Sunday, September 23, 2018

சிறைக்குடி ஆந்தையார்



கூற்று : காப்பு  மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது

விளக்கம்: காப்பு மிகுதி – தலைவி காதல்வயப்பட்டதை அறிந்த தாயர் முதலியோர், அவளை வெளியே விடாமல் காப்பது.

 
பூஇடைப் படினும் யாண்டுகழிந் தன்ன
நீர்உறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவுஅரி தாகிய தண்டாக் காமமொடு
உடன்உயிர் போகுக தில்ல, கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவே மாகிய புன்மைநாம் உயற்கே (குறுந்தொகை – 57)

தெளிவுரை

தங்கள் இருவருக்கும் இடையே ஒரு பூ இடைப்பட்டுப் பிரிந்தாலும் கூட, பல ஆண்டுகள் கழிந்தது போலக் கருதி, வருந்தும் இயல்புடையது நீரில் வசிக்கும் மகன்றில் என்னும் பறவை. 

இல்லறக் கடமைகளை அறிந்து, அதனைச் சிறப்புற ஆற்றுவதற்கென இருவராகப் பிறந்த இவ்வுலகத்தில், தனித்தனியே பிரிந்து, ஒருவராகி வருந்தும் நிலையிலிருந்து தப்பிப்பதற்காகக் குறைவற்ற காதலுணர்வுடன் ஒன்றுபட்டு எங்கள் வாழ்நாள் கழிவதாகுக! அதுவே எமது விருப்பம்.

சிறப்புக் குறிப்பு

மகன்றில் என்னும் நீர் வாழ் பறவை, ஆணும் பெண்ணுமாகக் கூடி, பிரியாது வாழும். இதுபோல, பனை மடலில் கூடுகட்டி வாழும் அன்றில் பறவையும், ஒன்று இறந்தால் மற்றொன்று, கத்திக்கத்தியே உயிர்விடும்.  இருவரும் நெஞ்சாலும் உயிராலும் ஒருவராகவே பிறந்திருக்க வேண்டுமாயினும், இல்லறக் கடமைகளை ஆற்றுவதற்கும், கூடி இன்பம் துய்ப்பதற்கும் இருவராகப் பிறந்தனராம். இதனை, ‘கடன் அறிந்து – கடமைகளை அறிந்து’ இருவராகப் பிறந்தனர் என்பது சிந்திக்கத்தக்கது.





Monday, June 11, 2018

தட்டுக் கழுவத் தெரியும் என்று சொல்லி விடாதீர்கள்!


யாரிடமும்
தனக்குத் தட்டுக் கழுவத் தெரியும் என்று
சொல்லி விடாதீர்கள்

தெரிந்துவிட்டால்
மீண்டும் மீண்டும் தட்டுக் கழுவ
உங்களையே அழைப்பார்கள்
எந்த நேரத்திலும் வஞ்சனையின்றி
அழைப்பார்கள்
இதுதான் முக்கியம் என்பார்கள்
உடலும் உள்ளமும் சோர்ந்திருக்கும்போதும்
கட்டாயப்படுத்தி அழைப்பார்கள்
நீதான் கழுவுவதில் திறமையானவன்
என்பார்கள்

தட்டுக் கழுவ நீர் இல்லையென்று சொன்னால்,
'அதனால் என்ன? உன்னிடம்தான் நாக்கு இருக்கிறதே... 
நாக்கால் நக்கிக்கூடத்
தட்டைக் கழுவிப் பின்
துடைத்துக்கொள்ளலாம் என்பார்கள்...
நக்கி நக்கி நாக்குத் தேய்ந்தாலும்கூடக்
கவலையின்றி நக்கச் சொல்வார்கள்
இப்படிச் செய்தால்
உன்னைவிடச் சிறத்த 'தட்டுக் கழுவி' வேறு
யாருமே இல்லை எனப் பட்டம்
கொடுப்பார்கள்

கழுவத் தெரிந்திருந்தாலும்
தனக்கு வேண்டியவர்கள் கழுவுவதைத்
துளியும் அனுமதிக்க மாட்டார்கள்
அது சுத்தமில்லை என்பார்கள்

தட்டுக் கழுவுவதில் சுணக்கம் காட்டினால்
வாழ்க்கை நாசமாகிப் படுத்துவிடும்
என்பார்கள்

எனவே நண்பர்களே...!
தட்டுக்கழுவத் தெரியும் என்று
எவரிடமும் சொல்லிவிடாதீர்கள்!

