முல்லைக்கலியில் ஏறுதழுவல்
இந்த 2016ஆம் ஆண்டு, ஜல்லிக்கட்டுக்குப்
போறாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டினுடைய அடையாளமாகவும், தமிழ் மண்ணின்
வீரத்தைப் பறைசாற்றுகின்ற விளையாட்டாகவும் இருக்கின்ற ஜல்லிக்கட்டிற்கு 2008வது ஆண்டுமுதலே
தலைவலி ஆரம்பித்துவிட்டது. அதுமுதலே பொது தளங்களில் பெருமையாகக் குறிப்பிடவேண்டிய ஜல்லிக்கட்டு,
விவாதபொருளாக மாறிப்போனது. ஜல்லிக்கட்டு வேண்டுமா வேண்டாமா என்று, பிரபலங்கள் முதற்கொண்டு
உச்சநீதிமன்றம் வரைக்கும் பேசிக்கொண்டி ருக்கிறார்கள். நமக்கு ஜல்லிக்கட்டு என்றால்
காளையை அடக்கும் விளையாட்டு என்று நன்குத் தெரியும். அப்படிதானே நமக்கு சினிமா முதற்கொண்டு
நவீன இலக்கியங்கள் வரைக்கும் காட்டிருக்கிறார்கள்? உண்மையாகவே ஜல்லிக்கட்டு என்றால்
என்னவென்றும் அதனுடைய வரலாற்றையும் தெரிந்துகொள்ள நாம் முயற்சி செய்திருக்கின்றோமா?
கி.மு.3ல் இருந்து கி.பி.2 வரைக்குமான காலகட்டத்தைச் சங்க காலம் என்று சொல்வர். ஏறக்குறை 500 ஆண்டுகள். இந்தக் காலகட்டங்களில் உருவான இலக்கியங்களுக்குச் சங்க இலக்கியம் என்று பெயர். ஏறக்குறை 2000 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதிருந்த தமிழில் பாடின பாட்டுகள் அவை. அவற்றில் கலித்தொகை என்று ஒரு இலக்கியம். ஐந்து தலைப்புகளில் 150 பாடல்களைக் கொண்டது அது. முல்லைக்கலி என்கின்ற தலைப்பின்கீழ் இருக்கின்ற முதல் 7 பாடல்கள் இந்த ஜல்லிக்கட்டினைப் பற்றி பாடப்பெற்றிருக்கின்றன. ஜல்லிக்கட்டிக்குப் பழைய பெயர் ஏறுதழுவல் அல்லது ஏறுகோடல் என்பதாகும். ஏறுதழுவல் என்பது காளையை அடக்குவது கிடையாது. காளையை அணைப்பது. அதன் திமிலைப் பிடித்து அணைத்துக்கொண்டே சிறிது தூரம் செலுத்துவது. இப்படி செய்வதுதான் பழங்காலத்தில் ஏறுதழுவல் விளையாட்டாக இருந்தது.
முற்காலத்தில் இந்த ஏறுதழுவல் விளையாட்டைக் கால்நடை மேய்க்கின்ற இனக்குழுவான ஆயர் இனத்த சேந்த ஆயர் இளைஞர்கள்தான் நிகழ்த்தினர். அவர்களது குழுவில் பெண் குழந்தை பிறந்ததும், கூடவே ஒரு காளை கன்றையும் வளர்ப்பார்கள். குழந்தை வளர்ந்து, பெண்ணாகப் பருவடையும்போது காளையும் கம்பீரமாக வளர்ந்து நிற்கும். பொதுவாக நடக்கின்ற ஏறுதழுவல் நிகழ்ச்சியில் இந்தக் காளையை யார் அணைக்கிறார்களோ அவர்களுக்குத்தான் இந்தப் பெண்ணையும் திருமணம் செய்துகொடுப்பார்கள்.
