Tuesday, April 26, 2016

அரசியல்வாதிகள் வியாபித்திருக்கிறார்கள்


நம்மில் அரசியல்வாதிகள் எங்கும்
வியாபித்திருக்கிறார்கள்

கேள்விப்படக்கூடிய தொலைவுகளில்...
கண்களுக்குப் புலப்படும் இடங்களில்...
சில சமயம் நம்அருகினில்...
இன்னும் நமக்கு வேண்டிய உருவங்களில்!

நன்கு பேசுவார்கள்
நமக்காகவே எல்லாம் என்பார்கள்
எள்ளோ கடுகோ எனச்செய்துவிட்டு -சதா
அதைத்  தம்பட்டமும்
அடித்துக்கொள்வார்கள்!

ஏசுக்களைச் சிலுவையில் அறைய
நம்மை யூதாசுகளாக ஆக்குவதற்குப்
பெரும் பிரயத்தனங்களைச்
செய்வார்கள்

அதுமுடியாது என்று உணரும்பட்சத்தில்
உடல்மொழிகளால் மிரட்டுவார்கள்
உனக்கு வாழ்க்கைத் தந்தது நான் என்பார்கள்
அழித்துவிடுவேன் என்று பிதற்றுவார்கள்

காட்டி விடவும் வெட்டி விடவும்
கற்றுக்கொடுப்பார்கள்
நம்மையே நம்மிடமிருந்து பிரிக்கும்
சூட்சமம் அறிந்தவர்கள்
சேந்திருப்பதையும் சார்ந்திருப்பதையும்
ஜீரணிக்க முடியாமல் குறுகுறுத்துக் கொண்டிருப்பார்கள்

சோர்ந்திருக்கும் சமயத்திற்குக் காத்திருப்பார்கள்
இடறிவிழும்போது எக்காளமிடுவார்கள்
இவையெல்லாம்தான் அரசியல் என்று
பாடம் கற்பிப்பார்கள்
இதில் தாம் தேர்ந்த அரசியல்வாதியென
இரும்பூதிக்கொள்வார்கள்.

எனவே,
அரசியல்வாதிகளை இனங்கண்டுக் கொள்ளுங்கள்
இவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்!

***

No comments:

Post a Comment