நல்ல மையிருட்டு. மணி
என்னவோ 7.30தான். இப்போதெல்லாம்
சீக்கிரமே இருள் கவ்வத் தொடங்கியிருக்கிறது. சுமார்
80, 85 மாணவர்கள் அந்தப் பெரிய பிரேயர் ஹாலில் படித்துக்
கொண்டிருந்தார்கள். பள்ளிக்கூடம் விட்டதுமுதல் பெரிய
விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் எல்லோரையும் படிப்பிக்கச்
செய்யும் மணி மாலை ஐந்து மணிக்கு அடிக்கும்.
இம்மணியழைப்பைக்
கேட்டதும், அவரவரது அறைகளுக்குத் திரும்பி, கைகால்களை அலம்பி விட்டு, நெற்றியில்
திருநீற்றையிட்டுக் கொண்டு படிக்க வேண்டிய புத்தகங்களோடு மைதானத்திற்குச் செல்ல
வேண்டும். மைதானத்தை யொட்டியுள்ள விடுதியின் வாயிலில் ஒன்றுகூட
வேண்டும். எல்லோரும் வந்து சேர்ந்தபின்,
பிரேயர் தொடங்கும்.
மாசில் வீணையும் மாலை
மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
x
பாடிவிட்டு, சரியாகச் சொல்வதானால்
ஒப்பித்துவிட்டு அப்படியே எல்லோரும் அமர்வார்கள். வார்டன்
வருவார். வருகைப்பதிவேட்டை பதிவுசெய்வார். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அந்த விடுதியில் படிக்கிறார்கள்.
‘ஆறாவது சொல்லு’ என்பார்.
‘அன்பரசன் பிரசண்ட் சார்’…
‘ஆனந்து பிரண்ட் சார்’… ‘கணேசன் பிரசண்ட் சார்’… இப்படியே
அவரவர் பெயரை பிரசண்ட் சொல்லி தம்இருப்பைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பதிவு செய்தபின், எல்லோரும் கலைந்து சென்று இரண்டு மூன்று அடி இடைவெளியில் மைதானத்தில் அமர்ந்து
படிக்கத் தொடங்கவேண்டும்.
இவர்கள் சென்று
அமரும்வரை, இன்னொரு கூட்டம் ஓரமாக ஒதுங்கி நிற்கும். அவர்கள் இரண்டு மூன்று நிமிடங்கள் லேட்டாக வந்தவர்கள். பத்து பன்னிரெண்டு பேர் இருப்பார்கள். ஒவ்வொருவரும்
வரிசையாக வந்து, வார்டனிடம் கையிலும் பின் பிருஷ்டத்திலும் நான்கைந்து
அடி வாங்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் பெரிய கூட்டத்தில் சென்று கலந்து
விடுவார்கள்.
விடுதிக்காப்பாளர்
ஒரு சர்வாதிகாரி. அவர் முன்பு யாரும் பேசக்கூடாது. காலை நீட்டி உட்காரக்கூடாது. கையைக்கட்டிக் கொண்டுதான்
நிற்கவேண்டும். அவர் ஏதாவது கேள்வி கேட்டால் மட்டும் பதில்
சொல்ல வேண்டும். எந்த வேலையையும் சொல்லி முடித்தவுடன்
செய்துவிட வேண்டும். மூத்திரம் போகக்கூட அவரிடம்தான் கேட்க
வேண்டும். தவறு செய்துவிட்டாலோ, அல்லது
விடுதி காம்பெளண்ட்டை விட்டு வெளியே சென்று விட்டாலோ அவ்வளவுதான். பெரிய பூசை போட்டுவிடுவார். இப்படியெல்லாம் செய்தால்
அதற்கு பெயர் சர்வாதிகாரத்தனம்தானே?
ஏதாவது
தவறுசெய்துவிட்டு மாட்டிக்கொண்டால், கிட்ட- நெருங்கி வந்து, தன்னுடைய பெரிய கையை விரித்து, கன்னத்தின் மேல்
பகுதியில் செவியோடு சேர்ந்து அறைவாரே பார்க்க வேண்டும்… பார்ப்பவர்களுக்கே
கதி கலங்கிவிடும். காது மடலைப் பிடித்துக் கிள்ளுவார்.