பழங்காலத்தில் திருமணத்தை முதன்மையாகக் கொண்டுதான் ஏறுதழுவல் விளையாட்டை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஏறுதழுவும் களத்தை, இளைஞர்கள் தங்களுடைய வீரத்தை வெளிக்காட்டுகின்ற இடமாகவும் பயன்படுத்திக் கொண்டார்கள்.
விழாத் தொடக்கத்தில், பிடவம்பூ, காந்தட்பூ, காயாம்பூ என்று பலவகையான பூக்களைத் தலையில் சூடியிருக்குன்ற ஆயர் தலைவர்கள் ஒன்றுகூடி தங்களுடைய மன்னனான பாண்டினை வாழ்த்தியும் அவன் தீங்கின்றி நெடுநாள் வாழவேண்டும் என்றும் தங்களுடைய பெண்களுக்குரிய ஆடவரைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு குறிப்பிட்ட நாளை முடிவுசெய்து அந்நாளில், ஏறுதழுவல் விளையாட்டு நடைபெறும் என்று பறையடித்து அறிவிப்பார்கள்.
ஏறுதழுவுகின்ற இடத்திற்குத் தொழு என்றுபெயர். இந்தத் தொழுவைச் சுற்றி மேடை அமைத்திருப்பார்கள். அதன்மீது பெண்களும் ஆயர் தலைவர்களும் அமர்ந்திருப்பர்.
அந்தத் தொழுக்குள் நுழைகின்ற மாடுபிடி வீரர்கள் அனைவரும் முதலில் தங்களுடைய குலதெய்வங்களை வணங்குவர். பெரிய பெரிய ஆலமரங்களுக்குக்கீழ் இருக்கின்ற பழைய தெய்வங்களையும் நீர்நிலைகளில் இருக்கின்ற தெய்வங்களையும் தொழுதுவிட்டு தொழுவிற்குள் நுழைவர். அவர்கள் தொழுவிற்குள் வரும்போது இடியென முழங்கிக்கொண்டு வருவார்களாம். வீரர்களையடுத்து பலவகையான காளைகளையும் உள்ளே கொண்டுவருவர்.
தொழுவைச் சுற்றி இருக்கின்ற பரண்களில் பெண்கள் வரிசையாக நிற்பர். அவர்கள் பிடவம் பூ, முல்லைப்பூ, காந்தற்பூ, கொன்றை பூ என்று பல வகையான பூக்களை, தழை, கோதை, இழை என்று வகைவகையாகப் பின்னித் தலையில் சூடிக்கொண்டு இருப்பார்கள்.
எல்லோரும் வந்ததும், மூத்த தலைவர் ஒருவர், வரிசையாக நிற்கின்ற பெண்களையும் காளைகளையும் சுட்டிக்காட்டி, இந்த வெள்ளக் காளையின் கழுத்தைத் தழுவுகின்றவன், கூரிய அழகான பற்களைக் கொண்ட இந்த பெண்ணைப் பெறலாம் என்றும், கூர்மையான கொம்போடு இருக்கின்ற இந்த கருநிறத்து காளையைப் பிடிப்பவன், நிறைய அணிகலன்களையும் நீளமான கூந்தலையும் கொண்ட இந்தப் பெண்ணின் கூந்தலில் தூங்கலாம் என்றும், கொலை செய்யக்கூடிய தன்மையுடைய இந்தக் குரால் காளைளைத் தழுவுகின்றவன் தோடு அணிந்திருக்கின்ற இந்தப் பெண்ணின் மூங்கில் போன்ற தோள்களில் துயிலும் தகுதியுடைவன் என்றும் அறிவிப்பார். இதையடுத்து, பறை ஒலி முழங்க, போட்டி ஆரம்பமாகும். தொழுவிற்குள் நிற்கின்ற வீரர்கள், “இந்தக் காளையை அடக்கி இந்தப் பொண்ணை நான் பெறுவேன்” என்று சபதமிட்டு காளையைத் தழுவ முற்படுவார்கள்.
