பெரிய நகரத்திற்கு அருகே இருக்கும் ஒரு சுங்கஞ்சாவடி. நாட்டின் தென்பகுதியிலிருந்து இந்நகரத்திற்கு வர வழியாகும்
முக்கியமான சுங்கஞ்சாவடி அது. நகரத்திலிருந்து திருச்சிக்கு செல்லும்
பேருந்து ஒன்று அந்த சுங்கஞ்சாவடியைக் கடந்து செல்ல நின்றுகொண்டிருந்தது.
‘பத்து ரூவா... பத்து ரூவா..’ என்ற படியான குரல்கள், கையில் நிறைய கவர்களில் பலாப்
பழங்களையும் வெள்ளரிப்பிஞ்சுகளையும்
வேர்க்கடலைகளையும் இட்டு நிரப்பிக்கொண்டு பேருந்தைச் சுற்றி சுற்றி
ஒலித்துக் கொண்டிருந்தன. பயணம் செய்பவர்களில் சிலரும் பலரும்
வாங்கிக் கொள்கின்றனர்.
இப்படி ஒலித்த குரல்களில் ஒன்று கண்ணனுடைய குரல்.. அவன் யாரென்று தெரியுமா? சுலபமாக அடையாளம்
கண்டுவிடலாம்.
‘பத்தே... பத்தே...’ என்று
உரக்க ஒரு குரல் கேட்கிறதே? அதுதான் கண்ணனுடைய குரல்.
இங்கு தொழில் செய்பவர்களிலேயே இவன்தான் சிறியவன். அவன் சரியாக எட்டாம் வகுப்பு தாண்டிய பிறகுதான் இந்த வேலைக்கு
வந்தான். வந்தான் இல்லை. வரவேண்டிய சூழல்
வந்துவிட்டது. ஏனென்றால் அவன் அப்பா அப்போதுதான் இறந்தார்.
இதன் பிறகு இவனும், தன் அம்மா உதவியோடு இப்படி
சுங்கஞ்சாவடியில் வியாபாரம் செய்ய வந்துவிட்டான். படிப்புக்கு
‘டாடா’ சொல்லிவிட்டான். இதற்காக
இவன் ஒன்னும் வருப்படவில்லை. ஏனெனில் இவனுடைய ஆங்கில வாத்தியாராலேயே
இவனுக்கு ஏகப்பட்ட டென்ஷன். அந்த சமயத்தில் தன் அப்பா காலமானது
இவனுக்கு வசதியாக போயிற்று. அங்கே பாருங்க.. யாரோ அவனிடம் பலாப்பழம் வாங்குகிறார்கள்.. வாங்க..
எப்படி வியாபாரம் செய்யறான்னு பாப்போம்..
‘பத்தே... பத்தே... பத்தே...’
‘இந்தாப்பா ‘பத்தே’... ஒரு கவர் கொடு..’
‘ஏம் பேரு ஒன்னும் ‘பத்தே’ இல்ல... காச கொடுங்க..’
‘சரி ஓம்பேரு என்ன?’
‘பேரக் கேட்டு என்ன செய்ய போறீங்க?? காச
கொடுத்துட்டு பழத்த வாங்கிகங்க.’
‘என்னப்பா இப்படி பேசற.. சரி...
நீ கவரகொடு’
‘நீங்க முத காச கொடுங்க.. அப்படியே வண்டி
கிளம்பிடுச்சின்னா எஸ்கேப் ஆகிட்டீங்கன்னா?’
‘தம்பி ரொம்ப உசாருதான்.. நாங்க ஒன்னும்
ஏமாத்திடமாட்டோம்.. கவர கொடு!’
‘சரி இந்தாங்க....’
‘என்னாது இது 5 சொளதான் வச்சிருக்க??
பத்து ரூபான்னுற?? பழம்கூட நல்லாயில்ல??’
‘பத்து ரூவாக்கி, அவ்ளோதான் வரும்..