சிலசமயம் ரத்தமே வந்துவிடும். பிரம்பை எடுத்து
கண்முகம் பாராமல் விளாசுவார். அவருக்குப் பொழுதுபோகவில்லை
என்றால், ‘போன மிட்டம்டெஸ்ட்டுல எவ்ளோ மார்க்குடா நீ’
என்று கேட்டு சாத்துசாத்துவென்று சாத்துவார். சனி,
ஞாயிறுகளில் குடித்துவிட்டு அடிப்பது அவரது விசேசம். சரியான குரூரன் அந்த வார்டன்.
மைதானத்தில்
வரிசையாகப் படித்துக் கொண்டிருப்பவர்களில் சிலர் உண்மையாகவே படிப்பார்கள். சிலர்
சத்தம் வராமல் அரட்டையடித்துக் கொண்டிருப்பார்கள். நேரமாக ஆக, இருட்டத்
துவங்கிவிடும். இருட்டினவுடன் எல்லோரும் வரிசையாக எழுந்து,
முதல் மாடியில் உள்ள பிரேயர் ஹாலில் சென்று முன்புபோலவே வரிசையாக
அமர்ந்து முன்செய்ததையே செய்வார்கள். வரிசையாக யாவரையும்
அழைத்துச்செல்வது ‘சினியர் குண்டர்கள்’. அந்த சர்வாதிகாரியின் கட்டளைகளை கண்ணும் கருத்துமாக நிறைவேற்றும் குண்டர்கள்.
இதற்காக அவர்களுக்குச் சன்மானமெல்லாம் கிடைக்காது. அடிவாங்காமல் தப்பித்துக் கொள்ளலாம் அவ்வளவுதான். இவர்கள்
இரண்டு பேர், ஹாலின் வாயிலிலேயே உட்கார்வார்கள். உள்ளே யாரெல்லாம் பேசிக்கொள்கிறார்களோ, அவர்களது
பெயர்களைப் பெரிய பட்டியலிட்டு, இரவு உணவின்போது வார்டனிடம்
கொடுத்துவிடுவார்கள். ‘கரும்பு தின்ன கூலியா’ என்பது போல, அந்த காட்டு யானை எல்லோரையும் துவம்சம்
செய்துவிடும்.
அன்று 7.30 மணியளவில்,
வார்டன் எங்கோ வெளியே போயிருப்பதாக பேசிக்கொண்டார்கள். அதனால் ஹாலில் குண்டர்கள் உட்பட எல்லோரும் வழக்கத்திற்குமாறாக அரட்டையடித்து
கொண்டிருந்தார்கள். ஹாலின் வடக்குப் பக்கத்தில் சன்னலோரம்
கதிர் உட்கார்ந்திருப்பான். எப்போதும் அங்குதான் அவன்
உட்காருவான். கதிர் பத்தாம் வகுப்பு
படிக்கிறான். நல்ல படிப்பாளி. எப்போதும்
முதல் மதிப்பெண் வாங்கக்கூடியவன். வார்டன் இல்லை என்றதும்
எல்லோரையும் போல இவனுக்கும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. சன்னலின்
வெளியே இருட்டையும் மின்மினிப்பூச்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த சன்னலுக்குக் கீழேதான் விடுதியின் ஸ்டோர் ரூம் உள்ளது.
இந்த ஸ்டோர் ரூம்தான், அவன்
வாழ்நாளெல்லாம் மனதில் கருவிக்கொண்டும், எப்போது
நினைத்தாலும் ஒருவித அவமானம் அவனைக் கூனிக்குறுகச் செய்வதுமான நிகழ்வு ஒன்றை
உருவாக்கிட்டது, என்ன நடந்திருக்கும்? அவன்
மூலமே கேட்போம்..
நான் கதிர். எங்க
பள்ளிக்கூடத்துலயே நாந்தான் மொத மார்க் எடுப்பேன். அன்னிக்கு
அந்த ஒரு நிகழ்ச்சி மட்டும் நடக்காம இருந்திருந்தா, என்னோட
வாழ்க்கையே மாறியிருக்கும்…. அப்படி என்ன நடந்ததுன்னு
கேக்குறீங்களா.. சொல்றேன்..