பிறகு, காளையும் வீரர்களும் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக்கொள்வர். பார்ப்பதற்கு அந்த இடமே போர்க்களம் போன்றிருக்கும். எங்கு பார்த்தாலும் மண் தூசு பறக்கும். மிகக் கடுமையாக நடக்கின்ற போரில், காளைகளின் கொம்பினை அந்த வீர இளைஞர்கள், தன்னுடைய மார்பில் ஏந்துவார்கள். காளைகளும் அவர்களைக் கீழேத்தள்ளி அவர்களது மேல் தன்னுடைய கூர்மையான கொம்புகளைக் கவிழ்க்கும். இதைக் காண்பவர்கள் எல்லாம் கலங்கிப்போவர்.
இதை,
எழுந்தது துகள்
ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்புக்
கலங்கினர் பலர் என்று கலித்தொகை
குறிப்பிடுகிறது.
கடுமையாகச் சண்டை நடக்கிறது. இடையில்
ஒரு வீரன், காளைய அடக்குவதால் கிடைக்கின்ற புகழை எண்ணி, தொழுவுக்குள் வருகிறான். அவன்
ஒரு காளையின் திமிலைப் பற்றபோய், முடியாமல் கீழே விழுகிறான். கபில நிறமாக இருக்கின்ற
அந்தக் காளை, கீழே விழுந்து கிடக்கும் அவனைப்பார்த்து, “இவன் எனக்கு சமமானவன் கிடையாது”
என்று எண்ணி, அவனை ஒன்றும் செய்யாமல், திரும்பிச் சென்றதாம். இப்படி நிறைய நிகழ்ச்சிகளைக்
கலித்தொகையில் பாக்க முடியும்.
காளையின் கொம்பினைப் பிடித்தும், அதனைத் தன் மார்போடு கட்டி அணைத்தும், கழுத்தை வளைத்தும், திமிலைத் தழுவியும், தன்னுடைய தோள்களுக்கு இடையில அதன் கழுத்தைக் கோர்த்தும், அதன் கொம்புகள் தன்மீது குத்தினாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் காளையை அணைத்தும் விளையாடுகின்ற வீரர்களையெல்லாம், பாரபட்சமே பார்க்காமல் முட்டித்தள்ளி, யாரும் தன்னைத் தழுவ விடாமல் விலகியும், விடாமல் தழுவுகின்றவர்களைக் குத்தியும், கடுமையாகச் சண்டையிட்டன அக்காளைகள்.
இறுதியாக, போட்டி முடிவுறுகின்றது. இரண்டு பக்கமும் கடுமையான சோர்வு. வெற்றி பெற்றவர்கள் நீலநிற மாலையைக் கழுத்தில் அணிந்துகொண்டு, தமக்கான பெண்களையும் கூட்டிக்கொண்டு பொது மன்றத்திற்குச் சென்று, மேளதாளங்கள் முழங்க குரவைக்கூத்து ஆடுவர். அப்போது, இப்படிப் பாடுகிறார்கள்.
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை
மறுமையும்
புல்லாளே ஆய மகள்
அதாவது, கொல்கின்ற காளையின் கொம்புக்கு அஞ்சும்
இளைஞனை ஆயர் குலத்து மங்கை அடுத்த பிறப்பிலும்கூட கணவனாக ஏற்றுக்கொள்ள மாட்டாள். என்றும்,
அஞ்சார் கொலையேறு கொள்பவர்
அல்லதை
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய
உயிர்த்துறந்து
நைவாரா ஆயமகள் தோள்
ஆய மகளின் தோள், கொல்லும் தன்மையுடைய ஏற்றுக்கு
அஞ்சாமல் அதனைப் பிடிப்பவருக்கே உரியது என்றும்,
வளியா அறியா உயிர்காவல்
கொண்டு
நளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார்
தோய்தற்கு
எளியவோ ஆயமகள் தோள்?
