- பாலுப்ரியன்
முனைவர் பட்டப்பேற்றிற்கு பாலுசாமி அவர்களிடம் ஆய்வு செய்த இறுதி மாணவன் நான். ஒருவகையில் அது எனக்குப் பெருமைதான் என்றாலும், அவர் இன்னும் பல முனைவர்களை உருவாக்கியிருக்கலாம். நேரடியாக ஆய்வாளர்களைத்தாம் குறைந்த எண்ணிக்கையில் உருவாக்கியுள்ளாரே தவிர, பார் புகழும் தம் ஆய்வுகளால், பலருக்கும் முன்ஏராக இருந்துவருகிறார்.
பாலுசாமி - வரையறைகள் கொண்டவர்; கோட்பாடுகளுடையவர்; காலத்திற்குப் பொருந்தாதவர். பாரதிபுத்திரன் - இதயப்பூர்வமானவர்; அன்பு வடிவானவர்; யதார்த்தமானவர். பாலுசாமி
என்னும் ஆளுமையை விட பாரதிபுத்திரனாக அவர் எனது நெஞ்சுக்கு நெருக்கமானவர். இந்த
நெருக்கம் இருக்கின்றதே… அது சொற்களால் விவரிக்கமுடியாதது. ‘தாயுமாய் எனக்கே தலைக் கண்ணுமாய்’ என்றும், ‘தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்’
என்றும் சான்றோர்கள் சொல்லிய சொற்களைக் காட்டிலும் நெருக்கமானது.
அவருடைய வகுப்பு, புறக்கணிக்க
முடியாதது. அது ஒருமணி நேரமோ, அதற்கும் மேலோ, கட்டுண்டு கிடப்போம். அவருடைய சித்தர் வகுப்புகள் இதுவரை யாரும்
நிகழ்த்தியிராத அதிசயங்கள். சிவவாக்கியரோ, திருமூலரோ - ஒரு
பாடலைத்தான், வகுப்பு முழுமையும் எடுப்பார். அருகில் யார்
இருக்கிறார்கள் என்றுகூடத் தெரியாது உலகம் மறந்துபோயிருப்போம். இப்படியும் பாடம்சொல்ல
முடியுமா? வியந்து போயிருக்கிறேன். அவரிடமே
கேட்டிருக்கின்றேன், ‘எப்படிங்க சார் இதெல்லாம்?’. அவர் என் மனதோடு ஒட்டிக்கொண்டது அந்த வகுப்புகளில்தான். அப்போதெல்லாம்
அவர் எனக்கு ‘ஓங்கி உலகளந்த உத்தமர்’ போலத்
தெரிவார்! எல்லா வகுப்புகளும் இப்படித்தான்.
திக்குத் தெரியாத காட்டில் நான் பற்றிக்கொண்டது அவரது விரல்களைத்தான்.
அந்த விரல்கள், என்னை நான்குபேர் அறியும்படி
ஆக்கியது. பிறந்த குழந்தைக்கு நடை பயிற்றுவிப்பதுபோலப் பயிற்றுவித்தது. படிப்பு
ஒரு பக்கம் என்றாலும், உணர்வாளனாக்கியது.
நான் அவரிடம் பலநேரம் கோபப்பட்டுள்ளேன். இத்தனை முறை செய்யச் சொல்கிறாரே
என்று ஆதங்கப்பட்டுள்ளேன். இப்போது ஆசிரியனாக அமரும்போதுதான், அவை எல்லாம் எனக்கு உதவுகின்றன;
வழிநடத்துகின்றன. பலரிடமிருந்தும் வேறுபடுத்திக்காட்டுகின்றன.
