(கணித்தமிழ்ப் பேரவைத் துவக்க விழாவில், கணித்தமிழ்ப்பேரவைக் குறித்த அறிமுகவுரை, 27.08.2024)
இந்த நாள் இனிய நாள். பொன்விழாக் கண்ட எம் தமிழ்த்துறையின் வரலாற்றில் மிக முக்கியமான நாள். பல்வேறு துணை அமைப்புகளைத் தமிழ்த்துறை இயக்கிக்கொண்டிருக்கின்றது. அவற்றுள் ஒன்றாக – மாறிவரும் சூழலை உணர்ந்து, கணித்தமிழ்ப் பேரவையைத் தன்னோடு இன்று முதல் இணைத்துக்கொள்கிறது.
மாறிவரும் சூழலைத் தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்ளும் மொழிகளில் தலையாயது தமிழ் மொழி. நேற்று இன்றல்ல... மொழித்தோன்றிய காலந்தொட்டு அது அப்படித்தான் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு வந்திருக்கிறது. அதனாலேயே இத்தனை நூற்றாண்டுகள் கண்டபின்பும் தழைத்து செழித்து நிற்கிறது.
நமக்கெல்லாம் ஒற்றை அடையாளம் நம்முடைய தமிழ் மொழி. அது தொடர்புக்கான கருவி என்ற நிலையிலிருந்து அதற்கும் மேலே என்ற நிலையில் உணர்வோடு கலந்து நிற்பது.
செந்தமிழே உயிரே நறுந்தேனே...
செயலினை மூச்சினை உனக்களித்தேனே
நைந்தாய் எனில் நைந்துபோம் என்வாழ்வு
நன்னிலை உனக்கெனில் அது எனக்கும் தானே
என்றும்
உலகாள உனதாய் மிக
உயிர்வாதை அடைகிறாள்
உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா
என்றெல்லாம் தோன்றிய குரல்கள், இருபதாம் நூற்றாண்டுக்கு மட்டும் உரியவை அல்ல. இம்மண்ணில் மொழித்தோன்றிய காலந்தொட்டு – அதற்கு இழுக்கு நேரும்போதெல்லாம் எழுந்த குரல்கள்.
அதனால்தான் தமிழ்மொழி, எழுத்து உருவான பிறகு, அவசர அவசரமாகப் பானைப் பொறிப்புகளில் இடம்பெற்றது. தமிழ்நாட்டில் தோண்டும் இடங்களிலெல்லாம் தமிழி எழுத்து பொறிப்புகள் கிடைக்கின்றன.
அவசர அவசரமாகக் கல்வெட்டுகளில் செப்பேடுகளில் ஏறிக்கொண்டது. இந்தியாவில் கிடைக்கும் கல்வெட்டுகளில் பெரும்பான்மை தமிழுக்குரியதாக இருக்கிறது.
அவசர அவசரமான சுவடிகளில் ஏறிக்கொண்டது. 300 – 400 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் தொடர்ந்து படியெடுக்கப்பெற்று, இன்று நம் கைகளில் சங்க இலக்கியங்களாகவும் பிற இலக்கியங்களாகவும் வந்துசேர்ந்திருக்கிறது.
மேலை நாட்டாரின் வருகைக்குப் பிறகு அச்சு இயந்திரங்கள் வந்ததும், அவசர அவசரமாக அச்சேறிய மொழி தமிழாகத்தான் இருக்கிறது. இந்திய மொழிகளிலேயே முதன்முதலில் அச்சேறிய மொழி தமிழ்தான் என்கிறார்கள்.
கணினி வந்தபிறகு, அவசர அவசரமாகக் கணினிக்கும் தன்னை தகவமைத்துக் கொண்டது. இணையம் வந்தபிறகு, அதிலும் ஊருக்கு முந்தித் தம்மைப் பொருத்திக்கொண்டது. தற்போதைய காலம் செயற்கை நுண்ணறிவுக் காலம். இதற்கும் போட்டிப்போட்டுக் கொண்டு, ஈடுகொடுக்கிறது.
நாம், நம் மொழியை நேசிப்பவர்கள். அதன் பாதுகாவலர்கள். ஒவ்வொரு தமிழரும் மொழிக்கான காவலர்கள்தாம். தமிழை நிலைப்பேறுடையதாக ஆக்க அல்லது மொழியைப் பாதுகாக்க, மாறிவரும் சூழலுக்கு ஏற்ற தொழில்நுட்பங்களில் தமிழ்மொழியைக் கொண்டு சேர்ப்பதே ஒரேவழி. உலகம் பரவிய தமிழர்கள் தொடர்ந்து முனைப்புடன் இப்பணிகளில் ஈடுபடுகின்றனர்.