ரொம்ப நல்ல பழம், தின்னு பாருங்க.. இனிக்கும்!’
‘சரி.. இன்னும் ரெண்டு கவர் கொடு..!!
தம்பி, வண்டி எடுக்க போறாங்க... சீக்கிரம் கொடு...’
(வண்டி புறப்பட ஆரம்பிக்கிறது)
‘ரெண்டு கவருக்கும் 20ரூபா கொடுங்க முத..’
–அவன்
‘இன்னும் ரெண்டு குடு, காச தறேன்..’
–பழம் வாங்கினவர்
(வண்டி சுங்கஞ்சாவடியைக் கடந்து விட்டது, பழம் வாங்கினவர் பணத்தை அவசர அவரமாக எடுத்து ஜன்னல் ஓரம் நீட்டுகிறார்,
வண்டி வேமெடுத்து ஓடத் தொடங்கிவிட்டது)
காச கீழ போடுங்க... காச
கீழ போடுங்க.. –இவன் கத்திக்கொண்டு பின்னாடியே ஓடுகிறான்.
இவன் கையில் கவர்கள் நிறைந்த கூடைத் தட்டு இவன் வேகத்தை மட்டுப்படுத்துகிறது.
பின்னாடியே ஓடுகிறான். பழம் வாங்கினவர் செய்வதறியாது
பணத்தையும் கீழே போடவில்லை. இவனும் ஓடிக்கொண்டே இருக்கிறான்..
அப்போதுதான் தீடீரென நடந்துவிட்டது, அந்த அசம்பாவிதம்... யாரும் எதிர்பார்க்க
வில்லை.
சுங்கஞ்சாவடியைக் கடந்து வேகமாக வந்த ஒரு பைக், முன்புறம் பேருந்து போக, அதை வளைத்துக்
கொண்டு, இடதுபுறம் திரும்பி சீறிக் கொண்டு வந்தபோது இவன் ஓடியதை
கவனிக்காமல் இவனை மோதிவிட்டது..
மோதியவுடன் நிற்கக்கூடவில்லை.. சிட்டாக பறந்துவிட்டது.
பைக் மோதின வேகத்தில் கண்ணனுடைய கையில் இருந்த பழக்கூடை சிதறியதோடு. ஒரு எம்பலில் எம்பி கீழே விழுந்தான்.. இடது தோள், இடது கால்களில் சிறாப்பு, மூக்கிலிருந்து இரத்தம் வழிய ஆரம்பித்து விட்டது.
இதற்காகவே காத்திருந்தது போல கூட்டம் கூடிவிட்டது. சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து இவனைத் தூக்கிக் கொண்டு
போய்விட்டது.
***
‘தம்பி... தம்பி... விடிஞ்சிருச்சி எந்திரிடா...’
‘ம்...’
‘டேய்... டேய்... நேரமாயிருச்சி எந்திரிடா...’
‘மா...’
‘டேய் சனியனே... எந்திரிக்கிரியா,
தண்ணிய தலையில ஊத்தவா.. பொழுது விடிஞ்சி
எவ்ளோ நேரம் ஆகுது, இன்னும்
இழுத்துப் போத்திக்கிட்டு தூங்குற.. மூதேவி..’
‘ஐயோ.. அம்மா, ஆரம்பிச்சிடாத,
எந்திரிச்சிட்டேன்.. நிம்மதியா தூங்கக்கூட முடில’
என்று சலித்துக்கொண்டவாறே படுக்கையை விட்டு எழுந்தான்.
அவ்வளவுதான் அவளுக்கு ஆவேசம் வந்தவள் போல,
கத்த ஆரம்பித்து விட்டாள்.
‘அந்த சரக்குகாரன் கிட்ட, பலாப்பழம் ஆர்டரு
கொடுத்திருந்தேன், அவன் வந்து சாவடில எறக்கிட்ருப்பானா இல்லயான்னு
தெரியல.. மணிவேற 8க்கு மேல ஆயிடுச்சி..
