Tuesday, April 26, 2016

அது

ஓங்கி அறைந்ததால் ஏற்பட்ட இரத்தச் சிவப்பு போல கீழ் வானம் சிவந்து கிடக்க, மெல்லப் பரவும் இருள் இந்த பூமியை மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தது. நெடிய பேய்மழைக்கு ஓடி ஒதுங்கும் சீவராசிகளைப் போல உலகத்து உயிரினங்கள் இருளைக் கண்டு தம் வீடுகளுக்குள் ஒதுங்குகின்றன. அவை அக்கொடிய இருளை தூங்கிக் கொண்டே விரட்ட சித்தமாயின. இருளும் மெல்ல கவிழ்ந்தது. கூரிய பற்கள் பல இருந்தாலும் மென்று தின்ன நாழியாகுமே என்று, அப்படியே விழுங்கிக் கொண்டிருந்தது அந்த நாசக்கார இருள். ஒரு புள்ளியில் தோன்றி விரிவடைந்திருக்கும் இந்த பிரபஞ்சம் போல மேற்குக் கீழ்வானம் சுருங்கியதால் மறு புள்ளியிலிருந்து விரிவடைந்திருந்தது அந்த இருள்.

பெரும் புயலுக்குப் பின் இருக்கும் அமைதியைப் போல ஊர் உறங்கிக் கொண்டிருந்தது. மூடவே விரும்பாத தன்னுடைய வாயைக் கட்டிக் கொண்டும், குற்றத்தைத் சதா தேடிக்கொண்டிருக்கும் கண்கள் வலிய மூடிக்கொண்டும் மௌனமாய் சாய்ந்து கிடந்தது அந்த ஊர். அது இறக்கவில்லை. இறந்தாற்போல் இரவைக் கழிக்கிறது.

ஏனோ அன்று மட்டும் உலகத்துயிர்கள் எல்லாம் தூங்கி விட்டன. இரவில் அலையும் வௌவால்களும் ஆந்தைகளும் கூட அன்று தூங்கிவிட்டன. யாருமே சுய நினைவோடு இல்லை; அவனைத் தவிர.

அவனுக்கு வாய் இருந்தது. பசிக்கும் போது சோறு கேட்க மட்டுமே அதற்குத் தெரியும். கண்கள் இருந்தன. அவை எப்போதுமே நாணி, தரையையே காணக் கட்டுப்பட்டதாய் நிலைக் குத்தியிருக்கும். அவனக்கு பெயரும் கூட இருந்தது. ஆனால் அது அவனுக்கும் சரி... வேறு யாருக்கும் சரி... தேவைப்பட்டதே இல்லை. அவனுக்கு அதன் மீது இருக்கும் பெருங்குழப்பம், அந்த பெயர் யாருக்கு வைத்தது என்பதுதான். தனக்கு என்றால்? உடலுக்கா.. உயிருக்கா… யோசித்து யோசித்து, இப்போது யோசிப்பதையே விட்டு விட்டான். அதனால் அவன் பெயரை சொல்லிக் கொள்வதில்லை.

வெறி பிடித்த இருள் அன்று தன் கோர உருவை வெளிப்படுத்தி நர்த்தனமாடிக் கொண்டிருக்கும் வேளையில் இவன் மட்டும் அந்த இருளோடு அன்று போராடிக் கொண்டிருந்தான். ஏன் இப்படி இதனோடு மல்லுக்கட்டுகிறோம் என்பது அவனுக்கு மறந்துகூட போயிருக்கலாம். ஏனெனில் தான் செய்ய வேண்டியதை நினைத்து..மறந்து.. நினைத்து.. மறந்து.. ஏதோ ஒன்றாக ஒருவழியாக ஆகிவிட்டான்..

