இந்துக்களிடையே மிகப் புகழ்பெற்ற ஒரு வழிபாடாக,
இந்தியா முழுமையும் கிருஷ்ண வழிபாடு இருந்து வருகிறது. விஷ்ணு
புராணம், பால சரிதம், மகாபாரதம்,
பாகவதம்
என வைணவ சமயத்தின் பெரும்பாலானப் புராணங்களும் இதிகாசங்களும் கிருஷ்ணனுடைய வாழ்க்கையையும்,
ஓர்
இடையனாக இடைச்சமூகத்தில் அவன் நிகழ்த்திய புதுமைகளையும் அவைப் போற்றிப்புகழ்ந்து கொண்டாடுகின்றன.
மகாபாரதத்தில்
கிருஷ்ணனுடைய பங்களிப்பு மிக முக்கியமானது. சில
வரலாற்றிஞர்கள் மகாபாரதம் கௌரவர்கள், பாண்டவர்கள்
என்னும் பரதப் பெருங்குடி பிரிவுகளிடையே நடைபெற்ற போராட்டத்தை சித்தரிக்கிறது1
என்று
கூறுகின்றனர். இஃது நிகழ்ந்தது கி.மு.10ஆக
இருக்கலாம் என்று ஆர்.எஸ்.
சர்மா2,
சி.பி.லோகநாதன்3
போன்ற
அறிஞர்கள் கருதுகின்றனர்.
கிருஷ்ணன் தான் வாழும்போதே கடவுளாக வணங்கப்பெற்றான்
என்பதை விஷ்ணு புராணம், பாகவதம்,
பாலசரிதம்
உள்ளிட்டப் புராணங்கள் எடுத்தியம்புகின்றன. கிருஷ்ணன்
யார், கிருஷ்ணனைக் கடவுளாகக் கொண்ட வழிபாட்டு
முறை தமிழகத்தில் எப்போது கால்கொண்டது ஆகியன பற்றி விவரிக்க முயலுகிறது இக்கட்டுரை.
கிருஷ்ணன்
யார்?
கிருஷ்ணன் யது குலத்தில் உதித்தவன் என்றும் யாதவ
அரசனென்றும் புராணங்கள் இயம்பியுள்ளன. ஆனால்
கிருஷ்ணனைப் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர்கள்,
புராணங்கள்
தரும் யது, யயாதி,
யாதவத்
தொடர்பை மறுக்கின்றனர். கிருஷ்ணன்,
ஆபிரர்
என்று முன்பு வழங்கப்பட்ட, தற்போதுள்ள
அஹீர்களுடைய குலத்தைச் சார்ந்தவன் என்று மேலும் கூறுகின்றனர்.
ஆஹீர்கள் பீகார், சண்டிகர்,
மத்திய
பிரதேசம், மேற்கு வங்காளம்,
உத்திரபிரதேசம்,
ஒரிசா,
குஜராத்,
மகாராஷ்டிரா,
ராஜஸ்தான்,
டெல்லி, சட்டீஷ்கர்,
ஹரியானா,
ஜார்க்கண்ட்,
திரிபுரா,
உத்ரகாண்ட்
என வடஇந்தியா முழுமையும் பரந்து வாழ்கின்றனர்.
கிருஷ்ணனுடைய இளம்பருவம்,
மேய்ச்சல்
நிலப்பின்னணி அவனை ஓர் இடையனாகவே சித்தரிப்பது கண்கூடு. வைணவ
சமயம் பல்வேறு காலங்களில் பல்வேறு சூழலில் பிற இனக்குழுக்களின் வழிபாடுகளை
உள்வாங்கிக் கொண்டது என்று வரலாற்றிஞர்கள் இயம்புவர். அதன்படி,
ஆபிரர்களின்
தலைவனாக வாழ்ந்து, அவர்களால் வழிபடப்பட்ட
கிருஷ்ண வழிபாட்டை வைணவம் உள்வாங்கிக் கொண்டதாக பல அறிஞர்களும் கருதுகின்றனர்.
