Monday, June 11, 2018

தட்டுக் கழுவத் தெரியும் என்று சொல்லி விடாதீர்கள்!


யாரிடமும்
தனக்குத் தட்டுக் கழுவத் தெரியும் என்று
சொல்லி விடாதீர்கள்

தெரிந்துவிட்டால்
மீண்டும் மீண்டும் தட்டுக் கழுவ
உங்களையே அழைப்பார்கள்
எந்த நேரத்திலும் வஞ்சனையின்றி
அழைப்பார்கள்
இதுதான் முக்கியம் என்பார்கள்
உடலும் உள்ளமும் சோர்ந்திருக்கும்போதும்
கட்டாயப்படுத்தி அழைப்பார்கள்
நீதான் கழுவுவதில் திறமையானவன்
என்பார்கள்

தட்டுக் கழுவ நீர் இல்லையென்று சொன்னால்,
'அதனால் என்ன? உன்னிடம்தான் நாக்கு இருக்கிறதே... 
நாக்கால் நக்கிக்கூடத்
தட்டைக் கழுவிப் பின்
துடைத்துக்கொள்ளலாம் என்பார்கள்...
நக்கி நக்கி நாக்குத் தேய்ந்தாலும்கூடக்
கவலையின்றி நக்கச் சொல்வார்கள்
இப்படிச் செய்தால்
உன்னைவிடச் சிறத்த 'தட்டுக் கழுவி' வேறு
யாருமே இல்லை எனப் பட்டம்
கொடுப்பார்கள்

கழுவத் தெரிந்திருந்தாலும்
தனக்கு வேண்டியவர்கள் கழுவுவதைத்
துளியும் அனுமதிக்க மாட்டார்கள்
அது சுத்தமில்லை என்பார்கள்

தட்டுக் கழுவுவதில் சுணக்கம் காட்டினால்
வாழ்க்கை நாசமாகிப் படுத்துவிடும்
என்பார்கள்

எனவே நண்பர்களே...!
தட்டுக்கழுவத் தெரியும் என்று
எவரிடமும் சொல்லிவிடாதீர்கள்!

***

No comments:

Post a Comment