அன்னிக்கி, வார்டன்
இல்லன்னு எல்லாரும் அரட்ட அடிச்சிக்கிட்டு இருந்தானுங்க.. எனக்கு
ரொம்ப சந்தேசமா இருந்துச்சி.. அப்படியே கட்ட அவுத்துவிட்டா
மாதிரியும், ரொம்ப நேரமா நெஞ்சு மேல ஒக்காந்திருந்த ஒருத்தரு
எந்திரிச்சிப் போனது போல ஃபிரியாவும் இருந்துச்சி… நான்
வெளையாட்டா.. சன்னல்ல வெளியே பாத்துக்கிட்டு இருந்தேன்.
எங்க ஹாஸ்டல்ல ராத்திரில நிறைய மின்மினிப்பூச்சிங்க வரும். அன்னிக்கு அததான் நான் பாத்துக்கிட்டு இருந்தேன். அப்போதான்
அது நடந்தது. அத மட்டும் நான் பாக்காம இருந்திருக்கணும்!
எல்லாம் விதி.. என்ன இப்படி பீடிகை போடுறானே, அப்படி என்ன நடந்திருக்கும்னு கேக்குறீங்களா,
சொல்றேன் கேளுங்க..
நான்
மின்மினிப்பூச்சிய பாத்துக்கிட்டு இருந்தேன். ஒரே இருட்டு. மின்மினிப்பூச்சி வெளிச்சத்தத்தவிர வேற எதுவும் தெரியல.. பாக்க ரொம்ப ரம்மியமா இருந்துச்சி.. அப்போதான் அது
நடந்துச்சி… அந்த இருட்ட கிழிச்சிக்கிட்டு ஒரு வெளிச்சம்
வந்துச்சி… ஒளி ஒரு குறிப்பிட்ட திசையில பாயுற மாதிரி
கட்டுக்கோப்பா, நான் நின்னுக்கிட்டு இருந்த சன்னலுக்குக் கீழ
பாத்து வந்துச்சி… என்னனு உத்துப்பாத்தேன். பசங்க சத்தத்துல அந்தச் சத்தம் கேக்கல.. யாரோ
ஒரு தடியான ஆளு, அவரோட ஸ்கூட்டர்ல வாறாரு. அந்த நேரத்துல, அதும் ஸ்கூட்டர்ல, அங்க யாரு வருவா? எதுக்காக வரணும்… நான் அத பாத்துக்கிட்டே இருந்தேன்.
நான் பாத்துக்கிட்டு
இருக்குற சன்னலுக்குக் கீழதான் ஸ்டோர் ரூம்னு சொன்னேன்ல.. அந்த
ஸ்டோர் ரூம் பக்கமா வந்து வண்டிய நிறுத்திட்டு லைட்ட ஆஃப் பண்ணிட்டாரு அந்தத்
தடியான ஆளு. கொஞ்ச நேரத்துல, ஸ்டோர்
ரூம் கதவு திறந்துச்சி… உள்ளேயிருந்து இன்னொரு ஆளு வந்தாரு..
ஒல்லியான ஒடம்பு, லொலொடன்னு ஒரு சட்ட, இடுப்புல கைலி, திருதிருன்னு திருட்டுமுழி, சார்ப்பான
மூக்கு, கத்தையா மீச… ஆமாமா… எங்க வார்டன்தான்… அந்தாளு என்ன, திருடன் மாதிரி ஸ்டோர்ரூம் வெளிகதவு வழியா வாறாரு. ஸ்டோர்
ரூமோட வெளிகதவ, ஸ்டோர் சாமான்லாம் வரும்போதுதான் தெறப்பாங்க..
அதும் வாரத்துக்கு ஒரு மொற. இப்போ யான்
தெறந்து அவர் வெளியே வரணும்??
நான் இதோட
நிறுத்திக்கிட்டு, என்ன நடந்தா நமக்கென்ன? நாம
யேம்பாக்கணும்னு உட்காந்திருக்கணும்.. அதுதான் நாந்செஞ்ச
பெரிய தப்பு. விடாம பாத்துக்கிட்டே இருந்தேன்.. ஏதோ நடக்கப் போவுது... என்ன
நடக்குமோன்ற ஆர்வத்துல விடாம பாத்தக்கிட்டே இருந்தேன்.
அந்தத் தடியான ஆளு
கிட்ட, இந்த ஆளு (வார்டன்) என்னவோ பேசினாரு. கொஞ்ச நேரம் பேசியிருப்பாங்க..
அப்பறம் இவரு, உள்ள பாத்து கைய ஆட்டினாரு..
