Saturday, July 12, 2025

உதறப்பட்ட உறவு

மிகவும் பரபரப்பான பகுதி அது. எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். சில்லறையைச் சிதறவிட்டாற்போல மக்கள் அங்கும் இங்கும் போய்க்கொண்டும் வந்துக்கொண்டும் இருப்பார்கள். பரபரப்பான அம்மாநகரத்தில் பெரும்பாலான ஊர்களில் இப்படிதான். சிக்னலுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் வாகனவோட்டிகள் பச்சை விளக்கைப் பார்த்தவுடன் போட்டிப் போட்டுக்கொண்டு நான் முந்தி, நீ முந்தி என்று ரேஸ் வைப்பார்களே அப்படிதான், தாம் போகின்ற அவசரத்தில் யாரையும் ஏறெடுத்துக்கூட பார்க்க மாட்டாது கடிவாளமிட்ட குதிரைப் போல வழியில் எதைக்காணவும் விரும்பாது செல்வார்கள். யாரேனும் மயங்கி விழுந்து விட்டால்கூட அவர்களை எழுப்பி, உதவி செய்யும் அளவிற்கு அங்கு யாருக்கும் நேரம்மும் இருக்காது. எவராவது ஓரிருவர் பரிதாபப்பட்டு உதவினாலொழிய மயங்கிக்கிடப்பவர் அப்படியே கிடக்க வேண்டியதுதான். போகிற அவசரத்தில் வேடிக்கைப்பார்க்க வேண்டுமானால் ஓரிரு நிமிடங்களை ஒதுக்கிப் பார்த்துவிட்டு பரிதாபப்பட்டு ஐயோ..பாவம் என்று சொல்லிவிட்டு, நின்றிருந்த அந்த இரண்டொரு நிமிடங்களைச் சரிகட்ட விரைந்து நடப்பார்கள் இந்தச் சிக்கார நகரவாசிகள்.

அந்தப் பகுதியையடுத்தாற்போல ஓர் இரயில் நிலைமுண்டு.  இரயில் நிலையத்திலிருந்து மேம்பாலத்தையொட்டி சிறிது தூரம் கிழக்கு நோக்கி நடந்தால் பேருந்து நிலையம் வந்துவிடும். இந்தப் பேருந்து நிலையத்திற்கும் இரயில் நிலையத்திற்கும் இடைப்பட்டப் பகுதி இருக்கிறதே.. அது யுத்தகளத்தைவிட கொடூரமானது. இதைத்தாண்டிவிட்டால் இரயில் பயணமும் மறுபக்கம் பேருந்து பயணமும் என பயணப்பகுதியாகிவிடுமாகையால், இதற்கு இடைப்பட்டப் பகுதி சமூகவியல் ஆர்வலர்களைக்கூட முகஞ்சுழிக்கச்செய்யும் அளவிற்கு முரண்பாடுகள் நிறைந்த பிரதேசமாக எப்போதும் இருக்கும்.

நிலத்தடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய் கசிவால், நீர் வெளியேறி நெடுந்தொலைவு ஓடிக்கொண்டிருக்கின்ற, அந்தச் சாலையில் மொத்த அகலமே ஐம்பது அடிவரைதாம். இதில் நீர் தேங்கி கொசுக்களுக்கு வாழ்வளிப்பதோடு, நோயைப் பரப்பவும் கிருமிகளுக்கும் அது கேந்திரமான இடமாக அமைந்திருக்கும். அவ்வழியே மக்கள் கூட்டம் அதிகமாகையால் நடைபாதைக் கடைகளும் அதிகம். வாகனவோட்டிகளுடன் போட்டிப்போட்டுக்கொண்டு நடக்கும் பாதசாரிகளுக்கு இடையில் மிச்ச இடத்தையும் இவர்கள் ஆக்கிரமித்து கடைவிரித்திருப்பார்கள்.. காலைவேளைகளில் பெரும்பாலும் யாரும் அந்தக் கடைகளைக் கண்டுகொள்வதில்லை. அவரவர்கள் வேலைக்குப் போகிற அவசரத்தில் வியாபாரம் ஒன்றும் பெரிய அளவில் இருக்காது. கடைவிரித்தேன் கொள்வாறில்லையே என்பதுபோலதான் வியாபாரிகளின் நிலை. ஆனால் மாலை வேளைகளில் மனித எந்திரங்கள் சற்று நிதானமாகவே வருவார்கள் போவார்கள். காலையிலிருந்த வேகமும் படபடப்பும் குறைந்திருக்கும்.