‘கிருஷ்ணருடைய இளம்பருவ மேய்ச்சல்
நில பின்னணி அவரை ஆபீரர் இனமக்கள் வணங்கிய இளம் பருவக் கடவுளோடு ஒன்றாக்கியதன் விளைவே’4
என்று
சுவீரா ஜெயஸ்வால் கூறுகின்றார். ‘கிருஷ்ணனுடைய வளர்ப்புப் பெற்றோர்
வடமதுரைக் கருகில் மதுவனத்தி லிருந்து துவாரகையைச் சுற்றியுள்ள அனுபா,
ஆனர்த்தா
எனும் இடங்கள் வரை பரவியிருந்தவர்களும் இக்காலத்தில் அஹீர்கள் என்று வழங்கப்படுபவர்களுமான
ஆபிர இனமக்களைச் சார்ந்தவர்கள்’5 என்று
ஆர்.ஜி.பந்தர்க்கார்
கூறுகின்றார். டி.டி.கோசாம்பி
கிருஷ்ணனைக், ‘கிறித்தவர்களின் காலம்
துவங்கியபோது வாழ்ந்துவந்த இன்றுள்ள அஹீர் ஜாதியின் பூர்வக்குல முதல்வர்களாகவும் இருந்த ஆபீரர் எனும் ஆநிரை வளர்ப்பு மக்களோடு
உறவு ஏற்படுத்த வகைசெய்கிறது’6 என்று
கூறுகின்றார். சி.பி.லோகநாதனும்
‘அஹீர்கள் கிருஷ்ணனின் வழிவந்த யாதவர்கள்’
என்று
தன்னுடைய ‘வரலாற்றில் யாதவர்கள்’7
என்னும்
நூலில் கூறுகின்றார். மேற்கண்ட அறிஞர்களின் கூற்றின்படி
கண்ணன் ஆபிர இனத்தினனாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
கண்ணனை
இவ்வினதாரோடு தொடர்புபடுத்த, அறிஞர்கள்
காட்டும் தொடர்புகளைத் தொடர்ந்து காணலாம்.
கிருஷ்ணன்
- ஆபீரர்: தொடர்பு
கிருஷ்ணனை ஆபீரர்களோடு தொடர்புபடுத்தவும் அவன் ஆபீரர் இனத்தைச் சார்ந்தவன்
என்று கூறுவதற்கும் மேற்கூறிய அறிஞர்கள் தரும் விளக்கங்களாவன,
- ஹரி வமிசமும், பாசகவியின் பால சரிதமும் கிருஷ்ணன் கோசலையில் வளர்க்கபட்டான் என்று கூறுகின்றன. மதர கோச நிகண்டின்படி கோசலைக்கு ஆபீரப்பள்ளி எனும் பொருள் உண்டு. மேலும் இஃது ஆபீரா, பல்லவா என்ற சொற்களும் கோபா, கோபாலா என்ற சொற்களும் ஒரே பொருளை உடையன என்றும் இந்நிகண்டு பொருள் தருகிறது.(பந்தர்கார்,1913)
- ஆபீரர்கள் நாடோடி இனத்தவர்கள். ஒரு நாடோடி இனத்திற்கு தடையற்ற பாலுறவு தேவை, ஆகவே அவர்களுடைய கடவுளான கிருஷ்ணனும் இளமையும் சிற்றின்ப நாட்டமும், விளையாட்டு புத்தியுடையவருமான இருக்கிறார். (சுவீரா ஜெயஸ்வால், 1991)
- ‘விஷ்ணு புராணத்தில் கிருஷ்ணன் தம் இனத்தவரை நோக்கி அவர்கள் நிலமோ வீடுகளோ இன்றி வண்டிகளையும் ஆனிரைகளையும் ஓட்டித்திரிவதனால் பசுக்களும், மலைகளுமே அவர்களுக்கு தெய்வங்கள் என்று சொல்கிறார்’ (சுவீரா ஜெயஸ்வால், 1991). இதன் மூலம் நாடோடி இனமான ஆபிரர்களையே கிருஷ்ணன் இவ்வாறு கூறுகின்றான் என்பது பெறப்படுகிறது.