ரெண்டு பேரு.. சீனியர் தடியனுங்க.. வந்தானுங்க… சும்மா வரல.. ஒரு
மூட்டைய தூக்கிட்டு வந்தானுங்க.. அதக் கொண்டுவந்து வெளிய
போட்டுட்டு, உள்ளபோயி இன்னொன்னயும் கொண்டு வந்து வெளியே
போட்டானுங்க..
ஹால் சன்னல் வழியா
வெளிய அடிச்ச வெளிச்சத்துல கொஞ்சம் இதெல்லாம் தெரிஞ்சது. ரெண்டு
மூட்டைங்களயும் அந்தத் தடியான ஆளு, ஸ்கூட்டர்ல ஒன்னொன்னா
தூக்கி வச்சி கட்டினாரு. நல்லா இருக்கிக்கட்டிட்டு, வார்டன்கிட்ட வந்து, ஐந்நூறு ரூவா நோட்டுகள கொஞ்சம்
எடுத்துக்குடுத்தாரு. அது எவ்ளோ இருக்கும்னு தெரியல. அஞ்சு, ஆறு நோட்டு இருக்கலாம்.
எல்லாம் முடிஞ்சது. தடியான
அந்த ஆளு, வண்டிய கிளப்ப ஒதச்ச போது,
தீடீர்னு ஸ்டார்ட்ஆன வண்டியோட லைட்டு, சரியா
எம்மூஞ்சில அடிச்சிது.. ஒரே நேரத்துல ரெண்டு பேரும்
பாத்துட்டாங்க.. வார்டன் ஒடனே… நல்ல
பாம்பு சீறுராபோல… ‘டேய்…’ன்னு
கத்தினாரு.. எனக்கு என்னப் பண்றதுன்னே தெரியல.. திடுதிப்புன்னு கால மடக்கி கீழெ உட்காந்துட்டேன். அவரு
என்ன அடையாளம் கண்டுருப்பாரோ? மாட்டாரு… பாதிவெளிச்சத்துல மொகம் எப்படி தெரியும்? இல்லயே…
அவரு பேர சொல்லி அதட்டினாரே… ஐயையோ… நான் என்ன செய்வேன்??!! அவர் பாத்துட்டாரு..
என்ன நடக்கபோவுதோ?? எனக்கு
என்ன செய்யறதுன்னு தெரியல. அந்தச் சன்னல்மேல கோவமா வந்துச்சி..
எனக்கு அழ வந்துடுச்சி… உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பிச்சிடுச்சி… காலுலாம் நடுங்க
ஆரம்பிச்சிடுச்சி.. நெஞ்சு படபடன்னு அடிக்க ஆரம்பிச்சிடுச்சி.. சொரமே வந்துடும்போல இருந்துச்சி.. எப்படியும் எனக்கு
அடி இருக்கு (!)
டங்…டங்..டங்..டங்..டங்…
மணி 8.00. சாப்பாட்டு மணியடிச்சிடுச்சி.. எல்லாரும் அவங்கவங்க
ரூமுக்கு போயி, தட்டு, தம்ளரு, கூட்டு கிண்ணம் எடுத்துக்கிட்டு, தண்ணித்தொட்டியில
கழுவிட்டு, நேர சாப்பாட்டு ஹாலுக்குப்போயி உட்காரணும்..
எல்லாரும் போக ஆரம்பிச்சாங்க.. எனக்குப் பசிக்கல..
அந்த வார்டன நெனச்சாலே… ஐய்யோ… அவரு அடேய்னு கத்துனாரே? என்ன ஒரு உக்குரம்!
அதக் கேட்டு பசியும் எடுக்குமா?
நான் போலாமா
வேண்டாமான்னு நெனச்சேன். போகலன்னா, அட்டணென்ஸ் எடுக்கும்
போது இல்லன்னு, ஆளுங்கள விட்டு புடிச்சிட்டு வரச்சொல்வாரு.
என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டுக்கிட்டு கொஞ்சம்
தட்டுதடுமாறி சாப்பாட்டு ஹாலுக்கு வந்து சேந்தேன். எப்பவும்
சாப்பாடு போடுறதுக்கு முன்னாடி வந்திடணும். நான் லேட்டா
வந்துட்டேன்!
