ஆட்டை ஓட்டிவந்த இருவருக்கும் மகிழ்ச்சி! ஆடுகளை மேயவிட்டுக்கொண்டே கிடைக்கு வந்து சேர இரவு 8.30 மணிக்கு மேலாகிவிட்டது

ஆடுகளை கிடையில் அமர்த்தினோம். அதன்பிறகுதான் பெரிய பாசப்போராட்டமே இருந்தது. காலையிலிருந்து பெரிய பெரிய கூடைகளில் அடைக்கப்பட்டிருந்த இளம் மறிகள் ஓயாமல் குரல் கொடுத்தன. இதற்கு மறுபக்கத்தில் தாய் ஆடுகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்தன. குட்டிகளிடம் எழும்பிய சத்தம், தாய் ஆடுகளிடம் அடங்கி, அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு, குட்டிகளிடம் அடங்கியது. ஆடுகளைக் கிடையில் அமர்த்தியவுடன் குட்டிகளைத் திறந்துவிட்டனர். ஒரே ஓட்டம்தான்… வழியில் யார் இருந்தாலும் அவர்கள்தாம் பொறுப்பு. ஆடுகளிடம் குட்டிகள் பால் குடிக்கும் அழகு, சொல்லமறந்த கதைதான்.

என்னுடன் இருந்த இருவரில் ஒருவர் மட்டும் இரவில் கிடைக்குக் காவலாக இருக்க, மற்றொருவர் சென்றுவிட்டார். கிடை இருத்தியிருந்த தென்னந்தோப்பிற்குப் பக்கத்து தோப்பில் மின்னொளி இருந்ததினால் அங்குச் சென்று, காலையில் கொண்டுவந்திருந்த உணவை இருவரும் சாப்பிட்டோம். ஏறக்குறைய 12 கி.மீட்டருக்கு மேல் நடந்திருந்த நான், மிகக் களைப்படைந்திருந்தேன். தொடர்ந்து சரியான உறக்கமில்லை. இன்று களைப்பும் சேர்ந்துகொள்ளவே, கடுமையாக தூக்கம் வந்துவிட்டது. அவரிடம் சொல்லிவிட்டு, அங்கேயே ஒரு மூளையில் கொண்டுவந்திருந்த போர்வையில் ஐக்கியமாகித் தூங்கிப் போனேன். அவரும் கிடைக்குப் போய்விட்டார்.

சரியாக 11.30 மணிக்கு என்னை எழுப்பினார்கள். முன்பே குறிப்பிட்ட நண்பனின் தந்தை வந்திருந்தார். சேத்தூருக்கு அண்மையில் உள்ள மலைக்குக் கோட்டை மலை என்று பெயர். அந்தக் கோட்டை மலையின் அடிவாரத்தில் கோட்டை மலை கருப்பசாமி கோயில் உள்ளது. அங்குச் சிவராத்திரியின்போது பல்வேறு சமுதாயத்தினர் கூடி வழிபடுவார்கள். அங்கு சென்றால் கூடுதல் தகவல்கள் பெறலாம் என்று அவர் என்னிடம் கூறினார். ஆனால் கோட்டை மலை அடிவாரத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் இரண்டு பரம்புகளைக் கடக்க வேண்டும். அது ஏறக்குறை 15 கி.மீட்டருக்கு மேல் இருக்கும். இதில் உள்ள சிக்கல் அவ்வளவு தூரமும் வண்டியில் செல்ல முடியாது என்பதுதான்.

நானும் நண்பனின் தந்தையும், அவரது நண்பரும் என மூவரும் ஒரு பைக்கில் கோட்டை மலை கருப்புசாமி கோயிலை நோக்கிப் புறப்பட்டோம். இரண்டு பக்கமும் வளர்ந்திருந்த செடிகள் சுளீரென அடித்தன. குறிப்பிட்ட அந்த ஒற்றையடிப் பாதையின் தடத்தைக் கண்டுபிடித்து செல்வது சிரமமாக இருந்தது. வழியில் நிறைய விலங்குகளைப் பார்த்தோம். ஒரு பெரிய மான் ஒன்று குறுக்கிட்டது. சிறுசிறு விலங்குகள் பைக்கின் வெளிச்சத்தில் தெரிந்தன. என் பின்புறம் அமர்ந்திருந்தவர் என்னைப் பற்றிக் கேட்டுக்கொண்டே வந்தார். என்னுடைய ஆய்வுகள் குறித்தெல்லாம் கேட்டுக்கொண்டார். வண்டி, மேடு பள்ளங்களில் ஏறியிறங்கும் போதெல்லாம் என்னால் சரியாக ஒரே இடத்தில் உட்கார முடியவில்லை. நல்ல ஆழ்ந்த உறக்கத்திலிருந்து திடீரென எழுப்பிவிட்டதில், என் தலையே வெடித்துவிடுமளவிற்கு விர் விர்ரென்று வலித்துக்கொண்டிருந்தது. தூக்கக்கலக்கம் வேறு…