ஜீவகாருண்யம் குறித்துப் பேருந்தில் பேசிக்கொண்டு வந்தோம், நான் நின்று கொண்டிருந்தேன். அவர் சற்றுதள்ளி
அமர்ந்திருந்தார். இடையில் வேறொருவர் அமர்ந்திருந்தார். நாங்கள் பேசிக்கொண்டிருந்ததைக்
கேட்டு, இடையில் அமர்ந்திருந்தவர் எழுந்து, இளையவனான எனக்கு இடமளித்தார். இடம்கொடுத்தவர், இறங்கும்
வரை அவருக்கு நன்றி சொல்லியபடியே இருந்தார் இவர். பிறகு சொன்னார்: ‘இதுதான் ஜீவகாருண்யம்.’ நான் வாயடைத்துப்போய் முழித்துக்
கொண்டிருந்தேன். வகுப்பறையில் அவர் சொல்லிக்கொடுத்ததைவிட, வகுப்பிற்கு
வெளியே அவர் செய்துகாட்டி, சொல்லிக்கொடுத்தவைதாம் அதிகம்.
மற்றொரு நாள், வேலைவாய்ப்புப்
பற்றிப் பேருந்தில் பேசிக்கொண்டே சென்றோம். நான் புலம்பியபடியே வந்தேன். பொறுமையாகக்
கேட்டுக்கொண்டே வந்த அவர், என்னைப் பார்த்து, ஓட்டுநர் இருக்கைக்குமேல் இருந்த திருக்குறளை வாசிக்கச் சொன்னார். ‘காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்’ - வாசித்தேன்.
இன்றும் எப்போது - எங்கு இந்தக் குறளைப் பார்த்தாலும் ஒரு சிறு புன்னகை வந்து
ஒட்டிக்கொள்கிறது.
தமிழ்த்துறைக்குச் செல்லும்போதெல்லாம் அவருக்கு எதிரே அமர்ந்துகொள்வேன்.
திருப்பெருந்துறையில், திருவாதவூரர்
சரண்புகுந்ததுபோல. ஒருமுறை அவருடைய கையெழுத்துத் தேவைப்பட்டது. பேச்சுவாக்கில்,
‘உங்க கையெழுத்த நீங்கதானே போடணும்; நான் போடமுடியாதுங்களே’ என்றேன். ‘யேன்… நீயே போடேன்… இனிமே
நீதான் பாலுசாமி’ என்றார். பாலுசாமியாக அவர் என்னை ஆய்வாளனாக்கியுள்ளார்.
பாரதிபுத்திரனாக என்னை உணர்வாளனாக்கியுள்ளார். ஆம்… அவர் என்னை
பாலுசாமியாக்கியிருக்கின்றார். அது கிட்டாத பேறுதான் என்றாலும், அப்படிச் சொல்லிக்கொள்வதற்கு என்னைத் தகுதிப்படுத்த உந்தியிருக்கின்றார்.
வகுப்பில் யாழ்நூல் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘அந்த நூலை எனக்குத் தாருங்கள். படித்துவிட்டுத்
தருகின்றேன்’ என்றேன். விடுமுறை நாட்களுக்குப் பிறகும்,
அவருக்கிருந்த பல்வேறு வேலைகளுக்கிடையிலும், மறவாமல்
கொண்டுவந்து, தந்தார். அந்தப் பரிவிற்காக வகுப்பிலேயே கண்கலங்கிப்போனேன்.
இப்போதும் எனது நண்பர்கள் அதனைச் சொல்லிச் சிரிப்பார்கள்.
களஆய்வு குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘வெள்ளக்காரன பாரு… சோறு தண்ணி எதப்பத்தியும் கவலப்
படமாட்டான். அவன்பாட்டுக்குப் போவான். எங்கயோ படுப்பான்… எதையோ சாப்டுவான். இப்படித்தான்
ஆய்வு செய்வான்’ என்று சொன்னார். இந்தச் சொற்கள், முன்பின் அறியாத ஊர்களுக்கும், முகம் தெரியாத மனிதர்களிடமும்
என்னைக் கொண்டு சேர்த்தன.
இப்படி எத்தனையோ நிகழ்வுகளைச் சொல்லலாம்.