- ‘வாசுதேவர் கம்சனுடைய சிறையிலிருந்து விடுபட்டவுடன் நந்தருடைய வண்டிக்கருகில் சென்றார். தமக்குக் குழந்தைப் பிறந்ததறிந்த நந்தர் பெருமகிழ்ச்சியில் திளைத்திருந்ததனைக் கண்டார்’ என்று வேறொருப் பகுதியில் விஷ்ணுபுராணம் கூறுவதாக பந்தர்கார் கூறுவதை ஜெயஸ்வால் எடுத்துக்காட்டுகின்றார்.
- ‘மகாபாரத்ததில் கிருஷ்ணனுடைய ஜனங்கள் கடைப்பிடித்த இன்றும்கூட வரலாற்று ரீதியான ஆபிரர்கள் நடத்திவருவதுமான கடத்தல் முறைத் திருமணங்களும் இழிவாகவே கருதப்பட்டன’ என்று கோசாம்பி குறிப்பிடுகின்றார் (டி.டி.கோசாம்பி, 2006). கிருஷ்ணனே இத்தகைய கடத்தல்முறை மணத்தின் மூலம்தான் ருக்மணியை மணந்ததாக புராணங்களின் மூலம் நாம் அறிகின்றோம்.
- தமது எட்டாவது அவதாரத்தில் ஆபீரர்கள் மத்தியில் தான் பிறக்கப்போவதாக விஷ்ணு கூறியதாக விஷ்ணு புராணம் கூறுவதை ஜெயஸ்வால் எடுத்துக் காட்டுகிறார். (சுவீரா ஜெயஸ்வால், 1991).
மகாபாரதத்தில்
மௌசால பருவத்தில், பெரிய அழிவுக்குப் பின்
எஞ்சிய யாதவர்களை அர்சுனன் அழைத்து வருவதாக ஒரு குறிப்பு உண்டு.
அதில்
வருவதாவது
आभीरैरभिभूयाजौ हृताः पञ्चनदालयैः ॥
धनुरादाय तत्राहं नाशकं तस्य पूरणे।
यथा पुरा च मे वीर्यं भुजयोर्न महामुने।
उपदेष्टुं मम श्रेयो भवानर्हति सत्तम॥’8
அதாவது,
“ஓ முனிவர்களே... இதைக்
கேளுங்கள், இதைவிட எனக்கு வலி வேறு என்ன இருக்க முடியும். வலிமையுடைய
ஆபிரர்களின் பஞ்சநத பகுதியினைக் கடந்து வருகையில் அவர்கள் ஆயிரக்கணக்கான விருஷ்ணி
இனப் பெண்களைக் கவர்ந்து கொண்டார்கள்.என்னால்
அவர்களோடு விற்போர் செய்யமுடியவில்லை. என்
கையில் வலிமையில்லை. ஓ! ஆண்களில் சிறந்தவர்களே எனக்கு நல்ல ஆலோசனையை
வழங்குங்கள்.”
என்று
அர்ச்சுனன் சொல்வதாக வருகிறது. கோசம்பி, ஜெயஸ்வால்
போன்றோர் குறிப்பிடும் பெண்களை கடத்தல் முறை ஆபிரர்களிடையே இருந்துள்ளமைக்கு
மாபாரதம் சான்று தருகிறது. கிருஷ்ணனும் இவ்விதம்தான் ருக்மணியை அடைந்தான் என்று
முன்பே கண்டோம்.