கணினியில் தமிழைப் பயன்படுத்தவும், தமிழ்க்கணினித் தொடர்பான ஆய்வுகளை மாணவர்கள் செய்திடவும் வழிசெய்யும் வகையில், தமிழ்நாடு அரசு 2015ஆம் ஆண்டு, தமிழிணையக் கல்விக்கழகத்தின்வழித் தோற்றுவித்த அமைப்பே கணித்தமிழ்ப் பேரவை.
இணையப் பரப்பில் தமிழின் பயன்பாட்டைத் தரத்துடன் மேம்படுத்துவதையும், கணினித்தமிழ் சார்ந்து வேலை வாய்ப்புகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்குவதையும் அடிப்படை நோக்கமாகக் கொண்டு, கணித்தமிழ்ப் பேரவை துவங்கப்பெற்றது.
தமிழ் உள்ளீட்டு நுட்பங்கள், அலைபேசிகளுக்கான தமிழ்க் குறுஞ்செயலிகளை உருவாக்குதல், மென்பொருள்களைத் தன்னிலையாக்கம் செய்தல், தமிழ் மென்பொருள் உருவாக்குதல், தமிழில் நிரலாக்கம் செய்தல், வளைதளங்களையும், மின் – உள்ளடங்கங்களையும் உருவாக்குதல் போன்ற பல்வேறு வேலை வாய்ப்புகளுக்குப் பயிற்சியளிப்பதை இப்பேரவை ஊக்குவித்து வருகிறது.
தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகள் சாரை சாரையாக இத்திட்டத்தில் இணைந்து, தம் கல்லூரிகளில் கணித்தமிழ்ப்பேரவைகளைத் துவக்கின.
***
சென்னைக் கல்லூரிக்கென்று பெருமரபு உண்டு. கணினிக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் காலத்திலேயே, தமிழ்மொழிக்குக் கணினியைக் கொண்டு ஆய்வுகளை நிகழ்த்திய மரபு எம்முடையது. பேராசிரியர் கிஃப்ட் சிரோண்மணி அவர்கள் முதற்கொண்டு, தற்போதைய பத்மமாலா அம்மா வரை அப்பெருமரபு தொடர்ந்து வருகிறது.
கிறித்தவக் கல்லூரி மண், தனக்கானதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் என்பதைத் திடமாக நம்புபவன் நான். இம்மண் தேர்ந்தெடுத்துக்கொண்ட தகைமை சான்றவர் நம்முடைய கல்லூரி முதல்வர் முனைவர் பால் வில்சன் அவர்கள். பேரறிஞர் அண்ணா கண்ட மாபெரும் தமிழ்க் கனவு போல, நம் முதல்வர் கண்ட தமிழ்க்கனவு, எம்முடைய தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பால்பிரபு சாந்தராஜ் அவர்களின் வழியாக இன்று நிறைவேறியுள்ளது.
மொழிக்குரியவராக - தமிழராக - தமிழ் மாணவர்கள் மீது தாம் கொண்ட கரிசனமும் பரிவுமே எம்முடைய முதல்வர் இப்பேரவைத் துவங்குவதற்கு அடிப்படை காரணம். தமிழோடு கணினி அறிவு காலத்தின் கட்டாயம்.
நாட்டும்சீர்த் தமிழன் இந்த
நானில மாயம் கண்டு
காட்டிய வழியிற் சென்று
கதிபெற வேண்டும் என்றே
ஆட்டும் சுட்டு விரல் கண்டே
ஆடிற்று வையம் என்று
கேட்டுநான் இன்ப ஊற்றுக்
கேணிக்குள் குளிப்ப தெந்நாளோ
என்று பாவேந்தர் ஆசைப்படுவதைப் போல, நம் கல்லூரி மாணவர்கள், குறிப்பாகத் தமிழ் மாணவர்கள் இப்பேரவை வாயிலாகப் பயனடைந்து, உச்சம் பெற வேண்டும் என்பதே, நம் முதல்வர், பால் வில்சன் அவர்கள் காணும், மாபெரும் தமிழ்க்கனவு.
தமிழ் மாணவர்கள் கணித்தமிழ்ப் பேரவையைப் பயன்படுத்திக்கொண்டு, கணினி அறிவுப் பெறவேண்டும்.
நன்றி.