இந்த வழியில் ஒரு குழுவினர்  வருவோர் போவோரிடமெல்லாம் கையேந்தி பிச்சைக் கேட்டபடி நிற்பார்கள். குடும்பம் குடும்பமாக காணப்படும் இவர்கள் விடாபிடியாக காசு கொடுத்தால்தான் நகரமுடியும் என்னும் அளவிற்குக் கெஞ்சி நெருக்குதல் கொடுப்பார்கள். அதிலும் நான்கு வயது, ஐந்து வயது சிறுவர்கள் ரொம்ப மோசம்.. கையைப் பிடித்துக்கொள்வார்கள்.. அவர்கள் இலக்கு இரண்டு ரூபாய்.. அல்லது ஐந்து ரூபாய்அதைக்கொடுக்காமல் அங்கிருந்து நகரவிடமாட்டார்கள்.. பின்னாடியே வந்து கெஞ்சுவார்கள்.. பசிக்கிது.. பசிக்கிதுஎன்று வயிற்றைக் காட்டுவார்கள்..  சிலர் தொல்லைதாங்க முடியாமல் இரண்டு ரூபாயோ ஐந்து ரூபாயோ கொடுத்துவிட்டுத் தப்பித்துக்கொள்வர்.. இன்னும் சிலர் பரிதாபப்பட்டு கொடுத்துவிட்டு போவர். சிலர், அவர்களைப்போலீசுல புடிச்சிக்குடுத்துடுவேன்என்று மிரட்டி விட்டுப்போவார்கள்..

இந்தக் கூட்டம் இல்லாமல் இன்னொரு கூட்டம் உண்டு. இவர்கள் வயதானவர்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாக இருப்பார்கள். ஆண்கள் பெரும்பாலும் இடுப்பில் ஒரு வேட்டியும், தோளில் துண்டும், கையில் ஒரு தடியும், ஒரு தட்டோடும் காட்சி தருவார்கள்.. அட்டுப்பிடித்தத்தலை, வெளிறிப்போன முகம், சுருங்கம் விழுந்த உடல், குழியானக் கண்கள் எனஇவர்களைப் பார்க்கவே சங்கடமாக இருக்கும்.  வருவோர் போவோரிடமெல்லாம், “ஐயாஐயா…” என்று பிச்சை எடுப்பார்கள். பெண்களின் நிலை இன்னும் மோசம்.. மிகவும் வயதானவர்களாக இருப்பார்கள். தலை கிடுகிடுவென ஆடிக்கொண்டே இருக்கும். சூம்பிப்போன மார்பகங்களை மூடி மறைக்க மார்புக்கச்சைக்கூட இருக்காது.. தன் ஒற்றைப் புடவையையே போர்த்திக்கொண்டு வெயிலிலேயே அமர்ந்திருப்பார்கள். இவர்களைப் போல குறைந்தது ஒரு ஆறேழுபேர்களாவது அப்பாதையில் அமர்ந்திருப்பார்கள். “ஐயாஅம்மா…” என்பதை மட்டும் மந்திரம்போலத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

தினந்தோறும் அந்த வழியாகத்தான் கல்லூரிக்குச் செல்வான் வேலன். வேலன் இளங்களை அரசியல் அறிவியல் படிக்கிறான்.  சமுதாயத்தின் மீது அக்கறைக் கொள்ள முயற்சிப்பவன். இளவயதிலேயே தயாளகுணமும் உதவும் மனப்பான்மையும் கொண்டவன். பசி என்று யார் எப்போது கேட்டாளும் இல்லை என்று சொல்லாது வாங்கித்தருவான். பசி என்றால் மட்டும்தான் உதவுவான். நல்ல வசதியானக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனது அம்மாவும் அப்பாவும் அரசாங்க ஊழியர்கள். நல்ல வருமானம். வீட்டிற்கு ஒரே பிள்ளை இவன்.  இரயிலில்தான் வருவான். அந்தப் பாதை அவனுக்கு நல்ல அறிமுகமான இடமாக இருந்தது. தினமும் அவ்வழியில்  காணும் காட்சிகள் அவனை வெகுவாகப் பாதித்திருந்தன. பலமுறை அங்குள்ளோர்க்கு உதவியும் இருக்கிறான்.