ஹரிவமிசம்
முதலானப் புராணங்கள் கூறும் கோசலை என்னும் சொல்லுக்கு ஆபீரப்பள்ளி என்றொரு பொருள்
உள்ளமையாலும், சிற்றின்ப வேட்கை, கேளிக்கை
ஆகியன உடையவனாகக் கிருஷ்ணன் காணப்படுவதாகையாளும், வண்டிகளில்
ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயரும் ஆபீரர்களை கிருஷ்ணன் தன்னுடைய உறவினர்கள்
என்று கூறுவதாலும், ஆபீரர்களின் வரலாற்று ரீதியான கடத்தல் முறை (இதனை
வடநூலார் இராக்கதம் என்பர்) மணத்தை கிருஷ்ணனே செய்தமையாலும் இன்னபிற
காரணங்களாலும், சான்றுகளின்
படியும் கிருஷ்ணன் ஆபீர இனத்தவன் என்று முடிவு கூறலாம். கிருஷ்ணனை
வைணவத்தில் ஐக்கியப்படுதிய போது, அவனுடைய முழு அடையாளங்களும் புராணங்களில்
கூறப்பட்டுள்ளபடி மாறிப்போயுள்ளதால், மேற்கண்ட
குறிப்புகளின்வழியே அவன் ஆபீர இனத்தவன் என்னும் முடிவுக்கு வரமுடிகிறது.
ஆபிரர்களின்
தோற்றம்
ஆபிரர்களின் தோற்றம், பரவல்
குறித்து பலரும் பலவிதக் கருத்துக்களைத் தருகிறார்கள். ஆபிரர்களைப்
பற்றி ஜெயஸ்வால் தரும் தொகுப்பானச் சில செய்திகளாவன,
‘ஆபிரர்கள் முதலில் பஞ்சாபில் வாழ்ந்து
வந்தனர். பின் ராஜபுதனத்தை நோக்கி முன்னேறிச்
சென்றனர். கி.பி.
ஒன்றாம்
நூற்றாண்டில் அவர்கள் கீழைச் சிந்து சமவெளிக்கும் பின்னர் அங்கிருந்து மேற்குத் தக்காணத்திலுள்ள
சௌராஷ்டிரம், அபராந் ஆகிய பகுதிகளுக்கும் சென்றடைந்தனர்’
என்று
தேபால மித்ரா தன்னுடைய த அபிராஸ் அண்ட் தேர் காண்ட்டிரிபியூசன் டு த இந்தியன் கல்சர்
எனும் நூலில் கூறியுள்ளார். டி.சி.சர்க்கார்
அவர்களை ஹரீட்டிற்கும் காண்ட ஹாருக்கும் நடுவிலுள்ள அபிரவன் என்ற நாட்டுடன் தொடர்பு
படுத்திப் பேசுகிறார். அஸர்பெய்ஜான் எனும் இடத்திற்கருகில்
வாழ்ந்து வந்த அபைரை என்ற மேய்ச்சல் நில மக்களே ஆபிரர் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர்.
அவர்கள்
வெளி நாட்டிலிருந்து தோன்றியவர்கள்
என்ற கொள்கையை மிராஷியும் வேறு அறிஞர்களும் மறுத்து ஆபிரர்கள் ஆரியர் இந்தியாவிற்கு
வருவதற்கு முன் பஞ்சாபில் வாழ்ந்து வந்த பழங்குடி மக்கள் என்பர்.
பதஞ்சலி ஆபிரர்களை சூத்திர வருணத்தின் துணைச் சாதியர்
எனக் குறிப்பிடுகின்றார்.
தேவகார் குகைப் புடைப்புச் சிற்பம் கிருஷ்ணனுடைய
வளர்ப்புப் பெற்றோரான நந்தரையும் யசோதையையும் வெளிப்படையாக எடுத்துக்காட்டும் தன்மை
கொண்ட அன்னிய ஆடைகளை அணிந்திருந்ததைக் காட்டுகிறது. கிருஷ்ணருடைய
ஆயர் குலத்தவர்களை குப்தர் காலத்து ஓவியர்கள் வெளி நாட்டினராகக் கருதியிருப்பதையே அச்சிற்பங்கள்
நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.9
இப்படியாக
ஆபிரர்களின் வரவு பற்றி பல தகவல்களைத் தருகிறார் ஜெயஸ்வால்.