அவர் எனக்கு இடைக்காட்டு சித்தரின் கதையைச் சொல்லிக்கொண்டே வந்தார். இடைக்காட்டு சித்தர், முன்பு நடக்கப்போவதை அறியக்கூடியவராம். அவரிடம் பெரிய அளவில் ஆடுகளும் மாடுகளும் இருந்தனவாம். அவர் எதிர்வரும் காலங்கள் மிகப் பஞ்சமானதாக இருக்கும் எனக் கணித்து, கால்நடைகளின் சாணத்தை வரட்டியாக்கி சுவற்றில் அறையும்போது, கூடவே, தானியங்களையும் சேர்த்து கலக்கி சுவற்றில் அறைந்து வைத்தாராம். அவர் கணித்தது போலவே பெரிய பஞ்சம் உண்டாயிற்றாம். ஊரில் மழையே இல்லாமல் போயிற்று. ஆடு, மாடுகளுக்கு நீரும் மேய்ச்சலுக்கு உணவும் இல்லாத்தால் பலரும் ஊரை விட்டு, நீரையும் மேய்ச்சல் நிலத்தையும் தேடிச்சென்று விட்டனராம். இவர் மட்டும் போகாமல் இருந்தாராம். எல்லோர் கிடையையும் விட, இவரது கிடையில் இருந்த கால்நடைகள் செழிப்பாக இருந்தனவாம். பலரும் ஆச்சரியப்பட்டு இவரிடம் வந்து கேட்டனராம். இவர் முன்பு சுவற்றில் அறைந்து வந்திருந்த வரட்டிகளில் இருந்து உதிரும் தானியங்களே கால்நடைகளுக்கு போதுமான உணவாக இருந்தனவாம். எல்லோரும் இடைக்காட்டு சித்தர் பெரிய யோகி என்று அறிந்துகொண்டார்களாம்… நான் தூக்கக் கலக்கத்தில் பொறுமையாக ‘ஊம்’ கொட்டிக் கொண்டே வந்தேன்.

கொஞ்ச தூரம்தான் சென்றிருப்போம். அங்கிருந்து மலை ஏற்றம் தொடங்குகிறது. வந்து நின்ற இடத்திற்குப் பக்கத்தில் ஒரு பெரிய ஜீப்பும், நான்கைந்து பைக்குகளும் நிறுத்தி வைக்கபட்டிருந்தன. நாங்கள் அந்த ஜீப்பைப் பார்த்ததுமே, நிலைமை ரொம்ப மோசமென்று ஊகித்தோம். ஜீப்பின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. முன்புறம் ஒடுக்கு விழுந்திருந்தது.

அப்போதுதான்… எங்களின் சத்தம் கேட்டுதான் அவை அங்கிருந்து சென்றிருக்க வேண்டும். அல்லது அருகில் எங்காவது இருந்திருக்க வேண்டும். பெரியதும் சிறியதுமான தடங்கள் அவ்விடத்தைச் சுற்றிலும் காணப்பட்டன. எல்லாம் யானையில் பாதச்சுவடுகள். நாம் இன்னும் கொஞ்சம் தாமதமாக வந்திருந்தால் ஜீப்பைத் தலைகீழாகக் கவிழ்த்துவிட்டிருக்கும் என்றார் நண்பனின் அப்பா.

நான்கு கி.மீட்டர் தூரம்தான் வந்திருப்போம். இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம். மணி 12. முன்னால் நண்பனின் அப்பாவும் நடுவில் நானும் பின்னால் அவரது நண்பரும் என நடக்க ஆரம்பித்தோம். செல்லும் பாதை இலகுவாயில்லை. இருவர் கையிலும் டார்ச் லைட்டுகள் இருந்தன. வழி நெடுக்க யானையின் கதையைதான் சொல்லிக்கொண்டே வந்தார்கள்.