உள்ளே போயி உட்கார போனேன்.. என்னப்பாத்து, ஓரமா
நில்லுன்னாரு. நான் குடிக்கிற தண்ணீர் குண்டான் ஓரமா
நின்னேன். ஹால்ல ஒரு சத்தமும் இல்ல..
க்ரீச்…க்ரீச்… டம்…டம்…
இப்படிச் சாப்பாட்டு
வண்டிய இழுக்குற சத்தமும், அன்னவெட்டி சத்தமும்தான்
கேட்டுச்சி.. சாப்பாடு போட்டு முடிச்சாச்சி.. அடுத்து பிரேயர்தான்.. ஆனா, அதுக்கு
முன்னாடி தெனம் நடக்குற ஒரு விசயம்., படிக்கும் போது
பேசினங்களுக்கு அடி கொடுக்குறது. அன்னைக்கு யாருமில்ல..
யாரும் லிஸ்ட்டு எடுக்கல..
போச்சுடா… எல்லாருக்கும்
சேத்து எனக்கே விழ போகுதோ? அட்டணென்ஸ் எடுத்தாரு.. முடிச்சதும் அவர் என்னப்பாத்தாரு. எல்லாரும்
அவர் என்னப்பாக்குறத பாத்தானுங்க.. ஒரே அமைதி!
‘இங்க வா..!!’
கிட்டக்க போனேன்..
ஓங்கி ஒரு அர
அரஞ்சாரே நீங்க பாக்கணும்!.. நான் ஒடுங்கி போயி, நெல தடுமாறி, தலைய
புடிச்சிக்கிட்டு தண்ணீர் குண்டான் பக்கமா விழுந்தேன். தல
பயங்கரமா வலிச்சிது. கன்னம் விர்..விர்..னு வலிச்சது.. காது செம வலி.. நிக்க
முடியல... சுத்தலா இருந்துச்சி.. கீழெ விழப்போனேன்.
போன மாசம், தீப்பிடிச்சா எப்படி அணைக்கனும்னு நிறைய
போலீசுகாரங்க வந்து டெமோ காட்டிட்டு போனாங்க. அவங்க
விட்டுட்டுபோன ஒரு லட்டி இருந்துச்சி.. அத வச்சிக்கிட்டு
கிட்டக்க வந்து, சரமாரியா அடிக்க ஆரம்பிச்சிடாரு. அந்த லட்டி என்னோட ஒயரம் இருந்துச்சி.. நல்ல வளைஞ்சிக் கொடுத்துச்சி..
மனுசன் விலாசு.. விலாசுன்னு விலாசுனாரு.. ஒரு கையால தூக்கி ஒரு நாலு மொறதான் அடிச்சாரு. அவரால தூக்கி அடிக்க
முடியலன்னு, ரெண்டு கையாலயும் தூக்கி, வெலாசுனாரு..
அடி ஒன்னொன்னும் உயிர் போறமாதிரி விழுந்துச்சி.. கழுத்து,
தலை, இடுப்பு, பட்டைக்சு,
தொட… வஞ்சனையே இல்லாம அடிச்சாரு.. சுல்லு சுல்லுன்னு விழுந்த அடி சதைய நல்லா பதம்பாத்துச்சு.. கொஞ்சம்கூட
கருணையே இல்ல அந்த ஆளுக்கு!
‘ஏண்டா லேட்டா வந்த’ ன்னு கேட்டு விடாம அச்சாரு… நான் கத்தினேன்..
அடி தாங்க முடியல.. ‘சீக்கிரம் வறேன் சார்’ன்னு கெஞ்சினேன்.. ‘விட்டுடுங்க.. விட்டுடுங்கன்’னு திரும்பத்திரும்பச் சொன்னேன்..
அந்த ஹாலே என்னோட சத்தத்துல நிறைஞ்சிடுச்சி.. அங்க என்னோட குரல்
மட்டும்தான் கேட்டுச்சி.. அடி தாங்க முடியாம கீழ விழுந்துட்டேன்... அப்பயும்
விடல.. மாத்தி மாத்தி அடிச்சாரு.. எங்க அடிக்கிறாருன்னு அவருக்கே தெரியல...