உயிர் காற்றுதான்
என்று உணர்ந்து வீரச்செயல் புரியாமல், உயிரைப் பெரியதாக மதித்து அதைப் போற்றி பாதுக்காக்க
விரும்பி, காளைகளின் கொம்புக்கு அஞ்சும் கோழைகள், தழுவும் அளவிற்கு ஆயமகளிரின் தோல்கள்
எளியதல்ல என்றும்
விலைவேண்டார் எம்இனத்து
ஆயர் மகளிர்
கொலையேற்றுக் கோட்டிடைத்
தாம்வீழ்வார் மார்பின்
முலையிடைப் போலப் புகின்
![]() |
Google Image |
கொல்லுகின்ற காளையின் கொம்புகளை, தாம் காதல் கொள்ளும்
பெண்ணின் மார்பகத்தைப் போல கருதி, வீர இளைஞர்கள் பாய்வார்களானால், அவர்களுக்குத் தங்கள்
மகளிரை மணம் செய்து கொடுப்பதற்கு எந்த விலையும் கேட்கமாட்டார்கள் ஆயர்கள் என்று ஆடிப்
பாடுவர்.
இறுதியாகத் தெய்வத்தையும் பாண்டியனையும்
வாழ்த்தி விளையாட்டை நிறைவுசெய்வர்.
தொடக்க காலத்தில் ஆயர்களிடம் மட்டும் இருந்த இந்த விளையாட்டு காலப்போக்கில் எல்லா இனக்குழுக்களும் பங்குகொள்கின்ற விளையாட்டாக மாறியது. இனக்குழுக்கள் ஜாதியாக மாறும்போது, திருமணத்துக்காக நடத்தப்பெற்ற இந்த ஏறுதழுவல் விளையாட்டு, பரிசு என்ற அளவில் மட்டும் நடத்தப்பெற்றது. இது 2000 ஆண்டுகளாக இந்தத் தமிழ் மண்ணில் நடத்தப்பெற்று வருகிறது.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிகமாகவும் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காளை விளையாட்டுகள் நடத்தப்பெற்றுவந்தன. இந்த விளையாட்டு, மஞ்சுவிரட்டு, வெற்றுவிரட்டு, எருதுகட்டு, வடம்மஞ்சு விரட்டு, சங்கிலி மஞ்சுவிரட்டு, கிட்டி மஞ்சுவிரட்டு, சல்லிக்கட்டு, அரங்க சல்லிக்கட்டு என்று வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு பெயர்களுடன் விளையாடப் படுகிறது.
ஏறுதழுவலின் வகைகள்
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிகமாகவும் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காளை விளையாட்டுகள் நடத்தப்பெற்றுவந்தன. இந்த விளையாட்டு, மஞ்சுவிரட்டு, வெற்றுவிரட்டு, எருதுகட்டு, வடம்மஞ்சு விரட்டு, சங்கிலி மஞ்சுவிரட்டு, கிட்டி மஞ்சுவிரட்டு, சல்லிக்கட்டு, அரங்க சல்லிக்கட்டு என்று வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு பெயர்களுடன் விளையாடப் படுகிறது.
மஞ்சு என்பதற்கு, நார் என்று பொருள்.