எங்கனா பொறுப்பு இருக்கா ஒனக்கு. இப்படியே தூங்கிட்டுகெட
ஒம் பொண்டாட்டி மூஞ்சி விளக்குமாத்தாலயே அடிப்பா.. அப்படியே புள்ள
வளத்துருக்காபாருன்னு ஏம் மூஞ்சிள காரி துப்புவா...’ என்று அவள்
பாட்டுக்கு வசைபாட ஆரம்பித்து விட்டாள்.
இவன் எழுந்தான், இங்கிருந்தால்
நிறுத்தமாட்டார்கள் என்றெண்ணி, காலைக் கடனைக் கழிக்க மைதானத்திற்குச்
சென்றுவிட்டான். ஒரு 20 நிமிடம் கழித்து
வந்தான். அது வரையிலும் அவள் நிறுத்தவே இல்லை.
பிறகு லுங்கியை மாற்றிக் கொண்டு, ஏதோ சோறு என்று பொங்கி வைத்திருந்த, ஒன்றை
தின்று விட்டு, சாவடிக்கு கிளம்பிவிட்டான். இது தினசரி நடக்கும் ஒரு நிகழ்ச்சி. ஒவ்வொரு நாளும் இதே
திருப்பள்ளியெழுச்சியும், இதே உணவும், இதேபோல
9 மணிக்கெல்லாம் சாவடிக்கு கிளம்பி விடுவதும் மாமூலாக நடப்பதுதான்.
சில நாள்களில் சாவடிக்கு செல்வது மட்டும் வேறுபடும். விழாக்காலங்களில் தொடர்ச்சியாக வண்டிகள் வந்த வண்ணமும் போன வண்ணமுமாக இருக்கும்.
அன்று சீக்கிரம் சென்று தன் வியாபாரத்தை ஆரம்பித்துவிடுவான்.
காலையிலிருந்து இரவு வரை அங்கேயே இருப்பான். மதியம்
இவனுக்கு சோறு கொண்டுவருவாள் இவனது அம்மா. அவளும் கொஞ்ச நஞ்சம்,
வேலைகளை செய்துவிட்டு போவாள். ஆனால், அவளது வேலை இது அல்ல. அவளது குடியிருப்பு பக்கத்திலுள்ள
ஒரு நகரின் வீட்டில் வீட்டு வேலை செய்கிறாள். மதியம் மட்டும்
இவனுக்கு உணவு கொண்டு வருவாள்.
காலையில் சாவடிக்கு வந்தவன், தாம் ஆர்டர் கொடுத்திருந்த பலாப்பழம் வந்திருந்ததா என்று நோட்டம்
விட்டான். அவன் வழக்கமாக உட்கார்ந்து பழங்களை கவர்களில் அடைக்கும்
ஒரு சிறிய மரத்தடியில் 3 பலாப்பழங்கள் இறக்கி வைக்கப்பட்டிருந்தன.
மளமளவென்று வேலையை ஆரம்பித்தான். கையோடு,
சிறிய கத்தி, நல்லெண்ணெய் எல்லாம் கொண்டு வந்திருந்தான்.
மரத்தினடியில் கட்டி வைத்திருந்த கோணியை எடுத்து விரித்து, கத்தியிலும் கைகளிலும் எண்ணெயை நன்கு தடவிக்கொண்டு, இரு
கால்களையும் விரித்து நடுவே பழம் இருக்கும்படி செய்து, பழத்தின்
காம்பு இருக்கும் பகுதியில் கத்தியை சொருகி, அப்படியே அறுத்துக்கொண்டே
வந்து சரியாக தொடங்கிய இடத்திலேயே சேர்த்தான். இது அவனுக்கு கைவந்த
கலை. இடையிடையே எண்ணெயைத் தடவிக்கொண்டும் ஒருவழியாக ஒரு பழத்தை
இரண்டாக பிளந்தான். பின் ஒரு பாதியின் நடுவில் இருக்கும் தண்டை
அரிந்து எடுத்தான். வெள்ளை நிற பால் பொங்கியது. அதை நல்லெண்ணெய் பார்த்துக்கொண்டது. தண்டை முழுதுமாக
அரிந்து எடுத்து விட்டு, பழத்தை இரண்டு கைகளாலும் சேர்த்து,
விரித்தான். சுளை சுளையாக பழங்கள் தனித்தனியாக
விரிந்து நின்றன.