***

சடச்சியும் சக்கரக்கட்டியும்


அண்ணா… இந்தப் பழம் இன்னும் ரெண்டு நாள்ள விழுந்துடும் பாறேன்.

இல்லடா... ராத்திரியே விழுந்துடும். 

எப்படிண்ணா சொல்லுற?

அதுலாம் அப்டித்தான். நீ வேனா பாரு!

அண்ணா, அது முழுசா எனக்குத்தான். அம்மா சொல்லிருக்கு.

இல்ல… எனக்குத்தான்.

இல்ல… இல்ல… எனக்குத்தான் போ...

இப்படியே, வாங்குவாதம் முற்றி இருவரும் அடித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். சிறிதுநேரத்திற்குள் பழத்துக்காக நடக்கும் இன்னொரு யுத்தம் போலவே ஆகிவிட்டது. இரண்டு பேரும் கட்டிக்கொண்டு உருள ஆரம்பித்ததும், தாரணி ஓடிவந்து, இரண்டு பேர் முதுகிலும் செமத்தையாக நாளு வைத்தாள். அடிவாங்கின வேகத்தில் இருவரும் அழுதுகொண்டே, அங்கிருந்த குடிசைக்குள் ஒளிந்து கொண்டார்கள். குடிசை இருட்டிக்கொண்டிருந்தது.



அடுக்குமாடிக் கட்டடங்கள் சூழ்ந்த அந்தப் பகுதியில் புதிதாக ஒரு கட்டடம் அமைக்கும் வேலைகள் துவங்கப்பட்டிருந்தன. அத்திவாரம் அமைப்பதற்குக் குழிகள் தோண்டப்பட்டிருந்தன. ஒன்றரை கிரெளண்ட் நிலம். மூன்று அடுக்கு மாடி கட்டுவதற்குரிய அளவுகளோடு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அந்த இடத்தின் தெற்கு மூலையில் சிறிய குடிசை ஒன்று அமைக்கப்பெற்றிருந்தது. அதில் கட்டுமானத்திற்குத் தேவையான பொருட்களும், தாரணியும் குடியிருந்தார்கள். தாரணி அந்தக் குடிசையில் இருந்துகொண்டே, கட்டட வேலை முடியும் வரைக்கும் ‘வாட்ச்மேனாக’ இருக்கவேண்டும்; கூடவே, சித்தாள் வேலையும் செய்துகொள்ளவேண்டும் என்று பேசி பணியமர்த்தப் பட்டிருந்தாள்.

தாரணி உறுதியுடையவள். தன்னுடைய இரு பிள்ளைகளையும் தனியாளாக இருந்து வளர்த்து ஆளாக்கவேண்டிய கடமையும் கட்டாயமும் அவள் தலைமீது இருந்தது. கிராமத்தில் அவளுக்கு நடவிலிருந்து அறுப்பு வரையிலான எல்லா வேலைகளும் அத்துப்படி. அதில் கிடைக்கும் சொற்பக்கூலியைக் கொண்டு தனது பிள்ளைகளை வளர்க்க முடியாது என்று திடமாக நம்பி, சென்னைக்கு வந்தவள் அவள்.

சென்னையில் இருக்கும் அவளது அக்கா வீட்டில்தான் சிறிது காலம், தம் பிள்ளைகளோடு தாரணி இருந்தாள். கொஞ்ச நாட்களிலேயே, அவளுடைய அக்காவும், அண்ணனும், ‘நீ திரும்ப ஊருக்கே போய்டு, உன்னால இங்க இருந்து சமாளிக்க முடியாது’ என்று வீட்டை விட்டு அனுப்ப முயற்சித்தார்கள்.