முட்டியிலயும், முழுங்காலுலயும் விழுந்த அடி உயிர்போறமாதிரி
இருந்துச்சி.. உடம்பெல்லாம் நனஞ்சிப்போச்சி... சத்தம்போட்டு அழுதேன்.. அந்த மிருகம்
கொஞ்சம்கூட காதுல வாங்கிக்காம அடிச்சிது.. என்னோட அலறல் சத்தம் ஹால்ல
இருந்த பசங்களுக்கெல்லாம் பயத்த உண்டாக்கிடுச்சி.. அவங்க எல்லாரும் பயந்து,
கப்சிப்னு உட்காந்திருந்தாங்க.. இதுவரைக்கும் இப்படி யாரும்
அடிவாங்கினதில்ல.. அடிவிழுந்த ஒவ்வொரு எடமும் சத கண்ணிப்போயி, ரத்தம் கட்டிக்கிச்சி.. ஒதடு பிஞ்சி ரத்தம்
வந்துடுச்சி… ஒடம்பெல்லாம் கண்டுகண்டா வீங்கிடுச்சி..
சக்கையா பிழிஞ்சிட்டாரு.
அவருக்குக் கை வலிச்சிது
போல.. ஒரு வழியா என்ன அடிக்கறத நிறுத்திட்டாரு. அதுக்கு முன்ன கடைசியா கை முட்டியில விழுந்த அடியில, மூட்டு நழுவிடுச்சி. அப்பவே செத்திடலாம் போல
இருந்துச்சி, வலி. காட்டு கத்தல்
கத்தினேன். போய் சாப்டுன்னு சொல்லிட்டு அங்கிருந்து
போயிட்டாரு. ஹால்ல ஒரு சத்தம் இல்ல.. எல்லாரும்
பதறிப்போயி பாத்தாங்க.. என்மேல பரிதாபப்பட்டாங்க.. கண்ணாலேயே எனக்கு அனுதாபப் பட்டாங்க. இது ஒரு
20 நிமிசம் நடந்திருக்கும். சாப்பாடு போட்டு 20 நிமிசம் கழிச்சி, பிரேயர் ஆரம்பிச்சது..
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
நிக்கக்கூட முடியாம
ஒரு ஓரமா நொடிச்சிக்கிட்டு, கைய நீட்டி மடக்க முடியாம, வரிசையில
போயி கடைசியா நின்னேன். கண்ணுலருந்து தண்ணீர் நின்னபாடு இல்ல..
அது பாட்டுக்க வழிஞ்சிக்கிட்டே இருந்துச்சி… எனக்கு
என்மேலயே வெறுப்பு வந்திடுச்சி… ஏன் அடிக்கிறாருன்னு எல்லார்
முன்னாடியும் சொல்லிடலாமா? யோசிச்சேன்.. ஆனா, பாதிபேருக்கு இவரு பண்ற பிராடுத்தனம் தெரியும்.
தெரிஞ்சும் அவருக்குத் தெரியாம பாத்துக்கிட்டாங்க. நாந்தான் வெவரம் இல்லாம என்ன நடக்குதுன்னு உத்துப்பாத்து மாட்டிக்கிட்டேன்.
எல்லாரும் சாப்ட
ஆரம்பிச்சாங்க..
என்னால உட்கார முடியல.. கால
மடக்க முடியல.. மூட்டு நழுவின கைய அசைக்காம, கால விரிச்சி ஒக்காந்துக்கிட்டு, சோத்தப்பாத்தேன்.. இத
சாப்டணுமா??
எனக்காக குமார் ரொம்ப
வருத்தப்படான்.. என்கூட படிக்கிறான். க்ளோஸ்
பிரண்டு. வார்டன அசிங்க அசிங்கமா
திட்டினான்…
நான் அழறத மட்டும்
நிறுத்தல.. நிறுத்தணும் நினச்சாகூட அது நிக்கல.. அவன் எவ்ளோ வற்புருத்தியும் நான் சாப்டல.. மெதுவா
எந்திரிச்சி சாப்பாட்டக் கொண்டுபோயி கொட்டிட்டு, தட்டு
தடுமாறி நடந்து ரூமுக்குப் போய் படுத்துட்டேன்.. ஒடம்பெல்லாம்
செம வலி..