கால்கள் முன்னே தள்ள இருளை வகிர்ந்து கொண்டு சென்று கொண்டிருக்கிறான். தீராத வேட்கையுடனும், தன்னைத்தானே வீழ்த்திக் கொள்ள எண்ணாத நினைவுகளுடனும் எதிர்பார்ப்புகளை ஏந்திக் கொண்டு நடக்கிறான். அவனை விட, அவன் கால்கள் அவனை இழுத்துச் செல்கின்றன. எங்கோ ஒரு இடத்தில் யாரையோ ஒன்றைத் தரிசிக்க தீராத ஆசையுடன் செல்கிறான்.

வழியில் நீண்ட நாள்கள் நின்று வாழும் மரங்கள் இவனைக் கண்டு கெக்கொலி கொட்டுகின்றன. தூரத்து மரங்களெல்லாம் கூடி இவன் கதையைப் பேசுகின்றன. தன் உருவத்தை சிறியதாகவும் பெரியதாகவும் காட்டி வழி நெடுக்க இவனை பயமுறுத்த எண்ணுகின்றன. அவனைக் கண்டு எகத்தாளம் பேசுகின்றன. சில அவனை இடறி விழச் செய்து மகிழ்கின்றன. அகல கிளை பரப்பி பூதாகரமாக தன் உருகாட்டி அச்சம் கொள்ளச் செய்கின்றன.

காற்று சுழன்று வீசுகிறது. இவனும் காற்றும் கால் ஊன்றி நிலைத்து நிற்கும் மரங்களுமே அந்த பெரும்பூத இருளிடம் சுயநினைவோடு இருக்கின்றனர். மரங்கள்தாம் அவனைக் கண்டு எள்ளி நகையாடுகின்றன என்றால் காற்று, மரங்களோடு தோழமை பாராட்டி இவனை மீண்டும் மீண்டும் சீண்டி விடுகின்றது.

இரவின் ஒளியாகிய நிலா, அன்று ஏனோ தனக்குத் துரோகமிழைத்து விட்டதாய் அவன் எண்ணினான். அவன் நம்பியது வீணாகிப் போனது. அது தன் எதிரிகளோடு கூட்டு சேர்ந்துக் கொண்டதோ என்று எண்ணினான்.

இவன் செல்லும் தூரம் அறியாததால், விறுவிறுவென்று நடப்பதே கடனென நடக்கிறான். அவனை விட அவன் கால்கள் அவனை இழுத்துச் செல்கின்றன. தான் சந்திக்கப் போகும் ‘அதை’க் காண அவனை விட அவன் கால்களுக்கு ஆவல் அதிகமாக இருந்தது.

அவன் வேகம் கூட கூட அவன் உடல் நனைந்து போயிற்று. நின்று நடக்கக் கால்கள் ஒத்துழைக்கவில்லை. விரைந்து நடந்ததால் இதயம் வெடித்து விடுவதாய்த் துடித்தது. கால்கள் இதைப் பொருட்படுத்தவில்லை. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அம்பு போல அது ஏதோ ஒன்றைத் தேடி ஓட ஆரம்பித்து விட்டது. தன்னை கேளி செய்யும் காற்றையும் இருளையும் கிழித்துக் கொண்டு அவனது உடலை அவன் கால்கள் வலிய இழுத்துச் செல்கின்றன.

இன்பத்திற்கு இன்பமாய் அறிவுக்கு அறிவாய் அன்பிற்கு அன்பாய் இருந்த ஒன்றை, கருவிலிருந்தே அவனை வளர்த்தெடுத்த ஒன்றை, எண் எழுத்துக் கற்பித்த ஒன்றை, தன்னைப் போலவே இவனையும் நேசித்த ஒன்றை, உயிருக்கு உயிராய் இருந்து அவனுள் எல்லாமுமாகி எங்கும் வியாபித்திருந்த ஒன்றைத் தேடி செல்கிறான் அவன். தாம் தொலைத்த ஒன்றை மீட்டு வரச் செல்கிறான்.