அதாவது, வேலியோரங்களில் வளர்ந்திருக்கின்ற கற்றாழை நாரை, பக்குவப்படுத்தி காளைகளின்
கழுத்தில் கட்டுவர். இதேபோன்று புளிச கீரை தண்டை ஊறவைத்து, அதில் இருந்து கிடைக்குற
நாரையும் கட்டுவர். இதனாலதான் இதற்கு மஞ்சுவிரட்டு என்று பெயர் வந்ததென்று இராமநாதபுரத்தில் சொல்கிறார்கள். இந்த மஞ்சு விரட்டு,
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், உறங்கான்பட்டி, கீழையூர், மேலவளவு, சேக்கிப்பட்டி,
மட்டங்கிப்பட்டி ஆகிய ஊர்களிலும், சிவகங்கை மாட்டத்தில் இருக்கின்ற சிராவயல், அரளிப்பாறை,
கல்லல், தேவப்பட்டு, பாகனேரி, நெடுமறம், கண்டிப்பட்டி, இடையமேலூர், கண்டரமாணிக்கம்,
பட்டமங்கலம், காரைக்குடி, குளத்துப்பட்டி, பலங்குடி ஆகிய ஊர்களிலும் நடத்தப்பெற்று
வந்தது.
வெற்றுவிரட்டு என்பதற்கு, ஊர்ப்பொது
இடங்களில் காளைகளை நிறுத்தி அங்கிருந்து விரட்டி விடும் விளையாட்டாகும். இது வெள்ளலூர்
பகுதிகளில் நடைபெறுகிறது.
![]() |
Google Image |
எருதுகட்டு என்னும் காளை விளையாட்டு
மதுரைக்குப் பக்கத்தில் உள்ள கொந்தகை என்னும் ஊரில் நடத்தப்படுகின்ற விளையாட்டாகும்.
இது இங்கே மிகவும் பிரபலமான விளையாட்டு. “கொந்தகை எருதுகட்டு கோமணத்த இறுக்கிக்கட்டு”
என்று ஒரு பழமொழியே இதற்காக வழங்கப்படுகிறது.
வடம் மஞ்சுவிரட்டு என்பது, நீளமான
கயிற்றில் காளையைக் கட்டி இரண்டு பக்கமும் ஆட்கள் பிடித்திருக்க, நடுவில் சென்று காளையின்
கழுத்தில் இருக்குன்ற பரிசுபொருளை எடுக்கும் விளையாட்டாகும். இது முதுகுளத்தூர் மற்றும்
வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் நடத்தப்பெற்றது.
சங்கிலி மஞ்சுவிரட்டு என்பது,
தேர் இழுக்கின்ற சங்கிலியில் காளைகளைக் கட்டி, அவிழ்த்துவிடுகின்ற காளை விளையாட்டு
ஆகும்.
ஜல்லிக்கட்டு என்பது, சல்லிக்காசுகளைப்
பரிசு பொருட்களாகக் காளையின் கொம்புக்கு இடையில் கட்டிவிடுவதால் வந்தபெயர் ஆகும். காளையைத்
தழுவுபவர்கள், இந்தக் காசினை எடுத்து வெற்றிபெறுவர். அலங்காநல்லூர் அச்சம்பட்டி, பாலமேடு,
மேட்டுப்பட்டி, குலமங்கலம், ஊமச்சிக்குளம், திருமங்கலம், மதுரை கோசாகுளம், புதூர்,
காடுபட்டி, குருவித்துறை, உசிலம்பட்டி, வத்தலகுண்டு, கொசவப்பட்டி, கம்பம் ஆகிய ஊர்களில்
இந்த சல்லிக்கட்டு விளையாட்டு நடந்தது. வாடிவாசல் வழியாக காளைகளை வெளிய விடுவதுதான்
இதன் சிறப்பு.
இத்தகைய காளை விளையாட்டுகளில்
பல புகார்கள் வந்ததால் அரசு பல கட்டுபாடுகளை விதித்து நடத்தின சல்லிக்கட்டிற்கு அரங்க
சல்லிக்கட்டு என்று பெயர். இது பல கட்டுப்பாடுகளுடன் நடைபெறும்.
சிக்கல்கள்
காலங்காலமாகப் பெருமைப்படும்படி நடந்துகொண்டிருந்த இந்த ஜல்லிக்கட்டினை எதித்து 2008ல் முதன்முதலாக வழக்கு தொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. தமிழ்நாடு அரசு “தமிழ்நாடு சல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009” என்ற சட்டத்தை நிறைவேற்றி, பல கட்டுபாடுகளுடன் 2011ஆம் ஆண்டு சல்லிக்கட்டை நடத்தியது.