யார் இருக்கிறார்களோ இல்லையோ, தன் அண்ணன் இருக்கிறான் என்ற நினைப்பில் சென்னை வந்திருந்தாள் தாரணி. புதிதாக வீடு பார்க்க அவளிடம் காசு இல்லை. அண்ணனிடம் கேட்டுப்பார்த்தாள். ‘கடனாகவாவது கொடு. திருப்பித் தந்திடுறேன்’ என்று கேட்டும், ‘நமக்கேன் வம்பு, யாரோ எப்படியோ போகிறார்கள். இருக்கின்ற தலைவலியில் இதுங்க வேற! யாரு இதுங்களுக்கு வடிச்சிக் கொட்டுறது? இதனால என்ன வேலைக்குப் போகமுடியும்? வேலைக்குப் போனா, சம்பளத்த நம்மக்கிட்டயா தரப்போவுது? கொடுக்குற காசு எப்படியும் திரும்பாது’ என்றெல்லாம் யோசித்த அவள் அண்ணன், பணம் கொடுத்து உதவ முன்வரவில்லை. எப்படியாவது ஊருக்கே திருப்பியனுப்பத்தான் முழுமுயற்சி செய்தார். சென்னைக்குச் சென்றால், அண்ணன் இருக்கிறான். அக்கா இருக்கிறாள். பார்த்துக்கொள்வார்கள். எப்படியும் ஒருவேலையை வாங்கித் தருவார்கள் என்றெல்லாம் எண்ணி சென்னை வந்தவளுக்கு எல்லோரிடமிருந்தும் ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.

ஊரிலிருந்து சென்னைக்குப் பிழைப்புத்தேடி வருபவர்கள், சென்னை வந்ததுதம் ழுமுதாக மாறிப்போகிறார்கள். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மீதூர்ந்து நிற்கிறது. அதற்காகவே ஓடுகிறார்கள். மனிதாபிமானம், மனித உறவுகள், சொந்தங்கள் எல்லாமும் இல்லாமல் போகிறது. ‘காசிருந்தால் நாய் மாதிரி புடுங்க வந்துடுவாங்க, பொழைக்கவே விடமாட்டாங்க’ என்றெல்லாம் உறவுகள் குறித்துக் கற்பித்துக்கொண்டு, ஒதுங்கிக்கொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு தேவையெனில் மட்டும் எதையாவது சொல்லி, ஒட்டிக் கொள்வார்கள். அண்ணனைப் போல வருமா? தம்பியை, அக்காவை, மாமாவைப் போல வருமா? என்று சொல்லி பல்லிலித்துக்கொண்டு நிற்பார்கள். பிழைப்புத்தேடி சென்னைக்கு வரும் பெரும்பாலானவர்களின் உறவுகள் இப்படி நிறமாறிப்போயிருக்கின்றன.

தாரணி வைராக்கியம் நிறைந்தவள். பிள்ளைகளுடைய எதிர்காலம், அவர்களது படிப்பு இதெல்லாம் நினைத்து, தங்கியிருந்த வீட்டை விட்டு வெளியேறினாள். வீதி வீதியாக அலைந்து புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களிலெல்லாம் வேலை கேட்டு, இறுதியாக இப்படியொரு வேலை - வாச்ட்மேனாக ஒரு குடிசையில், சிமெண்ட் மூட்டைகளோடு வாழ்ந்து கொண்டிருந்தாள்.

தனியாளாக நின்று பெறும் துன்பங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் மத்தியில் இந்த இரண்டு பிள்ளைகளின் சேட்டைகளும் அவளைப் பாடாய்ப் படுத்திவிடும். வலி, வேதனை எல்லாம் இந்த இரண்டு பேரின் முதுகிலும்தான் படியும். எவ்வளவுக்கு எவ்வளவு அடிக்கிறாளோ, அந்தளவிற்கு அன்பாகவும் இருப்பாள். இவர்களும் லேசுபட்டவர்கள் இல்லை. எப்போது பார்த்தாலும் சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள். அன்றும் அப்படித்தான்.

கட்டப்படும் இடத்தைச் சுற்றிலும் பெரிய பெரிய அடுக்குமாடி வீடுகள் நிறைந்திருந்தன. அவ்வீடுகளின் மதிற்சுவர்களையொட்டி மா, பலா, கொய்யா போன்ற பழ மரங்கள் நடப்பட்டு, அவை பலன்தர ஆரம்பித்திருந்தன. எனினும், மரத்தினருகே செல்ல முடியாதவாறு, மதிற்சுவர்கள் உயரமாக இருந்தன. மரத்திலிருந்து எப்போதாவது ஒன்றிரண்டு பழங்கள் கீழே விழும். அதை எடுப்பதற்கு இருவருக்குள்ளும் போரே நிகழும்.