புராதண இந்தியா எனும் பழைய
56 தேசங்கள் என்ற
நூலை எழுதிய பி.வி.ஜகதீச
ஐயர் தரும் ஆபீரர்கள் பற்றி செய்திகளாவன,
ஆபீரதேசமானது ஸிந்து தேசத்திற்கு கிழக்கிலும் குந்தி
(குந்தல) தேசங்களுக்கு
நேர் மேற்கிலும் த்ரிகூட மலைக்கு வடக்கிலும் அகன்ற ஒரு பெரிய பூமியில் இருக்கிறது.
… இந்த தேசத்திற்கு மேற்கு எல்லையில்
ஓடும் அந்த பெரிய ஸிந்து நதியே இதற்கு முக்கிய நதியாகும்.10
என்று
கூறுகின்றார்.
மேலும்
‘புராண ஆபிரர்கள் கிழக்கு ஈரான், ஆப்கானிஸ்தான்
பகுதியிலிருந்து சிந்து நதியைக் கடந்து இந்தியாவின் உட்பகுதிக்கு இடம் பெயர்ந்தவர்கள்
என ரெஜினால்ட் எட்வர்ட் என்தோவன் எனும் பிரிட்டிஷ் அறிஞர் கூறுகின்றார்.
ஹக் நெவில் எனும் அறிஞர் அபைரா எனும் பழங்குடி மக்கள் மெசபடோமியாவிலிருந்து நதியைக் கடந்து, இந்தியாவின் உட்பகுதிக்கு வந்திருக்கலாம் என்று கருதுகிறார். அவர்களே
ஆபிரர்கள் எனப்பட்ட அஹீர்கள் என்கிறார்.’11
மகாபாரதத்தில் மௌசால பருவம் அவர்கள் பஞ்சநதத்திற்கு
அருகில் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறது. ‘அபீரியா
என வழங்கப்பட்ட ஆபிரர் நாடு, சிந்துவெளிப்
பிரதேசத்தில் அமைந்திருந்ததாக டாலமி குறிப்பிடுகிறார்’.12
மேற்கண்ட சான்றுகளை எல்லாம் நோக்குமிடத்து,
ஆபீரர்கள்
என்ற பழங்குடி ஒன்று இந்தியாவின் வடமேற்குப் பகுதிக்கு வெளியேயிருந்து வெகுகாலத்திற்கு
முன்பே சிந்து நதியைக் கடந்து இந்தியாவின் உட்பகுதிக்கு பரவியிருக்கவேண்டும் என்று
ஊகிக்கலாம்.
காலம்
இவர்கள் எந்த நூற்றாண்டில் பரவினர் என்பது விவாதத்திற்கு
வழிவகுப்பதாகவே உள்ளது. ஏனெனில்
பந்தர்க்கார்,ஜெயஸ்வால் போன்ற அறிஞர்கள் கி.பி.
ஒன்றாம்
நூற்றாண்டு வாக்கில் அவர்கள் பரவினர் என்று குறிக்கினர். ஆனால்
பதஞ்சலி முனிவர் இவர்களை ஆநிரவசிக (தூய்மையான)
சூத்திரர்13
என்று
பேசுவதால் இவரது காலமான கி.மு.
மூன்றாம்
நூற்றாண்டுக்கு முன்பே எனத் தெரிகிறது. ‘கி.மு.3இல்
ஆபிரர்கள் இந்தியாவிற்குள் நுழைந்திருக்கலாம்’14
என்று
ஜெயஸ்வாலும் சந்தேகிக்கிறார்.
கிடைத்திருக்கின்ற சான்றுகளின் அடிப்படையில் ஊகிக்கும்போது,
ஆபீரர்கள்
கிறித்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே சிந்து நதியைக் கடந்து தற்போதுள்ள
இராஜஸ்தான் பகுதிக்கு வடமேற்கு நதி ஓரத்தில் தங்கள் குடியேற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம்
என்று எண்ணத் தோன்றுகிறது. பின்னர்
அங்கிருந்து, மகாபாரதம்,
புராணங்கள்
குறிப்பிடுவதைப்போல அவர்கள் பஞ்சாப், மதுவனம்,
சொளராஷ்டிரம்,
கொங்கணம்
என்று சொல்லப்படக்கூடிய பகுதிகளில் பரவி வாழ்ந்திருக்கலாம் என்று அறியமுடிகிறது.