அப்போ மாஸ்டர் வந்தாரு. அவர்
சமையல் மாஸ்டர். அப்படிதான் கூப்டுவோம். அவரும் அந்த விடுதியிலேயே தங்கியிருப்பாரு. என்னை
வார்டர் அடிச்சத பாத்துக்கிட்டேதான் இருந்தாரு. அவரால
ஒன்னும் செய்யமுடியாதுன்னு தெரியும். “நீ ஏன்பா அந்த
கேடுகெட்டவன் கிட்ட மாட்டின… எங்க அவன் பண்ணினத நீ யார்ட்டயும்
சொல்லிடுவியோன்னு இப்படி அடிச்சிருக்கான்.. அதோட, அவன் தனியா இருக்கான்ல.. அதான்… ரொம்ப புழுக்கத்துல வேற இருக்கான்… இந்த நேரம்பாத்து
நீ மாட்டிக்கிட்ட…” அப்படின்னு சொல்லிட்டு, கையோட கொண்டு வந்திருந்த எண்ணைய கையில விட்டு நீவி விட்டுட்டு கொஞ்ச
நேரத்துல அங்கிருந்து போயிட்டாரு.…
இவர் ஒன்னும்
யோக்கியமில்ல… அந்த ஆளு அடிக்கிற கொள்ளையில இவருக்கும் பங்கு உண்டு.
காய்கறி, அரிசியில மட்டும்
கொள்ளையடிக்கிறதில்ல… புண்ணியத்துக்காக எங்களுக்கு வர்ற துணி,
பால்-பிட்கட்டு, சோப்பு,
ரொக்கமா குடுக்குற பணம்.. இப்படி எல்லாத்துலயும்தான்
கொள்ளையடிக்கிறாரு… இது பசங்க எல்லாருக்கும் தெரியும்.
ஆனா, யாரும் பாத்தது இல்ல… இன்னிக்கி நான் மாட்டிக்கிட்டேன்…
இனி எவன் பாத்தாலும் எப்படி அடிவிழும்னு என்ன அடிச்சிக்காட்டிட்டாரு.
யாரும் வாயதெறக்கமாட்டாங்க!
எனக்கு என்ன
செய்யறதுன்னு தெரியல.. எதப்பத்தியும் யோசிக்க முடியல.. நீங்க சொல்லுங்க.. இதுக்கு
மேல நான் இங்கிருந்து படிக்கணுமா… நான் படிக்கத்தான் வேணுமா??
இது முட்டாள்தனமா இருக்கும்.. இதுக்காக படிப்பையே விட்டுடுவியான்னு
நீங்க கேப்பீங்க.. எனக்கு செத்திடுவனோன்னு பயம் வந்துடுச்சி.. இங்க இல்லன்னாலும்
வேற எங்கயாவதுபோய் படிக்கலாம்.. ஆனா, படிக்கவக்க
முடியலன்னுதான் இந்த நரகத்துல கொண்டு வந்து சேத்தாங்க.. ரொம்ப நேரம் கை வலியோட அழுதுகிட்டே இருந்தேன்.
எப்படியும் இன்னைக்கு ராத்திரி நான் ஆஸ்டல விட்டு ஓடிடுவேன்னு எல்லாரும்
எதிர்பாத்தாங்க.. நிறைய பேரு அடிதாங்காம இப்படிதான்
ஓடியிருக்காங்க.. நானும் ஓடிடலாமான்னு யோசிச்சேன்.
***
காலையில் வழமைபோல் 5 மணிக்கு மணியடித்தது. எல்லோரும் எழுந்து குளித்துவிட்டு, நெற்றியில் திருநீற்றையிட்டுக்கொண்டு, 6 மணிக்கு பிரேயர் ஹாலில் படிக்க வேண்டிய புத்தகங்களோடு ஒன்று கூடினார்கள். கதிர் கை வலியோடு, முன்வரிசையில் உட்கார்திருந்தான். மெயின் ஆஸ்டலில் இருந்து, சீனியர் வார்டன் வந்திருந்தார். அவர்தான் அட்டனென்ஸ் எடுத்தார். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்.. ஒவ்வொருவரையும் எதிர்காலத்தில் என்னவாக போவதாக விசாரித்துக்கொண்டிருந்தார். “போலிஸ், இஞ்சினியர், ஆசிரியர், டாக்டர், கலெக்டர்..” என்று சொல்லிக்கொண்டே வந்தார்கள். அடுத்து கதிர்.. அந்நேரத்தில் அந்த விடுதி வார்டனும் அங்கு வந்து அமர்ந்தார்…
கதிர், அவரைப் பார்த்துக்கொண்டே…
“நான் வார்டனா ஆகப்போறன் சார்” என்றான்.
No comments:
Post a Comment