ஒருநாள் அவ்வழியில் உள்ள பெரிய ஹோட்டலில் தன் நண்பர்களுடன் சாப்பிட்டுக்கொண்டிருதான் வேலன். ஹோட்டலின் வாசலில் ஒரு பெரியவர் நின்றிருந்தார். இதற்கு முன் அவரை வேலன் இவ்விடத்தில் கண்டதில்லை. உள்ளேயிருந்து வருவோர் போவோரிடமெல்லாம்ஐயா….ஐயா…” என்று கெஞ்சிக்கொண்டிருந்தார். அது மிகப்பெரிய உயர்தர ஹோட்டல். பெரும்பாலும் வசதியானவர்களே அங்கு சாப்பிட வருவார்கள்.. இந்த பெரியவர் நெடுநேரமாக அங்கேயே நின்றிருந்தார். யாரும் அவரைக் கண்டுகொள்வதாய்த் தெரியவில்லை. அவர் நல்ல பசியில் நின்றுகொண்டிருக்க வேண்டும். அவரது கால்கள் இரண்டு தடதடவென நடுங்கிக்கொண்டே இருந்தன. மிகவும் சோர்ந்துபோய் கண்கள் குழிவிழுந்திருந்தன. நிலைகுலைந்து போயிருந்தார். ஏறக்குறைய அவர் சாப்பிட்டு பல வேளைகளாயிருக்கலாம். அங்குள்ளோர் அவரை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. அவரைப் பார்த்துக்கொண்டே இருந்த வேலன், ஒரு ஃபுல் மீல்ஸ் பார்சல் வாங்கிக் கொண்டு வெளியே வந்தான். பாலிதீன் கவரோடு அவரிடம் அதை நீட்டினான். இதை அந்தப் பெரியவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உணவைக் கண்டதும் அவரின் முகத்தில் ஏற்பட்ட ஒரு ஒளி.. விவரிக்க முடியாதது. தன் இரண்டு கைகளையும் தலைக்குமேல் தூக்கி, கால்கள் நடுநடுங்க அவனை ஏறெடுத்துப்பார்த்து கும்பிட்டு… “தம்பீநல்லாயிரு ராசாஎன்று சொன்னது, வேலனை உண்மையிலேயே ஏதோ செய்துவிட்டது.

அன்று முழுவதுமே அந்தப் பெரியவரின் நினைவாகவே இருந்தது வேலனுக்கு. அவர் இரண்டு கைகளையும் தலைக்குமேல் தூக்கி, தன் கால்கள் நடுநடுங்க அவனை வாழ்த்தியது.. அக்காட்சி திரும்பத்திரும்ப அவன் சிந்தையில் தோன்றி அவனை என்னவோ செய்தது. அவர் எவ்வளவு பசியோடு இருந்திருந்தால் அப்படி கூறியிருப்பார்?!

மறுநாள் காலையிலேயே கடைவீதிக்குச் சென்று, துணிக்கடையில் இரண்டு வேட்டிகளையும் சட்டைகளையும் வாங்கிக்கொண்டு வந்தான். அந்தப் பெரியவரை தான் நேற்று சந்தித்த இடத்திலேயே வந்துத் தேடினான். ஹோட்டலின் வாசலில் அவர் இல்லை. இரயில் நிலைய வளாகத்தில் சென்று தேடினான். ஆளைக் காணோம். ஒரு வேலை பேருந்து நிறுத்தத்திலிருக்கலாம். விரைவாக நடக்க ஆரம்பித்தான். போகிற வழியில் மேம்பாலத்தை ஒட்டினாற்போல ஒரு தள்ளுவண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  அதன் நிழலில் அந்தப் பெரியவர் படுத்திருந்தார். அவரை அடையாளம் கண்டுகொண்ட வேலன், அவர் அருகில் சென்றான். அவரது உடல் முழுவதும் நனைந்திருந்தது. தொட்டுப் பார்த்தான். உடல் வெப்பத்தால் கொதித்தது. அருகில் இருந்த டீக்கடையில் டீயும் பண்ணும் வாங்கிக் கொண்டு, மருந்துக்கடையில் காய்ச்சலுக்கு மாத்திரைகளையும் வாங்கிக்கொண்டு வந்தான். அவரருகில் சென்று உட்கார்ந்துகொண்டு அவரை எழுப்பினான். பிரக்கனையற்றுக் கிடந்த அவர், மெல்ல எழுந்தார். இவன் டீயைக் கொடுத்தான். பண்ணையும் தொட்டுக்கொண்டு சாப்பிடச்சொன்னான். வாங்கி வந்திருந்த மாத்திரையையும் போட்டுக்கச் சொன்னான். அவரும் பண்ணைத் தின்றுவிட்டு டீயை குடித்து, அதிலேயே மாத்திரையையும் போட்டுக்கொண்டார்.