ஆபிரர்களின்
இனம்
ஏ.பி.
கர்மாகர்
புராணங்களின் சான்றுபடி ஆபீரர்கள் திராவிட இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்பார்.15
இவர்கள்
நாகரிகமடைந்த ஆரிய இனத்தினர் என்று பந்தர்கார் கூறுகின்றார்.16
மிராஷியும்
வேறு அறிஞர்களும் ஆபிரர்கள் ஆரியர்கள் வருதற்கு முன்பே பஞ்சாப் பகுதியில் வாழ்ந்து
வந்த பழங்குடிகள் என்கின்றனர்17.
‘சில சரித்திர ஆசிரியர்கள் ஆகிர், ஆபிரர் என்பவர்கள் திராவிடர்களின் சந்ததியினர்
என்று கூறியுள்ளதாக’18 சி.பி.லோகநாதன்
தெரிவிக்கின்றார்.
ஆபிர என்ற சொல்லுக்கு இடையர்,
மாடுமேய்ப்பவர்
என்று பொருள். இவர்களின் கடவுளான கிருஷ்ணன் என்ற
பெயர் கருமை என்ற பொருளைத் தருவதாகும். தமிழில்
வழங்கப்படும் கண்ணன் எனும் சொல்லுக்குக் கண்களையுடையவன்,
கருமை
என்று பொருள் கூறப்படுகிறது. ஆக இவர்கள்
திராவிடர்களைப் போன்று கருமைநிறம் கொண்டவர்கள் என்று கொள்வதில் தவறில்லை.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து பல்லாண்டுகள் கழித்தே
இவர்கள் இந்தியாவில் இடம்பெயர்ந்துள்ளனர். இதற்கு
தக்கதொரு சான்றாக,
கிருஷ்ணன்
இந்திர வழிபாட்டோடு கொண்ட முரண்பாட்டைக் கருதலாம். ‘ஆயர்பாடியைச்
சேர்ந்தவர்கள் (பழைய வழக்கப்படி)
இந்திரனுக்குப்
படையலிட முற்படுகின்றனர். கிருஷ்ணன்
அதைத் தடுக்கின்றான். நந்தகோபாலனை நோக்கி,
“தந்தையே! நாம்
உழவர்களுமல்லர், வணிகருமல்லர்.
இந்திரனுக்கும்
நமக்கும் என்ன தொடர்பு? கால்நடைகளையும்
மலையுமே நமது தெய்வங்கள்” என்கிறான்.
பின்னர்
தானே அந்த மலையாக நின்று அந்தப் படையலினை ஏற்கிறான். இந்திரவழிபாட்டைத்
தன்னை நோக்கித் திருப்பவே கிருஷ்ணன் இவ்வழியைக் கையாண்டான் என்று வில்கின்சன் கருதுகிறார்’19
என்று
தொ.பரமசிவம் கூறுகின்றார்.
யாதவரும்
கிருஷ்ணனும்
யாதவர்களோடு கிருஷ்ணன் இணைத்துப் பேசப்படுவதை பற்றி,
கோசம்பி
கருதுவதாவது, ‘இடைக்காலத்தில் யாதவர்கள் அல்லது ஜாதவர்கள் ஊதியத்திற்காக
பிராமணர்கள் அளித்த புரட்டான வம்சாவளியால் கிருஷ்ணருடைய யதுக்களுடன் பொருத்தப்பட்டுத்
திடீர் உயர்நிலையை அடைந்தவர்களாவர் என்றும், கிருஷ்ணனின்
கரிய நிறமும் பூர்வகுடி மக்களுடன் ஆரியர்கள் கொண்ட ஒருமைபாட்டும் ஒரு நன் நல்லிணக்க
முயற்சியாகவே கருதலாம்’ என்றும்
கருதுகிறார்.20
புராணங்கள், இதிகாசங்கள்
யாவும் கிருஷ்ணனை யயாதியின் வழியில் வந்தவன் என்றும், யாதவன்
என்றும் பேசுவது இப்படியான பெயர் கொண்ட இடைச்சமூகத்தோடு ஆபிரர் இனம் கலந்ததையேக் காட்டுகிறது.