- ஒரு மாவட்டத்தில் ஆண்டுக்கு 3 சல்லிக்கட்டுக்குமேல் நடத்த கூடாது.
- 20 லட்ச ரூபாய் வைப்புநிதி வைக்க வேண்டும்.
- மருத்துவ கருவிகளுடன், கால்நடை மருத்துவரும் போட்டியின்போது உடனிருக்க வேண்டும்.
- 5 பேருக்குமேல் காளையைத் தழுவக்கூடாது.
- இவற்றை மீறினால் ஓராண்டு சிறையும், ஒரு லட்ச ரூபா தண்டமும் செலுத்தநேரிடும் என்று பல நிபந்தனைகள் விதிக்கப்பெற்றன.
இருப்பினும் தொடர்ந்து, வழக்கு
உச்சநீதிமன்றத்தில் இருந்தது. அப்போதே பல இடங்களிலும் சல்லிக்கட்டினை எடுத்து செய்வதற்கு
சரியான தலைமை இல்லாததால் நின்றுபோனது. இதுபோதாதென்று, 2011 ஜுலையில் காளையையும் வன
விலங்கு பட்டியலில், அப்போதைய மத்திய அரசு சேர்த்தது. உள்ளதும் போச்சுசென்று ஆகிவிட்டது.
2012இல் சல்லிக்கட்டு நடத்துவதற்கு
அனுமதி கொடுக்கப்பட்டது. இருப்பினும் 77 நிபந்தனைகள் விதிக்கப்பெற்றன. காளையையும் மாடுபிடி
வீரர்களையும் பதிவு செய்வது. மாடுபிடி வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடத்துவது; சீருடை
அளிப்பது; அப்படி இப்படி என்று விதிமுறைகள்
பல விதிக்கப்பட்டன. 2012 ஜனவரி 16ல் அவனியாபுரத்திலும், 17இல் பாலமேட்டிலும் சல்லிக்கட்டு
நடத்தப்பெற்றது. விதிமுறைகளையும் கடுமையாக
அமல்படுத்தினர்.
இருப்பினும், விலங்குநல அமைப்புகள்
சார்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கு, 2014இல் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் நிரந்தமாகத்
தடை விதிக்கின்ற அளவிற்கு இட்டுச்சென்றது. இதைத் தொடர்ந்து நம் மக்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
நீதிமன்றமோ, கம்பியூட்டரில் விளையாடுங்கள், காளைக்குப் பதில் சிங்கத்தை அடக்குங்கள்
என்று தம் பங்குக்கு எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுகின்றது.
விதிமுறைகள் பின்பற்றப்படவில்லையெனில்,
அவற்றைத் தீவிரமாக அமலாக்குவதை விடுத்து, ஒட்டுமொத்தமாகத் தடைசெய்வது நியாயமாகாது.
இந்தத் தடைக்கு முக்கிய காரணம் பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் என்று சொல்லப்படுகிறது.
ஜல்லிக்கட்டின் தேவை
தமிழ்நாட்டு காளைகளை, அவரவர்களுடைய
வீடுகளில் ஒரு உறுப்பினர் போலதான் பாவிக்கிறார்கள். ஒரு காளை இறந்துவிட்டால், ஊரே சேர்ந்து
துக்கம் அனுசரிக்கும் காட்சிகளை உலகில் வேறு எங்கேயாவது பாக்கமுடியுமா??