பல நாட்களாகவே, அருகிலிருந்த அந்தப் பலா மரத்தை இருவரும்  கவனித்து வந்தார்கள். இந்தப் பக்கமாகத் தாழ்ந்திருந்த பலா மரக்கிளையில் ஒரு பெரிய பலா தொங்கிக்கொண்டிருந்தது. அது சிறியதாக இருந்ததிலிருந்து அதைக் கண்ணும் கருத்துமாகக் கண்களாலேயே பாதுகாத்துவருகிறார்கள். அதன்கீழ் சென்று, ‘நீ எப்ப விழுவ’ என்று அப்பப்பக் கேட்டுக்கொள்வார்கள். பழம் சிறிது சிறிதாக முதிர்ந்து, எப்போது வேண்டுமானாலும் விழும் நிலைக்கு வந்திருந்தது.

பழத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த இந்த இருவரும், பழம் விழப்போவதை அறிந்து, அது விழுவதிற்குள்ளாகவே சண்டைப்போட ஆரம்பித்துவிட்டார்கள். தற்போது தாரணி கொடுத்த அடியில், சிமெண்ட் மூட்டைகளுக்கிடையே ஒளிந்துகொண்டு, அங்கேயே தூங்கியும் போனார்கள். 

***

‘தம்பி…. தம்பி… எந்திரிங்க… மாமா வந்துருக்காங்க பாருங்க… எந்திரிக்க’ என்று எழுப்பினாள் தாரணி.

இருவரும் தூக்கத்திலிருந்து எழுந்தார்கள். இரவு மூட்டைகளுக்கிடையே கிடந்த அவர்களைத் தூக்கி, உணவூட்டி, பாயில் கிடத்தி இருந்தாள். காலையில் எழுந்ததும், கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.

வீட்டை விட்டு வெளியேற்றிய மாமா, கோணியில் ஒரு பெரிய பலாப் பழத்தை – முன்பு, தாங்கள் பார்த்து பார்த்து கண்களாலேயே தின்ற பலாப்பழத்தை அறுத்துக்கொண்டிருந்தார். இரவே அது விழுந்திருந்திருந்தது. சத்தம் கேட்டுச் சென்ற தாரணி, அதைத் துணியால் சுற்றி வீட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறாள். காலையில் அவ்வழியாகச் சென்ற அவளது அண்ணனைப் பார்த்ததும், வீட்டிற்குள் அழைத்து பேசிக்கொண்டிருந்தவள், பலாப் பழத்தைக் காட்டி உரித்துத்தரச் சொன்னதும், தற்போது அப்பழத்தை அவர் அறுத்துக் கொண்டிருந்தார்.

கண்களைக் கசக்கிக்கொண்டு எழுந்த இருவரும் போட்டிப்போட்டுக் கொண்டு பல் விளக்கி, அரையும்குறையுமாக கால்களைக் கழுவிக்கொண்டு, ஓடிவந்து பழத்திற்கு முன் அமர்ந்துகொண்டனர். தாரணியும் காலை சாப்பாட்டிற்கான வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எப்படியும் 150 சுளைகளுக்கு மேல் இருந்தன. சுளைகளைப் பிரித்தெடுத்ததும் இருவருக்கும் சில சுளைகளைக் கொடுத்து விட்டு, பொன்னம்மாளுக்கும் கொஞ்சம் வைத்துவிட்டு, மிச்சமீதியைப் பொட்டலமாகக் கட்டிக்கொண்டு, அங்கிருந்து சைக்கிலில் வேகமாகச் சென்றுவிட்டார். போகிறேன் என்றுகூடச் சொல்லவில்லை. தாரணி வெளியே வந்து பார்த்தாள். தாங்கமுடியாத அழுகையும் ஆத்திரமும் வந்தது அவளுக்கு. கொடுக்கத்தான் இவர்களுக்கு மனது இருப்பதில்லை. இருப்பதையுமா சுரண்டிக்கொண்டு செல்வார்கள்?

மீதமிருந்த எல்லாப் பழங்களையும் எடுத்துக்கொண்டு, சைக்கிலில் செல்லும் தம் மாமாவையே ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள் இந்தச் சிறுவர்கள் இருவரும்.