பிற்காலத்தில்
கிருஷ்ணன் யாதவர்களின் கடவுள் என்றே பேசப்பட்டுள்ளான்.
தென்னிந்தியாவுடனானத்
தொடர்பு
தமிழகத்திற்கு பல்லாண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்து
வந்த வேளிர்கள் ஆபிரர்களாக இருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது.
இஃதுபற்றி
வேளிர் வரலாறு எழுதிய இராகவையங்கார் தரும் செய்திகளாவன,
தமிழகத்துப்
பண்டைக்கால முதலே உள்ள வேளிர் என்ற கூட்டத்தார் திருமால்வழியினராய்த் துவராபதியினின்று…
பண்டைவேளிர்
தமிழ் நாட்டுக் குடியேறிய காலம் கி.மு.10ஆம்
நூற்றாண்டாகக் கொள்ளுதல் ஒருவாறு பொருந்தும் மென்பதும், வேளிர்
பெருங்கூட்டந் தென்னாடு புகுந்து வாழ்ந்த வரலாறு இஃது என்பதும்,
அன்னோர்
பெருமை இன்னவென்பதும் புலப்படுமாறு கண்டுகொள்க.21
கண்ணனது
ஆபீர-யாதவர்கள்தாம் வேளிர்கள் என்று
இராகவையங்கார் கொள்வதாக நாம் இங்குக் கொள்ளலாம்.
‘கிருஷ்ணனின் வழிவந்த வேளிர்கள்
துவாரகையில் இருந்து, மராட்டிம்,
கர்நாடகம்
வழியாக தமிழகம் வந்தனர்’22 என்று
வரலாற்றில் யாதவர்கள் என்ற நூலை எழுதிய சி.பி.லோகநாதன்
கூறுகின்றார்.
ஆபீரர்களின் அரசு மேற்கு தக்காணத்தில் சாக சத்திரபர்கள்,
சாதவாகனர்
கீழ் சுறுசுறுப்பாக இருந்துவந்துள்ளதாக ஜெயஸ்வால் கூறுகின்றார்.
கி.பி.181ஆம்
ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு பாபகன் என்னும் ஆபிர சேனாதிபதியின் மகனாகிய சேனாதிபதி ருத்ரபதியைப்
பற்றிப் பேசுகிறது. நாசிக்குகைக் கல்வெட்டொன்று
கி.பி.3 சேர்ந்த
ஈஸ்வர சேனர் என்னும் ஆபிரர்களின் அரசரைப் பற்றிக் குறிப்படுகிறது.23
கி.பி.
முதல்
நூற்றாண்டுக்கு முன்புத் தொடங்கி இவர்களது ஆட்சி பற்றிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன.
தமிழகத்தில்
கிருஷ்ண வழிபாடு
இராகவையங்கார், லோகநாதன்
ஆகியோர்களது கருத்துப்படியும், மேற்கண்டவாறு,
தென்னிந்தியப்பகுதியில்
ஆபிரர்களது தொல்லியல் சான்றுகள் படியும் அன்னோர் தென்னிந்தியப் பகுதிகளில் பரவியதை
எடுத்துக்காட்டுகின்றன. கண்ணன்
வழிவந்தோர் தமிழகத்திற்கு குடிபெயர்ந்தனர் என்பது இதன் மூலம் அறியற்பாலது. இவர்களின்
ஒரு பிரிவினரோ அல்லது வேளிர்கள்
என்று அழைக்கப்பட்ட ஆயர் அரசர்களாகவோ இருக்கலாம் என துணியலாம்.