யானை எனக்கு பிடித்த விலங்கு. ஆனால் இவர்கள் யானையைப் பற்றிச் சொல்ல சொல்ல அதன்மீது பயமே வந்துவிட்டது. மாலையில் ஆடுமேய்க்கும் வழியில் எதிர்பட்ட தென்னந்தோப்பில் ஐந்து தென்னைமரங்கள் வேரோடு சாய்ந்துபோயிருந்தன. நேற்று இரவு யானைகள் இப்படி செய்துவிட்டன என்று சொல்லிக்கொண்டே அவற்றை வெட்டிக் கொண்டிருந்தார் பெரியவர் ஒருவர். இன்னொரு மரத்தின் உயரத்தில் ஆழமாக யானையில் தந்தச் சுவடு பதிந்திருந்தது.

வழி, பெரிய பெரிய பாறைகளாகவும், சரளைக் கற்களாகவும் இருந்தது. நிற்கவேயில்லை; நடந்துகொண்டே இருந்தோம். திடீரென, முன்னே சென்ற நண்பனின் அப்பா நிற்கச் சொன்னார். ஒரே அமைதி… யாரும் எதுவும் பேசவில்லை. நாங்கள் இருந்த இடத்திற்குப் பக்கத்தில் சடசடவென மரங்கள் முறிந்துவிழும் சத்தம் கேட்டது. டார்ச் லைட்டுகளை விருட்டென அணைத்துவிட்டனர் இருவரும். தொடர்ந்து மரம் முறியும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. டார்ச் லைட்டே போடாமலேயே மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். வழியெங்கும் சுடசுட யானை சாணம் கிடந்தது. யானைக்கூட்டம் ஒன்று அப்போதுதான் சென்றிருக்க வேண்டும். நாங்கள் காலடி சத்தம் இல்லாமல் நடந்தோம். வழியில் பெரிய அருவியின் தடம் ஒன்று குறுக்கிட்டது. வெறும் பெரிய பெரிய கூழாங்கற்களால் நிரம்பியிருந்தது. தண்ணீர் சிறிய அளவு ஓடிக்கொண்டிருந்தது. இப்போது சத்தம் இல்லையாகையால் டார்ச் லைட்டை அடித்துக்கொண்டு நடந்தோம். சிறிது தூரம் சென்றிருப்போம்.. மேலேயிருந்து சிறுசிறு குச்சிகளும், இலைகளும் எங்கள் மீது விழுந்தன. எனக்கு லேசாக ஒன்னுக்கு வருவதோ போல் ஆகிற்று. லைட்டை அடித்துப் பார்த்தார்கள். குரங்குகள்..! எனக்கென்று இப்படியா வருவீர்கள்… மந்திகளே!!

இந்தக் காட்டில் சிறுத்தைகள் அதிகம் உண்டாம். நண்பனின் அப்பா வளர்ந்த நாய் ஒன்று சிறுத்தையுடன் சண்டையிட்டுதான் இறந்துபோனதாம். முன்பு ஒருமுறை, இவர் கோவிலுக்குச் செல்லும் போது இவருக்கு முன்புறம் ஏதோ நாய் ஒன்று போவதுபோல இருந்ததாம். இவர் என்ன என்று முன்னே சென்று பார்த்த பிறகுதான் அது சிறுத்தை என்று தெரிந்துகொண்டு, பெரிய கல்லை எடுத்து, வேகமாக அதன்மீது வீச, ஒரே பாய்ச்சலில் அங்கிருந்து ஓடிவிட்டதாம். ஒன்று… நாம் அதை முதலில் தாக்க வேண்டும்… இல்லையென்றால் அது நம்மைத் தாக்கிவிடும் என்று சொன்னார். இங்கிருப்பவர்கள் எல்லாம் பெரிய திறமைசாலியாக இருக்கிறார்கள்!

வழியில் இன்னொரு மலையருவிக் குறுக்கிட்டது. அங்கு எங்கும் முட்டு
முட்டாக யானை சாணிகள் கிடந்தன. அதைத் தாண்டி சென்றபோது, வழியில் இருபுறமும் வளர்ந்திருந்த ஒரு வகை முள் மரம் தோலுறிக்கப்பட்டும் முறிக்கப்பட்டும் கிடந்தன. இந்த முள் மரத்தின் பட்டையை யானைகள் விரும்பி உண்ணுமாம் (!).

நாங்கள் வேகமாக நடக்க ஆரம்பித்தோம். வழியெங்கும் முறிந்துபோயிருந்த முள் மரங்களும் புதிதாகப் போடப்பட்ட யானை சாணிகளும் கிடந்தன. முன்னே செல்லும் வழியைத் தவிர, பக்கத்தில் உள்ள செடிகள்கூட கண்ணுக்குத் தெரியவில்லை. அவ்வளவு இருட்டு. டார்ச் லைட்டு வெளிச்சம் மட்டும் இல்லையென்றால் முன்னே ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. பாதை முழுவதும் மலை ஏற்றமாகவே இருந்தது. இவர்கள் இருவரும் யானை பற்றிய கதைகளையே பேசிக்கொண்டு வந்தனர்.