சிறிது நேரம் அமைதியாய் இருந்தனர் இருவரும். பின் வேலன்தான் பேசத்தொடங்கினான்..

ஐயா.. உங்களப்பாத்த பிச்சக்காரர் போல தெரியிலயேஎன்றான்..

அவர் இவனைக் கண்டு லேசாக சிரித்தார். “நா பிச்சக்காரன் இல்ல தம்பி..” என்றார்..

மீண்டும் ஒரு அமைதி.. தாம் அப்படிக் கேட்டிருக்கக்கூடாது என்று தனக்குள்ளேயேச் சொல்லிக்கொண்டான் வேலன்.

அவர் மீண்டும் பேச ஆரம்பித்தார்..

என்பேரு காசி தம்பி. திண்டிவனத்துக்குப் பக்கத்துல இருக்குற ஐயந்தோப்புல நம்ப வீடு.. நல்ல வசதி எனக்கு. எம்பொண்டாட்டி செத்துபோயி பதினஞ்சி வருசம் ஆவுது. ரெண்டே ரெண்டு பசங்க மட்டும்தாந்தம்பி.” என்றார்.

ரெண்டு பசங்களா..?? அப்பறம் ஏய்யா நேத்து ஹோட்டல் வாசல்ல பிச்ச எடுத்துக்கிட்டு இருந்தீங்க?” என்றான் வேலன்.

எல்லாம் என்னோட விதி தம்பி. எனக்குப் பூர்வீகமா ஒரு வீடும், இருபது ஏக்கரா நெலமும் இருக்கு. ரெண்டு புள்ளங்களயும் நல்லா படிக்க வச்சி, வேலையும் வாங்கிக்குடுத்து, நல்ல எடத்துல சம்பந்தமும் பேசி கல்யாணத்த பண்ணி வச்சேன்..” என்றார்.

ஒருவேலை மருமகள் கொடுமையில வீட்டவிட்டு வந்திருப்பாரோஎன்று நினைக்கலானான் வேலன். இவனது நினைப்பைப் புரிந்துகொண்ட அவர், தொடர்ந்து பேசலானார்.

மருமவளுவோ தங்கம்னா தங்கம் தம்பி. நாலுவருசத்துக்கு முந்தி, வீட்டையும் இருவது ஏக்கரா சொத்தயும் ரெண்டு பயலுவோளுக்கும் எழுதி வச்சிட்டேன்.. ரெண்டு பேரும் மாசாமாசம் ரெண்டாயிரம் தரதா சொன்னானுவ.. எம்புள்ளங்கெ இருக்காணுவன்னு எனக்குன்னு நா எதையும் சேத்துக்கலநல்லாதான் போச்சு மூனு வருசமா! அதுக்கப்பறம் ஒரு நாள் அண்ணந்தம்பிங்களுக்குள்ள சண்டை போட்டுக்கிட்டானுவ. சின்னவன் கோச்சிக்கிட்டு வீட்ட விட்டு குடும்பத்தோட வெளிய போய்ட்டான். சண்ட இதோட ஓஞ்சிதுன்னுப் பாத்தா.. மறுபடியும் பிரச்சனைய ஆரம்பிச்சிட்டானுவ.. குடியிருந்த வீட்டுல எனக்கு சேரவேண்டிய பங்க குடுன்னு பெரியவங்கிட்ட வந்து சண்ட போட்டான் சின்னவன். பெரியவன் குடுக்க முடியாதுன்னுட்டான்.. அப்பறம் அடிதடியாயி போலீசு, கோர்ட்டுன்னு பெரிய பிரச்சனையாக்கிட்டானுங்க.

