கூற்று : காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது
விளக்கம்: காப்பு மிகுதி – தலைவி
காதல்வயப்பட்டதை அறிந்த தாயர் முதலியோர், அவளை வெளியே விடாமல் காப்பது.
பூஇடைப்
படினும் யாண்டுகழிந் தன்ன
நீர்உறை
மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவுஅரி
தாகிய தண்டாக் காமமொடு
உடன்உயிர்
போகுக தில்ல, கடன் அறிந்து
இருவேம்
ஆகிய உலகத்து
ஒருவே
மாகிய புன்மைநாம் உயற்கே (குறுந்தொகை – 57)
தெளிவுரை
தங்கள் இருவருக்கும் இடையே ஒரு பூ இடைப்பட்டுப் பிரிந்தாலும்
கூட, பல ஆண்டுகள் கழிந்தது போலக் கருதி, வருந்தும் இயல்புடையது நீரில் வசிக்கும் மகன்றில்
என்னும் பறவை.
இல்லறக் கடமைகளை அறிந்து, அதனைச் சிறப்புற ஆற்றுவதற்கென இருவராகப்
பிறந்த இவ்வுலகத்தில், தனித்தனியே பிரிந்து, ஒருவராகி வருந்தும் நிலையிலிருந்து தப்பிப்பதற்காகக்
குறைவற்ற காதலுணர்வுடன் ஒன்றுபட்டு எங்கள் வாழ்நாள் கழிவதாகுக! அதுவே எமது விருப்பம்.
சிறப்புக் குறிப்பு
மகன்றில் என்னும் நீர் வாழ் பறவை, ஆணும் பெண்ணுமாகக் கூடி,
பிரியாது வாழும். இதுபோல, பனை மடலில் கூடுகட்டி வாழும் அன்றில் பறவையும், ஒன்று இறந்தால்
மற்றொன்று, கத்திக்கத்தியே உயிர்விடும். இருவரும்
நெஞ்சாலும் உயிராலும் ஒருவராகவே பிறந்திருக்க வேண்டுமாயினும், இல்லறக் கடமைகளை ஆற்றுவதற்கும்,
கூடி இன்பம் துய்ப்பதற்கும் இருவராகப் பிறந்தனராம். இதனை, ‘கடன் அறிந்து – கடமைகளை
அறிந்து’ இருவராகப் பிறந்தனர் என்பது சிந்திக்கத்தக்கது.
அப்பப்பா! அருமை அருமை ஐயா , அருள் கூர்ந்து மேலும்
ReplyDeleteமேலும் இது போன்று பல கழகவிலக்கியப் பாடல்களை பதிவிடுங்களையா😀