இப்போது வானம், இந்தக் காட்டைப் போலவே அமைதியாய் இருந்தது. சுற்றிலும் அடுத்தவர் முகம் தெரியாத அளவுக்கு இருட்டு. அப்போது வானத்தைப் பார்க்க ரம்மியமாக இருந்தது. சென்னையில் வானத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட நேரமில்லாமல்… அல்லது நேரமில்லை என்பதுபோல காட்டிக்கொண்டு செல்வதிலிருந்து மிகவும் வேறுபட்ட களமாயிருந்து இது.

கோவிலை நெருங்கி விட்டதாக சொன்னார்கள். இன்னும் ஒரு பிரம்பையும் ஒரு அருவியையும் கடந்து விட்டால் கோவிலை அடைந்து விடலாம். இப்போது நாங்கள் அந்தப் பிரம்பு மீதுதான் போய்க்கொண்டிருக்கிறோம். ஏதோ ஒருவித சத்தம் கேக்கவே, இருவருமே ஒரே நேரத்தில் லைட்டை அணைத்தார்கள். மிக அருகில் இருப்பது போன்ற ஒரு எண்ணம் எனக்கு மட்டும் இருந்திருக்காது என்று நினைக்கிறேன். நண்பனின் அப்பா, மெல்லிசாக விசில் ஊதுகின்றார். சிறிது நேரத்தில் பொத் பொத்தென்று சாணிகள் விழும் சத்தம். அருகில்தான்…. மிக அருகில்தான் இருக்கின்றன.

அமைதியாக பூனைபோல நடக்க ஆரம்பித்தோம். மலையருவி குறுக்கிட்டது. அப்பாடா என்ற மகிழ்ச்சி எனக்கு. கொஞ்ச தூரம்தான் சென்றிருப்போம்.
கோயில் கண்ணில்பட்டது. மணி சரியாக 2.30. நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டுக்கொண்டேன். கோவிலைச் சுற்றி அகழிபோல பள்ளம் தோண்டப்பட்டு, நடுவில் கம்பீரமான அலங்கரிக்கப்பட்ட நிலையில் நின்றிருக்கிறார் கோட்டைமலை கருப்பசாமி. இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கருப்பசாமியைச் சுற்றி தூங்கிக்கு கொண்டிருந்தார்கள். இவர்கள் யாவரும் நேற்று மதியமே இங்கு வந்து சேர்ந்திருந்தார்கள். சிலையின் முன்புறம் பெரிய யாக குண்டம்போல் அமைத்து பெரிய பெரிய கட்டைகளைப் போட்டு எரித்துக் கொண்டு, குளிர்காய்ந்து கொண்டு பெரியவர்கள் நான்கு பேர் காவலுக்கு இருந்தார்கள். நாங்கள் போனபோது முதலில் அதிர்ந்துபோன அவர்கள், நண்பனின் அப்பாவை அடையாளம் கண்டு பிறகு சகஜமாகப் பேசினார்கள்.
ஜீப் சேதமடைந்திருந்தைச் சொன்னதும் பதட்டமடைந்து மீண்டும் மீண்டும் அதையேக் கேட்டார்கள். பெண்கள் சிலரும் விழித்துக்கொண்டார்கள். பெரிய அண்டாவில் சோறு சமைத்து வைத்திருந்தார்கள். மூவரும் சாப்பிட்டோம். கருப்பசாமிக்கு இடதுபுறமாக, அவருடைய துணியையே ஒன்றை விரித்த. நான் தூங்கிவிட்டேன்.

காலையில் எழுந்ததும் எல்லோரிடமும் பேசினேன். இரண்டு பேரிடம் பேட்டி எடுத்தேன். கடைசியாகக் குறுக்கிட்ட மலையருவிக்குச் சென்று குளித்து, துவைத்து விட்டு, மதியம் வரையும் அங்கேயே சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஐந்து கோழிகளை அடித்து சமைத்து, படையலிட்டார்கள். நன்றாக சாப்பிட்டேன். அவர்களுடனேயே கீழே இறங்கி வந்துவிட்டேன். இரவில் மேலே ஏறும்போது கேட்ட சத்தங்களுக்கெல்லாம் வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தன, கீழே இறங்கும்போது கண்ட காட்சிகள்.

இது என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு!

No comments:

Post a Comment