எனக்கு வேற இப்பலாம் அடிக்கடி நெஞ்சுவலி வந்துடுது.. ஆஸ்பிட்டல போய் பாத்தா, நெறைய செலவாவுன்னு சொல்றாங்க.. இவனுவோ வழக்கமா குடுக்குற ரெண்டாயிரத்தயும் இப்பலாம் குடுக்கறதில்ல.. ரெண்டு பேரயும் கூப்ட்டு, ஆஸ்பத்திரி செலவுக்கு அம்பதாயிரம் கேட்டேன். ரெண்டு பயலுவளும் குடுக்க முடியாதுன்னுட்டானுவ.. இனி அங்க இருந்து என்ன ஆகபோகுது.. அவனுவ மூஞ்சில முழிக்கக்கூட புடிக்காம கட்ன வேட்டியோட திண்டிவனத்துலயிருந்து நடந்தே வந்துட்டேன்..

முன்ன பிச்ச எடுத்து சாப்டுறதுக்குப் பிரயாசப்பட்டுக்கிட்டு சாப்டாமலியே கெடந்தேன்.. என்னத வேள பசியோட கெடக்க முடியும்? மூனு வேளக்கி, ரெண்டு வேளயும், ரெண்டு வேளக்கி ஒரு வெளையுமா கெடக்கிறத வாங்கித் தின்னுகிட்டு வந்தேன்.. நேத்து நீ சோறு வாங்கித்தத்தல்ல.. ரெண்டுநாளா சாப்டாம, ரொம்ப தவிச்சிக்கிட்டு இருந்தப்பதான் நீ தந்த சோறு கொஞ்சம் தெம்ப குடுத்திச்சு..” என்று சொல்லி பொலபொலவெனக் கண்களில் நீர் வர குலுங்கிக் குலுங்கி அழுதார்.

இதைக் கேட்ட வேலனும்  அழுதேவிட்டான்.

நீங்க ஏய்யா சொத்த அதுக்குள்ள பிரிச்சீங்கஎன்றான் வேலன் மனம் வருத்தியவனாய்.

அதாந்தம்பி நாஞ்செஞ்ச பெரிய தப்புஎன்றுசொல்லி நொந்துக்கொண்டார்.

நீங்க ஏங்கூட வந்திடுறீங்களா ஐயா.. நான் என்னோட வீட்டுக்குக் கூட்டிட்டுபோறேன்என்றான் வேலன்.

அவர் லேசாக சிரித்துவிட்டு, “வேணாந்தம்பி.. என்னால யார்க்கும் தொல்ல வேணாம்.. அது நல்லாயிருக்காது.. நான் இப்படியே இருந்துடுறேன்.. இன்னும் கொஞ்சநாள்தான் இருப்பேன். சீக்கிரஞ் செத்துடுவென்என்றார்.

அப்படிச் சொல்லாதீங்க.. என்னோட வீட்ல இருக்க புடிக்கலன்னா, நிறைய முதியோர் இல்லம் இருக்கு.. அங்க ஒங்களுக்கு ஒரு கொறையும் இருக்காது.. அங்க சேத்துவிடுறேன்யாஎன்றான் வேலன்.

இதற்கும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. இவனுக்குக் கல்லூரிக்கு நேரமாகிவிட்டதால், “சாயந்திரம் வாறேய்யா..” என்று சொல்லி, வாங்கி வந்திருந்த வேட்டி சட்டையைக் கொடுத்தான்.. அவர் வாங்க மறுத்தார். இவன் வற்புறுத்தவே வாங்கிக்கொண்டார்.

கல்லூரி முழுக்க அந்தப் பெரியவரது நினைவாகவே இருந்தது வேலனுக்கு. எப்படியாவது அவரைச் சம்மதிக்கச் செய்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச்சென்றுவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தான். கல்லூரி முடிந்ததும் தன்னுடைய அப்பா அம்மாவிற்கு ஃபோன்செய்து தகவலைச் சொன்னதும் மகனுக்காக அந்தப் பெரியவரை வீட்டில் சேர்த்துக்கொள்ள ஒத்துக்கொண்டனர்.