அப்படியாயின்
இவர்கள்தாம் தமிழகத்தில் கிருஷ்ண வழிபாட்டை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும்.
தமிழகம்
வந்த ஆபிரர்கள் என்ற வேளிர்களின் கிருஷ்ண வழிபாடு, தமிழக
இடையர்களுடைய இடையர் தெய்வ வழிபாடான ‘மால்’
வழிபாட்டோடு
விரவப்பெற்றிருக்க வேண்டும். ‘முல்லை
நிலத் தெய்வமான மால் வழிபாட்டோடு புராணங்கள் கூறும் கிருஷ்ணாவதார செய்திகளும் கலந்துவிட்டதைச்
சங்கப் பாடல்களில் காணலாம்’24 என்ற
தொ.பரமசிவத்தின் கூற்று,
மேற்கூறிய
கருத்திற்கு அரண் செய்யும். இராகவையங்கார்
சொல்வதைப்போன்று அவர்கள் கி.மு.10ம்
நூற்றாண்டில் தமிழகம் வந்தனர் என்பதற்கு போதிய சான்று இல்லாத அதே சமயத்தில்,
கிடைத்துள்ள
சான்றுகளின் அடிப்படையில் அவர்கள் கி.மு
3ஆம் நூற்றாண்டளவில் தமிழத்திற்கு வந்திருக்கலாம் என்று துணியலாம்.
‘நாடோடி இனத்திற்கு தடையற்ற பாலுறவு,
விளையாட்டு
புத்தி, சிற்றின்ப நாட்டம் ஆகியவை இயல்பு’
என்ற
ஜெயஸ்வாலின் கருத்து, சங்க இலக்கியத்தில் உள்ள
கலித்தொகை- முல்லைக்கலி பாடல்களில் எதிரொளிப்பதைக்
காணலாம்.
அடிக்குறிப்புகள்:
- சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.14
- ஆர்.எஸ். சர்மா, பழங்கால இந்தியாவின் அரசியல் கொள்கைகள் சில தோற்றங்கள்,2010 ப.23.
- சி.பி.லோகநாதன், வரலாற்றில் யாதவர்கள்,2001, ப.26.
- சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும், 1991, ப.104.
- R.G.Bhandarkar, Vaisnavism Saivism and Minor Religious System, 1913. p.51.
- டி.டி.கோசாம்பி, பண்டைய இந்தியா,2006,ப.207.
- சி.பி.லோகநாதன், வரலாற்றில் யாதவர்கள்,2001, ப.23
- மகாபாரதம், மௌசால பருவம், http://prramamurthy1931.blogspot.in/2013/01/mahabharata-mausala-parva.html/23-01-2014.
- சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.106-107.
- பி.வி.ஜகதீச ஐயர், புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்,2009, ப.20 &165.
- en.wikipedia.org/wiki/Abhira_tribe/23-01-2014.
- Sudhakar Chattopadhyaya, Evolution of Hindu Sects, 1970, p.72
- சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.106-107
- மேலது, ப.107
- en.wikipedia.org/wiki/Abhira_tribe/23-01-2014.
- R.G.Bhandarkar, Vaisnavism Saivism and Minor Religious System,1913. p.52.
- சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.105
- சி.பி.லோகநாதன், வரலாற்றில் யாதவர்கள்,2001, ப.24.
- தொ.பரமசிவம், பண்பாட்டு அசைவுகள்,2001, ப.138.
- டி.டி.கோசாம்பி, பண்டைய இந்தியா,2006,ப.256.
- மு.இராகவையங்கார், வேளிர் வரலாறு, 2004, ப.45-47.
- சி.பி.லோகநாதன், வரலாற்றில் யாதவர்கள்,2001, ப.29
- சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.107.
- தொ.பரமசிவம், பண்பாட்டு அசைவுகள்,2001, ப.139.
No comments:
Post a Comment