பல கருத்தரங்குகளில் – சொற்பொழிவுகளில் – நிகழ்வுகளில் – களஆய்வுகளில்
- சுற்றுலாக்களில் என அவரோடு பல இடங்களுக்குச் சென்றிருக்கின்றேன். கல்லூரிகளுக்குச்
சென்று அவர் வழங்கும் சொற்பொழிவுகளில் மெய்மறந்து அமர்ந்திருக்கின்றேன். அவருடைய
உரையை எப்படியாவது பதிவுசெய்துவிட வேண்டும் என்று தயாராக இருந்தும் கோட்டைவிட்டது
அதிகம். வேறு யாராவது பேசிய பேச்சுகளை, விழா முடிந்து வரும்போது, ‘அவர் பேசியதிலிருந்து என்ன
புரிஞ்சிக்கிட்ட’ என்று நான் புரிந்துகொண்ட விதத்தைக் கேட்டு,
அவருடைய கருத்தைச் சொல்லிப் பயனுடையதாக்குவார்.
அவரை அறியாதவர்களுக்கு எப்போதும் கடினமான மனிதராகவே தெரிவார். ஆனால்
அவர் அளவுக்கு நகைச்சுவை உணர்வுடையவர்களைக் காண்பது அரிது. அவருடைய நகைச்சுவைகளுக்கு
நான் பெரிய இரசிகன். சத்தமே இல்லாமல் எதையாவது சொல்லிவிட்டு, ஒன்றுமறியாதவர் போல அமர்ந்திருப்பார். கேட்டிருந்த
நாங்கள் வெடித்துச் சிரிப்போம். மிக இனிமையாகப் பாடுவார். வீட்டில் ஆழ்வார் பாசுரங்களைப்
பாடிக்கொண்டிருப்பார். அருகில் நான் இருப்பேன். ‘இவ்ளே அழகாப்
பாடுறனே, என்னைக்காவது நல்லாப் பாடுறீங்கன்னு சொல்லியிருக்கியா?’
என்பார். ‘கருணையே இல்லாத உனக்கு யாரு கருணா,
கருணான்னு பேரு வச்சது? என்பார். கணினியைக்
கையாள்வது தொடர்பாக அலைபேசியில் அவருக்குச் சொல்லித்தந்தால், ‘இங்க பார்… நான் பாடம் எடுக்கும்போது என்னைக்காவது உன்கிட்ட கோவப்பட்டிருக்கனா?
நீ ஏன்கோபப்படுற?’ என்று தீவிரமாகச் சொல்லிச் சிரிக்க
வைப்பார்.
அவர் பணி ஓய்வுபெறும் ஆண்டில் வர்தா புயலினால் கிறித்தவக் கல்லூரி
வனம் நிலைக்குலைந்து போயிருந்தது. 29-30 ஆண்டுகளாக அவர் உலவிய இடம். கவிதை வளர்த்த மரங்களெல்லாம் தலைக்கீழாய் கிடந்தன.
சாய்ந்துகிடந்த செஞ்சந்தன மரத்தினை வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தார். சொல்லமுடியாத
மௌனத்தோடு நின்றிருந்தார். அந்த மௌனத்திற்கு என்னவென்று விளக்கம் கொடுத்துவிட
முடியும்?
அவருக்கு மாணவர்கள் அதிகம். அவருடைய மாணவர்கள் உலகம் முழுவதும்
இருக்கின்றார்கள். அவர்கள் எப்போதும் இவர் குறித்துப் பேசிக்கொண்டிருக் கின்றார்கள்.
சிலரோடு பேசியிருக்கின்றேன். அவர்கள்,
இவர் குறித்துப் பேசமுற்பட்டதும் ‘தீசேர் மெழுகுபோல’ உருகிப்போவார்கள். கண்கள் கசியத் தொடங்கிவிடும். கூடவே என் கண்களும் நிறைகண்களாகும்.
என்ன மனிதர் இவர், இப்படியா மனங்களைப் பிணைத்துக்கொள்வார்! நான் பல ஆயிரங்களில் ஒருவனாகவோ, இலட்சங்களில்
ஒருவனாகவோதான் இருப்பேன். ஏதோ ஒருவிதத்தில் நானும் அவர்களுள் ஒன்றாக இருக்கின்றேன் என்பது பிறவிப்பேறு!
பாரதிபுத்திரன் ஆயிரக்கணக்கான இதயங்களில் வியாபித்திருக்கின்றார்!
***
No comments:
Post a Comment