பெற்றோர் சம்மதம் தெரிவித்த மகிழ்ச்சியில் அவன் வீடுதிரும்பிக் கொண்டிருந்தான். வழியில் காலையில் அவரைப்பார்த்த இடத்திற்குச் சென்று அவரைத் தேடினான். அவர் அங்கு இல்லை. பேருந்து நிறுத்தம், இரயில் நிலைய வளாகம் எல்லாம் தேடிப்பார்த்தான்.. அவரைக்காணவில்லை. அவர் வேறு எங்கோ போய்விட்டார். இவன் இவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. வாழ்க்கை வெறுத்துப்போனவர்களுக்கு மனதில் எப்படி ஒரு பிடிப்பை ஏற்படுத்த முடியும்? வேலனுக்கு அழுகையே வந்துவிட்டது. மனம் சோர்ந்துபோனான். வீடு திரும்பவே அவனுக்கு மனமில்லை..

காலையில் அவரைப் பார்த்தபோதே கையோடு வீட்டிற்கு அழைத்து வந்திருக்க வேண்டும்.. நாம்தான் தவறு செய்துவிட்டோம் என்று தன்னையே நொந்துக்கொண்டான். அவரோடு பலநாள் பழகி விட்டாற்போலவும், தனக்கு மிகவும் வேண்டியவர் போலவும் அவரைப்பற்றி இவனது மனம் எண்ணிக்கொண்டது. அவர் மீது இவனக்கு ஏற்பட்டிருந்த ஓர் அனுதாபம், அவரை எப்படியாவது தம்முடனே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஏக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

வீட்டில்அவன் அம்மாவிடம் சொல்லி அழுதான். அவனுக்கு எதுவுமே நிலைகொள்ளவில்லைஅந்தப்பெரியவரது நினைவாகவே இருந்தான்அவரது நிலைகுலைந்த உருவமும், சுருக்கம் விழுந்த மாநிற உடலும், நரைத்துப்போன தலையும், குழிவிழுந்த கண்களும் அவனது நினைப்பில் தோன்றி ஒருவித குற்றஉணர்ச்சியை ஏற்படுத்தின.

சற்றுநேரத்தில் யாரோ வருவதுபோலச் சத்தம் கேட்கவே சோஃபாவிலிருந்து திரும்பி வாசல் பக்கம் பார்த்தான். பார்த்தவன், ஒரு கணம் திகைத்துவிட்டான். அவனது கண்களையே அவனால் நம்பமுடியவில்லை. வெடுக்கென எழுந்தான். கொஞ்சம் கொஞ்சமாகப் பசியால் செத்துக் கொண்டிருந்தவனுக்கு உணவு கிடைத்தால் எப்படி இருக்குமோ அப்படி ஆனான் வேலன்.

வாசலில் அந்தப் பெரியவர் நின்றிருந்தார். தெரிந்த வீடு போல உள்ளே வந்த அவர், வாயிற் கதவைத் தாழிட்டுவிட்டு உள்வாயிலை நோக்கி வந்து, செருப்பினை வைக்கும் இடத்தில் தன் செருப்பினைக் கழட்டிவிட்டு உள்ளே வந்தார்.

வேலன், உச்ச மகிழ்ச்சியில் ஓடிப்போய் அவரை தழுவிக்கொண்டான். தேம்பி தேம்பி அழுதான். ‘”நான் அவ்ளே சொன்னேனேநீங்க எங்க போனீங்கஎப்படி என்ன விட்டுட்டுப் போனீங்கஎன்று அழுதுகொண்டே குழறிக்குழறிப் பேசினான்அழுவை மட்டும் நின்றபாடில்லை..

கட்டியணைத்திருந்து அவனை விலக்கிவிட்டு, அவனது முகத்தைப் பார்த்து, “டேய்வேலாஎன்ன ஆச்சு.. நாயெங்கடா உன்ன விட்டுட்டுப் போனேன்.. வேலக்கிதானடா போய்ட்டு வாறேன்ஏன்டா இப்டி அழறே…” என்றார் அவனது அப்பா.

No comments:

Post a Comment