நவீனத்துக்கு ஏற்றாற்போல மாறிக்கொள்ளுங்கள்
என்று அறிவுஜீவிகள் சொல்கிறார்கள். தமிழர்கள் ஒன்றும் பழமைவாதிகள் கிடையாது. காலத்துக்குக்காலம்
தமக்கு எது தேவைஎன்று எண்ணுகிறார்களோ அவற்றை மானசீகமாக ஏற்றுக்கொள்வார்கள். எடுத்துக்காட்டாக
உடை, உணவு என்று நிறைய சொல்லமுடியும். ஆனாலும் சில வழக்கங்கள் இன்றும் தொடர்ந்து வருகின்றன.
இதுதான் இந்த இனத்தின் சிறப்பு. ஒவ்வொரு இனத்திற்கும் பொதுவான சில வழக்கங்கள் இருக்கும்.
தமிழினத்தின் வழக்கங்களில் – அடையாளங்களில் இந்த ஜல்லிக்கட்டும் ஒன்று. குறிப்பாக,
தென்தமிழ் மக்களது பண்பாட்டில் ஜல்லிக்கட்டு மறுக்கமுடியாத ஒரு அங்கமாக விளங்குகிறது.
நான் நிறைய களஆய்வுக்குப் போயிருக்கின்றேன்.
ஜல்லிக்கட்டு காளைகளை வைத்திருந்தாலே அதனை மிகப்பெரிய கவுரவமாக எண்ணுகிறார்கள். ஊர்க்காரர்கள்
அனைவரும் வியந்து பேசுகிறார்கள். ஒருசிலர் அவர்களது வீட்டிற்குள் என்னை அழைத்துச்சென்று
கட்டில், பீரோ, பித்தளை குவளைகள் போன்றவற்றைக் காட்டினார்கள். அவை அனைத்துமே தங்களுடைய
காளை, ஜல்லிக்கட்டில் வாங்கிவந்ததென்று பெருமையாகச் சொன்னார்கள். உண்மையில் அந்த பொருட்களைவிட
அதற்குக் காரணமாக இருந்த காளைகளைத்தான் அவர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.
அவற்றைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்கிறார்கள். பெரும்பாலான வீடுகளில் அவர்களது
பூசை அறைகளிலோ, வரவேற்பறைகளிலோ பெரிய அளவில் பிரேம்இடப்பட்ட, தங்களுடைய மாட்டு படங்களை
வைத்திருக்கிறார்கள். அவற்றைத் தெய்வமாக வணங்குகிறார்கள்.
![]() |
Jallikaattu FB Page. |
அவன் ஒரு மாடுபிடி வீரன் என்று
பிறர் சொன்னாலே அது அவர்களுக்கு ஆயிரம் அசோக் சக்ரா விருது வாங்கினது போன்ற பெருமையை ஈட்டித்தருகின்றது. பெரிய பெரிய கிடை வைத்திருப்பவர்கள்
கட்டாயமாகக் கூடவே ஜல்லிக்கட்டுக்கென்று ஒரு
காளையையும் வளர்க்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக, மிக முக்கியமான
ஒரு ஆளாகவே, ஜல்லிக்கட்டு காளைகள், தமிழ்மக்களது குடும்பங்களில் விளங்கி வருகின்றன.
மண்ணைப்பற்றியும் மனிதர்களைப்
பற்றியும் மாட்டினைப் பற்றியும்கூட ஒன்றும் அறியாது உயர்மட்டங்களில் இருக்கிறவர்கள்
துளியும் சிந்திக்காமல் தொன்மையான ஒரு பண்பாட்டு நிகழ்வைத் தடைசெய்வது, நமக்காகதான்
அவர்கள் ஆட்சி செய்கிறார்கள் என்ற எண்ணத்திற்கே முடிவுகட்டுவதாக இருக்கிறது.