பின் கொண்டு வந்திருந்த பாலிதீன் கவர்களை எடுத்து, ஒவ்வொரு கவர்களிலும் ஐந்து ஐந்து பழங்கள் வீதம் போட்டு எடுத்து
வைத்தான். ஒரு முழு பழம் 200 முதல்
250 ரூபாய் வரை இருக்கும். எடையும் அளவும் அதிகமான
பழங்கள் அவை. அதில் எப்படியும் 300 லிருந்து
400 சுளைகள் வரை இருக்கும். இதை ஏறக்குறைய
80 கவர்களில் அடைப்பான். ஒரு கவர் பத்துரூபாய்
வீதம் ஒரு முழு பழத்திற்கு 800 ரூபாய் ஏறக்குறைய கிடைக்கும்.
இது பழத்தை வாங்கிய தொகையைவிட கூடுதல்தான். ஆனால்,
இதை விற்பதற்கு மிகவும் பொறுமை வேண்டும். தொண்டை
கிழிய கத்த வேண்டும். ‘5 சொலதானே இருக்கு’ என்போர்களிடம் மல்லுக்கு நிற்கவேண்டும். நாள் முழுக்க
வெயிலியிலும், சிலபோது பேருந்து ஓடும் போது ஏறியும், இறங்கியும் சாகசங்கள் நிகழ்த்த வேண்டும். இதில் போட்டி
வேறு.
சீசனுக்கு சீசன், வெரைட்டியான
பழங்கள், வெள்ளரிப்பிஞ்சுகள் எல்லாம் இவன் விற்பதுண்டு.
அங்கு பலரும் இவனுக்கு போட்டி. சிறிய பையன் என்று ஓரளவு அனுதாபமும் சிலபோது உண்டு.
இவன் யாரிடமும் கூட்டு சேர்வதில்லை. அவனது அம்மாவுடைய
உத்தரவு அது. தவறி ஏதாவது அவளது காதில விழுந்தால், முன்பே கேட்டீர்கள் அல்லவா.. அதைவிட பல மடங்கு வசவு விழும்.
கண்ணனுக்கு அவனது அம்மாதான் எல்லாம். சாதாரணமாக இவன் வயது ஒத்தப் பசங்களுடன் இவன் சேருவதில்லை.
விளையாடக்கூட போவதில்லை. சொல்லிக்கொள்ளும்படி இவனுக்கு
நண்பர்களும் இல்லை. உறவுகளெல்லாம் தூரத்து சொந்தங்களாகிவிட்டன.
இவனுக்கு இவனது அம்மா. அவளுக்கு இவன் மட்டும்தான்.
இடையில் யாரும் இருக்கமுடியாது.
இவனது அம்மாவுக்கு தன் மகனை பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும்
என்றுதான் விருப்பம். ஆனால் தன் கணவன் இறந்தது முதல்
அந்த கனவு கனவாகிப்போனது.வீட்டு வாடகைக் கொடுக்கவும் வழியற்று,
வயிற்றுப் பிழைப்புக்கே பாடாய்பட வேண்டியதாயிற்று. இவனும் பள்ளிக்கு செல்வதில்லை என்று அடம்பிடித்தான். வேறு வழியில்லாமல் தன் கணவன் செய்த வேலையையே மகனும் செய்யும்படியான சூழல் உருவாகிவிட்டது.