‘அது’ போனபிறகு, இவன் ஆதரிப்பாரற்று கிடந்தான். மனம் துவண்டதால் உடல் துவண்டது. உடல் துவண்டதால் உயிரும் துவள ஆரமித்தது. சுற்றியுள்ளவர்களால் பரிகாசத்திற்கு ஆளானான். ‘அ’து சென்ற நாள் முதல் வேறு நினைப்பொழிந்து பிணமாயிருந்தான். தனிமை அவனைத் தின்று தீர்த்தது. பழிப்புரைகள் அவனை விரட்டின.

என்ன தோன்றியதோ, என்ன எண்ணினானோ? விட்டுச் சென்ற ‘அதை’ மீட்க புறப்பட்டு விட்டான். அது அவனுக்கு அவசியமாயிருந்தது. இழந்த ஒன்றை பதிலீடு செய்வதற்கு அவனுக்குத் தெரியவில்லை. சென்ற ‘அதை’யே மீண்டும் அழைத்துவர புறப்பட்டு விட்டான்.

வழியில் நீண்ட கோபுரங்கள் பல தெரிந்தன. அங்கெல்லாம் தேடிப் பார்க்கிறான். வயல் வரப்புகளில் ஆடு தாண்டாமல் இருக்க கவைபோல வேலி அமைத்திருக்கிறார்கள். அதனிடம் சென்று கேட்கிறான். வாய்க்காலில் சலசலத்து ஓடும் நீரிடம் சென்று கேட்கிறான். அவை இவனை கண்டுகொள்ளவே இல்லை. வாய்க்கால் நீர், இவனை எள்ளி நகையாடியபடியே ஓடிக் கொண்டிருந்தது. இருக்கும் போது வைத்துக் கொண்டாடத் தெரியாதவன், பெருமையறியாதவன் என்று அவை, இவன் காதில் படுமாறு திரும்பிப் பேசிக்கொண்டன. நீண்ட மண்சாலையின் இரு மருங்கிலும் முளைத்திருந்த புற்களில் நடந்தபடியே, அருகிலிருக்கும் மூங்கில் வேலிகளிடம் ‘அது’ இருக்குமிடத்தைக் காட்டுமாறு இறைஞ்சுகிறான். அவைகளோ, தன் கூரிய முற்களால் அவனைக் குத்துகின்றன.

சற்று தள்ளி இருந்த பெரிய குளம் ஒன்றிடம் சென்று கேட்கிறான். அதனுள் இருந்து நீர்க்குமிழிகளோடு வெளிவந்த தலைமட்டுமே கொண்ட, உடலில்லாத அரிக்குட்டி ஒன்று, இவனை தன் விழிகளை உருட்டி அச்சம் கொள்ளச்செய்கிறது.

படும் துன்பங்களையும், விழும் ஏச்சுக்களையும், பெறும் அவமானங்களையும் சேமித்துக்கொண்டே நடக்கிறான். அவை அவனை வீரியமூட்டுகின்றன. தூண்டி விடுகின்றன. எதிர்பதமாய் அவனை முடுக்கி விடுகின்றன.

கால்கள் சோரும் போது மனம் விழித்துக்கொள்கிறது. மனத்தின் வலு அவனை இழுத்துச்செல்கிறது. நடக்கிறான்... இல்லை! ஓடுகிறான். ‘அதை’க் காண வேண்டும் என்ற ஆவல் மீதூர.. மீதூர.. மனம் களிக்கிறது.

இருள் தன் ஆளுமையை குறைக்க விரும்பாது கவிழ்ந்து கிடக்கிறது. மிக்க இருமாப்போடும் திமிர்தனத்தோடும் அது படர்ந்திருக்கிறது. தன்னை வெல்ல, தன்னை வீழ்த்த யாருமில்லை என்று பேய்ச்சிரிப்பு சிரிக்கிறது. அந்தவேளையில், காற்று ‘ஊ......’ என்று வீளையிட சிறிய இரத்தச் சிவப்பு பொட்டு பொன்று பிரகாசமாய் ஒளி ஒன்று தோன்றுகிறது. அது வரவர தன்னை விரித்துக்கொண்டே பெரியதாகிறது. இப்போது ஒரு பெரிய வட்ட வடிவில் வெள்ளை வெளேரென்று ஒளி வீசி இருளைக் கவ்வுகிறது. தான் செல்லும் வழியெல்லாம் இருளை விரட்டியபடி சென்று கொண்டிருக்கிறது.

இறுதியாக உள்ளமும் உடலும் சோர்ந்த அவன்., அவனது சரீரம்., அவன் ஆத்மா., அவ்வொளியைக் கண்களால் கண்டதும் பெரும் தீப்பிழம்பென ஒளிகொள்கின்றன. வீறுகொண்டு உற்சாகம் வரப்பெற்று போய்க்கொண்டிருக்கும் ஒளியை நோக்கி ஓட்டம் பிடிக்கின்றன.

சமீபத்தில் இவனைக் கண்ட அவ்வொளி, இவனை விட்டு விலகி ஓட எத்தனிக்கிறது. இவனுக்கு எதிர்திசையில் ஓட்டமெடுக்கிறது.

இவன் விடவில்லை.. தொடர்ந்து ஓடுகிறான். இவனைக் கண்டு விலகியோடும் ஒளியைக் கண்டு இவன் கண்கள் தாரைதாரையாக நீரைப் பொழிகின்றன.

“நாந்தான்... நாந்தான்... என்ன விட்டுட்டுப் போகாத.. போகாத..”

அழுகை வீறுகொள்ள, குரல் கரைகிறது. இவனைக் கண்டு ஓடிய ஒளி சற்று வேகம் குறைத்து இவனைப் பார்த்துச் சொல்கிறது.

“என்ன விட்டுடு.. நா போறேன்.. என்ன விட்டுடு.. நா போக வேண்டிய நேரம் வந்துடுச்சி.. இனி உன்கூட இருக்க முடியாது.. என்னோட காலம் அவ்ளோதான்.. என்ன விட்டுடு”

இதைக் கேட்ட அவனால் சீரணிக்க முடியவில்லை. தொண்டைக்குழியில் ஏதோ அடைத்துக்கொண்டதைப் போல அழ நினைத்தும் அழமுடியவில்லை. மூச்சு வர மறுக்கிறது. அப்படியே திக்கி நிற்கிறான். அவன் சொல்கிறான்..

“நீயில்லாம நான் ஏது..? என்னயும் கூட்டிட்டுபோ.. இல்ல, என்கூட வந்துடு..”

என்று சொல்லி வெறிபிடித்தவனைப்போல அழுகிறான். பின்,

“எனக்கு வாழ பிடிக்கல.. இங்க எல்லாம் ரொம்ப மோசமா இருக்கு.. என்னால பொழைக்க முடியாது.. என்னையும் கூட்டிட்டுப்போ”

என்று அழுதுகொண்டே விழுந்து புரள்கிறான். ஒளி சற்று நின்று யோசிக்கிறது. இருளை பிளந்தெடுத்த அந்த ஒளி, அன்பு ஆதரவற்று, நடைபிணமாய் சுற்றித் திரிந்த அவனை, காண்போரெல்லாம் எள்ள நகையாடிய அவனை, தூற்றி எக்காளமிட்ட அவனை, மனிதப் பேய்களிடமிருந்து விடுவிக்கச் சித்தம்கொண்டு இசைந்தது.

உடல்முழுவதும் அலங்கோலமாய், இரத்த சகிதமாய் நின்றிருந்த அவனை மெல்....ல உள் வாங்கியது. தலையிலிருந்து ஒளி அவனை விழுங்கியது. மெல்ல…மெல்ல.. ஒளியோடு அவன் கலந்தான்.. அதனோடு அதுவாகினான்..!

No comments:

Post a Comment