ஜல்லிக்கட்டு தடைக்குப்பின்னால்
மிகப்பெரிய சதி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 1995இல்,
தமிழகத்து மாட்டினமான புலிக்குளம் மாடுகளின் எண்ணிக்கை 90,000ஆக இருந்தது. அதுவே
2006இல் 45000ஆகக் குறைந்து, 2012இல் 21,225 மாடுகளாகக் குறைந்து விட்டது. 30 ஆண்டுகளுக்கு
முன்பு 3,00,000 ஆக இருந்த மலைமாட்டினங்கள், 2005இல் 30,000மாகவும், தற்போது வெறும்
15,147 ஆகவும் இருக்கின்றன. இதுபோன்று தமிழகத்து நாட்டு மாட்டினங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக்
குறைந்து கொண்டே செல்கின்றன. எல்லாம் அடிமாட்டு விலைக்குக் கேரளாவிற்கு உணவுக்காக ஏற்றுமதி
செய்யப்படுகின்றன. விலங்குநல அமைப்புக்கு உண்மையாகவே அக்கறை இருப்பின், தமிழகத்து செல்வங்கள்
இப்படி அடிமாட்டு விலைக்குச் செல்வதைக் குறைக்கலாம். ஆனா, பீட்டா உள்ளிட்ட அமைப்புகளுக்கு
இதைப் பற்றிய பிரக்ஞையே கிடையாது. பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டுகளாகத்தான் அவர்கள்
செயல்படுகிறார்கள்.
உள்ளூர் மாட்டினங்களை மொத்தமாக அழித்துவிட்டு, வெளிநாடுகளில்
இருந்து அதிகளவில் பால்தரும் மாட்டினங்களை இறக்குமதி செய்வதற்காகதான், உந்நாட்டு மாட்டினங்கள்
தொடர்பான பண்பாட்டு நடவடிக்கைகள் அனைத்திற்கும் முட்டுக்கட்டை போடுவதாகச் சிலர் சொல்கிறார்கள்.
உண்மையில் நாட்டுமாட்டினங்கள் மிகக்குறைவான பாலைத் தருவது உண்மைதான். ஆனால் உலகிலேயே
அதிக சத்துள்ள பாலாக அவை விளங்குகின்றன. இறக்குமதி செய்யப்படுகின்ற மாட்டினங்கள் அதிக
பாலைத்தந்தாலும் சத்தற்றதாகவும் உடலுக்குத் தீமை விளைவிப்பதாகவும் இருக்கின்றன.
உள்நாட்டு எண்ணெய் வகைகள் அனைத்தும் கொழுப்பை அதிகப்படுத்துகின்றன
என்றுகூறி, சூரியகாந்தி எண்ணெயினையும் தார் எண்ணெயினையும் பரவலாகப் பன்னாட்டு நிறுவனங்கள்
விற்பதைப்போலதான் இதையும் கருதவேண்டியதாக உள்ளது.
அரசும், நீதிமன்றங்களும் மக்களுக்காகதான்
இருக்கின்றன. இந்தியா போன்ற பல இனக்குழுக்கள் வாழும் நாட்டில் ஒவ்வொரு குழுவிற்கும்
இருக்கின்ற பண்பாட்டு மரபுகள் – மக்கள் பேணுகிற மரபுகள் பாதுகாக்கபடவேண்டும். இதற்கு
உறுதுணையாக இருக்கவேண்டிய அரசு நிறுவனங்களே அவற்றை அழித்தொழிக்க எண்ணுவது உண்மையிலேயே
அரசின்மீது நம்பிக்கையின்மையைதான் ஏற்படுத்தும்.
2000ஆண்டுகளாக, தமிழர்களுடைய பாரம்பரிய
விளையாட்டாக விளங்குகின்ற ஜல்லிக்கட்டினை, இன்னும் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்ய வேண்டுமோ செய்து, அதனை நடத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்பதுதான் பெரும்பான்மைத்
தமிழ்களுடைய எதிர்பார்ப்பு. இதனைமீறி, ஜல்லிக்கட்டை இல்லாமல் செய்வதுதான் சரியானதென
எண்ணுபவர்களைப் பண்பாட்டுக்குருடர்கள் என்றுதான் காலம் சொல்லும்.