அவளும் சும்மாயில்லை. வீட்டு வேலைக்கு செல்கிறாள்.
ஒரு நாளைக்கு எப்படியும் 500 ரூபாயாவது சம்பாதித்து விட வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு ஓடுவான்,
கூவுவான், பேருந்தைச் சுற்றி சுற்றி வருவான்.
ஆனால் 200 ரூபாய் பணத்தைப் பார்த்தாலே அபூர்வம்.
உடல்நலமில்லை என்றாலும்
சாவடிக்கு வந்துவிடுவான். இந்த சுங்கஞ்சாவடிதான் அவனுடைய இன்னொரு
வீடாக இருந்தது.
சில நாள்களுக்கு முன் சாவடிகளில் அதிகமான கட்டணத்தை எதிர்த்து
சிகப்புத்துண்டு கட்சிக்காரர்களும் லாரி சம்மேளத்தினைச் சேர்ந்தவர்களும் சுங்கஞ்சாவடியருகே
போராட்டம் ஒன்று நடத்தினார்கள். தமிழகத்தில்
மட்டும் மத்திய அரசுடைய 25க்கும் மேற்பட்ட சுங்கஞ் சாவடிகள் உள்ளன.
இதுபோக தனியாருக்கு சொந்தமான சுங்கஞ்சாவடிகளும் அதிகம். சாலையை சீர்செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, வசூலுக்கு
அமர்ந்து விடுகிறார்கள். அவர் சீர்செய்ய செய்த செலவை விட பல மடங்கு
வசூலித்துவிடுவார்கள். பலிகடா வாகன வோட்டிகள்தான். இவர்களின்
போராட்டத்தால் தன் வியாபாரம் கெட்டு விடுமோ என்று பயந்தான் கண்ணன். நல்லவேலையாக போராட்டங்காரர்கள் இவனிடமிருந்து பழங்களை வாங்கினர். அன்று தான் ஒரே நாளில் 800ரூபாய், பணத்தை முழுதாக பார்த்தான்.
போட்டியாகவும், விளையாட்டாகவுமே
அவனது வியாபாரம் போய்க் கொண்டிருந்தது. சில நேரங்களில் பயணியர்களிடம்
வழக்குவாதம் வேறு. பல நேரங்களில் அவன் ஏமாந்து போனதுண்டு.
பொருளை வாங்கிக் கொண்டு, காசு கொடுக்காமல் ஏமாற்றிவிடுபவர்களும்
இருக்கிறார்கள். வண்டி புறப்பட்டாலும் வாங்கிய பொருளுக்கு காசை
வெளியே விட்டெறிபவர்களும் இருக்கிறார்கள். இதனால் அவன் எப்போதும்
உஷாராக பணத்தை வாங்கிவிடுவான்.
இப்படி போய்க்கொண்டிருந்த கண்ணனுடைய வியாபாரம் முன்பு பார்த்த
ஒரு விபத்தில் இடறியது. விபத்தைக் கேள்விப்பட்ட அவளது
அம்மா, மயங்கி விழுந்தாள். பின் ஒருவாறு
தேறி, மருத்துவமனைக்கு விரைந்தாள்.. கையிலும்
காலிலும் கட்டுப்போட்டிருந்தார்கள். இதைக் கண்ட அவள் கண்ணீர்
விட்டு ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்து விட்டாள். இவன் எவ்வளவோ
சமாதானம் சொல்லினான். அவள் ஓயுமாறு இல்லை. இரண்டு நாள்கள் மருத்துவமனையிலேயே இருந்தான். பிறகு காயம்
ஆறும் வரை வீட்டிலேயே இருந்தான். இரண்டாவது வாரத்தில் பழையபடி
வியாபாரத்திற்கு வந்துவிட்டான்..
முன்பை விட உரக்க கத்துகிறானே.. அவன்தான் கண்ணன்.
இப்படிதான் அவன் பிழைப்பு போய்க்கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment